பிரபாகரனின் புதல்வியின் மெய்ப்பாதுகாவலர் மலேஷியாவில் உள்ளதாக தகவல்
ஸ்ரீலங்காவின் இறுதிக் கட்டப் போரில் போது தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனின் புதல்வியான துவாராகாவிற்கு பொறுப்பாக இருந்த பெண் போராளி மலேஷியாவில் உள்ளமை கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இறுதிக்கட்டப் போரின் போது துவாரகா கொல்லப்பட்ட பின்னர் எவ்வாறு குறித்த போராளி மலேஷியாவிற்கு சென்றார் என்ற கேள்வி எழுந்துள்ளதாக சிங்கள ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்கள் அதிக எண்ணிக்கையில் இராணுவத்திடம் சரணடைந்ததாகவும் அவர்கள் பின்னர் வெளிநாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த தலைவர்கள் பாரிய அளவான பணத்தை வழங்கி, வெளிநாடுகளுக்கு தப்பிச் சென்றுள்ளதாக ஊடக செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அநேகமானவர்கள் மலேஷியாவிற்கு தப்பிச் சென்றதாகவும் அங்கிருந்து பல தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்கள் ஐரோப்பிய நாடுகளுக்கு சென்றுள்ளதாகவும் கூறப்படுகின்றது.
வட பகுதியில் இருந்து தப்பிச் சென்ற தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்களை சந்திப்பதற்காகவே கே.பி எனப்படும் குமரன் பத்மநாதன் மலேஷியாவிற்கு சென்றதாகவும் சிங்கள ஊடகங்களின் செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் மலேஷியாவிற்கு தப்பிச் சென்ற தமிழீழ விடுதலை புலிகளின் தலைவர்கள் தற்போதும் அங்கு வாழ்ந்துவருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அண்மையில் மலேஷியாவிற்கு மஹிந்த ராஜபக்ச விஜயம் மேற்கொண்ட போது அங்கு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்களுடன் தமிழீழ விடுதலை புலிகளின் செல்வாக்கு காணப்படுகின்றமை தெளிவாக புலப்படுவதாகவும் சிங்கள ஊடகங்களின் செய்திகளில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.