Breaking News

வர்த்தகர் சகீப் சுலைமானைக் கடத்தியவர் யார்?- பொலிஸார் கண்டுபிடிப்பு



பம்பலப்பிட்டி வர்த்தகர் மொஹமட் சகீப் சுலைமான் அவரது நெருங்கிய ஒருவரினால் கொலை செய்யப்பட்டுள்ளார் என பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரியவந்துள்ளது.

இவரது கொலை கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் இடம்பெற்ற ஒன்று எனவும் விசாரணைகள் மூலம் அறியப்பட்டுள்ளது.

கப்பம் பெற்றுக் கொள்ளும் நோக்கில் கடத்தப்பட்ட போது, குறித்த கடத்தல்காரர்களினால் மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் அவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கண்டறிந்துள்ளனர்.

வர்த்தகர் சகீபின் நெருங்கியவர்கள் மூலம் திட்டமிட்ட அடிப்படையில் இந்த கடத்தல் இடம்பெற்றுள்ளமை விசாரணைகளிலிருந்து கண்டறியப்பட்டுள்ளது. இவரைக் கடத்திச் சென்று மாவனல்லையிலுள்ள ஒரு இடத்தில் சிறைப்பிடித்து, அவரின் தந்தையிடம் கப்பம் பெறுவது கடத்தியவர்களின் திட்டம் எனவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இருப்பினும், கடத்தப்பட்ட சகீப் கடத்தல்காரர்களிடமிருந்து தப்பிச் செல்ல முயற்சித்த போது அவரது தலையில் தடியொன்றினால் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனாலேயே அவர் உயிரிழந்திருக்கலாம் என பொலிஸார் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.

இந்த கொலையுடன் தொடர்புடைய இருவரின் புகைப்படங்கள் பொலிஸாரினால் அடையாளம் காணப்பட்டுள்ளன. சகீப் சுலைமானின் தந்தையிடம் கப்பம் கேட்டு தொலைபேசியில் அழைப்பு விடுத்தவர்கள் இவர்கள் இருவர் என பொலிஸார் அடையாளம் கண்டுள்ளனர்.

குறித்த இரு சந்தேகநபர்களும் கேகாலையிலுள்ள ஒரு பொதுத் தொலைபேசி கூடத்திலிருந்தே சகீபின் தந்தையிடம் கப்பம் கோரியுள்ளனர். இந்த கூடத்திற்கு அருகிலுள்ள சீ.சீ.டி.வி. காட்சிகளை பரிசீலனைக்குட்படுத்தியே பொலிஸார் குறித்த சந்தேகநபர்கள் இருவரினதும் புகைப்படங்களை இனங்கண்டுள்ளனர்.

மேற்படி விசாரணைகள் பொலிஸ் மா அதிபர் புஜித விஜேசுந்தரவின் கண்காணிப்பின் கீழ் கொழும்பு மாவட்டத்துக்குப் பொறுப்பான பிரதிப் பொலிஸ் மா அதிபர் லலித் பதிநாயகவின் வழிகாட்டலில் கொழும்பு குற்றப்புலனாய்வுப் பிரிவினால் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.