அரசியல்வாதிகளுக்கு எச்சரிக்கை விடுத்துள்ள யாழ். மாணவர்கள்
லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் அரசியல் தலையீடுகளுடன் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளை நிர்வாகம் கவனிக்கத் தவறுகின்றதாக மாணவர்கள் குற்றஞ்சாட்டி யுள்ளார்கள்.
யாழ். ஊடக அமையத்தில் நேற்று நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பின் போதே அவர்கள் இதனைத் தெரிவித்தார்கள்.
லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவ மாணவிகளின் அடிப்படை கற்றல் செயற்பாடுகள் மற்றும் அடிப்படை வசதிகளை பூர்த்தி செய்யாமை குறித்து மாணவர்கள் போராட்டம் ஒன்றினை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று ஊடகவியலாளர்களுடன் தமது கல்வியில் எதிர்நோக்கும் பிரச்சினைகளையும் மாணவர்களின் எதிர்கால கற்றல் செயற்பாடுகள் குறித்தும் கவலை தெரிவித்துள்ளதுடன் நிர்வாகத்தினரின் முறைகேடுகளையும் வெளிச்சத்திற்கு கொண்டு வந்துள்ளார்கள்.
இலங்கையில் மிகவும் பிரபல்யமானதும் பாரம்பரியதுமான யாழ்ப்பாணம் லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி 1925ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தொடர்ந்தும் அவர்கள் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில்,
பல சித்த மருத்துவர்களை உருவாக்கிய தமிழில் பாரம்பரியமுடைய சித்த மருத்துவக் கல்லூரி தற்போது செயழிலந்து கிடப்பதாகவும், மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் பொய்யும் ஏமாற்றுத் தனமும் இருப்பதாகவும் சுட்டிக்காட்டினார்கள்.
5வருட கற்கை நெறிக்காக தெரிவு செய்யப்படும் போது, லங்கா சித்த ஆயுர்வேத கல்லூரி, பட்டம் பெற்றுத் தருவதாகவும், அரச துறையில் வைத்தியராக பணிபுரிய முடியுமெனவும் நம்பிக்கை அளித்து இந்த கற்கைநெறிக்கு எவ்வித கட்டணமும் கட்டத் தேவையில்லை என பொய்யான வாக்குறுதி அளித்து பாடநெறியில் இணைத்துக் கொண்டுள்ளனர்.
அதன் பின்னர் சரியான முறையில் விதிமுறைகளை நடைமுறைபடுத்தவில்லை. பாடநெறிக்கான அங்கீகாரம், அரசதுறையில் வேலைவாய்ப்பு என்பன பொய்யான வாக்குறுதியாகவே இருக்கின்றது. மாணவர்களின் பிரச்சினைகளுக்கான தீர்வுகளை கேட்டால் மாணவர்கள் பழிவாங்கப்படுகின்றார்கள்.
மாணவர்களின் பிரச்சினைகளை வடமாகாண சுதேச மருத்துவ பணிப்பாளர் சியாமா தனக்கும் இந்த விடயங்களுக்கும் பொறுப்பு இல்லை என தட்டிக்கழிக்கின்றார்.
வடமாகாண சபை ஆரம்பிக்கப்பட்டதன் பின்னர் வடமாகாண சபையின் கீழ் சுதேச மருத்துவ திணைக்களம் இயங்கி வருகின்றது. வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கத்திடமும் எமது பிரச்சினைகளை எடுத்துக் கூறியபோதும், அவர் இதுவரையில் எந்தவித பதிலும் அளிக்காது தட்டிக் கழித்துக்கொண்டே இருக்கின்றார்.
இந்த நிலையில், வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனை சந்தித்து கலந்துரையாடிய போது ஒரு மாத காலத்திற்குள் பிரச்சினைக்கான தீர்வினைப் பெற்றுத்தருவதாக கூறினார். அவரும் ஒவ்வொரு மாத காலத்தினைக் கூறி தள்ளிப் போட்டுக்கொண்டே இருக்கின்றார்.
சித்த மருத்துவ துறையில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு உரிய அடிப்படை வசதிகள் நிறைவேற்றப்படவில்லை.
மேலும் சுன்னாகம் மின்சார நிலையத்திற்கு அருகாமையில் கல்லூரி இருப்பதனால் பல அசௌகரியங்களை எதிர்நோக்குவதுடன், மருத்துவ வசதிகள், வெளிமாவட்டத்தில் உள்ள மாணவர்களுக்கான விடுதி வசதிகள், நிர்வாகம் சீரின்மை, நிர்வாகத்தின் அசமந்த போக்கு, அதிபரின் தொலைபேசி இயங்காமை, கல்லூரியின் தொலைபேசி இயங்காமை, கற்றல் செயற்பாடுகளுக்கான ஆசிரியர்கள் சமூகமளிக்காமை உள்ளிட்ட பல்வேறுபட்ட பிரச்சினைகளை தாம் எதிர்நோக்குவதாகவும் மாணவர்கள் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.
மின்சார சபைக்கு அருகாமையில் இருப்பதனால் தமது கல்லூரியை வேறு இடத்திற்கு மாற்றுமாறு கோருவதுடன், ஆயுர்வேத மருத்துவ கல்லூரியில் கற்கும் மாணவர்களின் அடிப்படை பிரச்சினைகளுக்கு தீர்வு தருமாறும் கோரிக்கை விடுத்துள்ளார்கள்.
வடமாகாண சபையின் பல உறுப்பினர்களிடம் பிரச்சினைகளை எடுத்துக் கூறிய போதும், தமது பிரச்சினைகளை கண்டுகொள்ளவில்லை என்றும் தேர்தல் காலங்களில் மட்டும் மக்கள் பிரதிநிதிகள் எனக் கூறிக்கொண்டு வாக்குகளை பெறுவதற்கு பல வாக்குறுதிகளை தருகின்றார்கள்.
மக்களின் வரிப்பணத்தினைப் பெறும் வடமாகாண சபை வழங்கும் சம்பளத்தினைப்பெற்றுக்கொண்டு அங்கு கல்வி கற்கும் மாணவர்களின் கற்றல் செயற்பாடுகளில் கல்லூரி நிர்வாகம் பொறுப்பு இல்லாமல் செயற்படுவதாகவும் பல தடவைகள் பொலிஸ் நிலையத்திற்கு சென்று தமது பிரச்சினைகளை தீர்த்துக்கொண்டதாகவும் மாணவர்கள் இதன் போது மாணவர்கள் சுட்டிக் காட்டினார்கள்.
எனவே, லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்களின் பிரச்சினைகளையும் கல்லூரி நிர்வாகத்தின் அசமந்த போக்கு மற்றும் அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தருமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
தமது கோரிக்கைகளை ஏற்றுக்கொள்ளாத வடமாகாண சபை மற்றும் வடமாகாண சுதேச மருத்துவ திணைக்களம், வடமாகாண சுகாதார அமைச்சர் ப.சத்தியலிங்கம் ஆகியோரின் செயற்பாடுகளுக்கும் பொது மக்களுக்கும் பதிலளிக்க வேண்டும்.
யாழில் உள்ள அரசியல் தலைவர்கள் மாணவர்களின் பிரச்சினைகளை சற்று மனதிற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் அவ்வாறு மேற்கொள்ளாவிடின், வடமாகாண சபையினை முற்றுகையிட்டு போராட்டம் மேற்கொள்ளவுள்ளதாகவம், லங்கா சித்த ஆயுர்வேத மருத்துவக் கல்லூரி மாணவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.