Breaking News

விக்கியின் இனவாதக் கருத்துக்களை அரசாங்கம் கண்டுகொள்ளவில்லை – கூட்டு எதிரணி குற்றச்சாட்டு



வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் அண்மையில் வெளியிட்ட இனவாதக் கருத்துக்களுக்கு எதிராக சிறிலங்கா அரசாங்கம் எந்த நடவடிக்கையையும் எடுக்கவில்லை என்று, கூட்டு எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச கண்டனம் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட அவர், “பிரிவினைவாதக் கருத்துக்களை பரப்ப அரசாங்கம் அனுமதி அளித்துள்ளது என்றும், இதற்காக அரசாங்கத்துக்கு எதிராக வரும் ஒக்ரோபர் 8ஆம் திகதி மகிந்த ராஜபக்ச தலைமையில் இரத்தினபுரியில் பேரணி நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

இந்த செய்தியாளர் சந்திப்பில் கருத்து வெளியிட்ட நாடாளுமன்ற உறுப்பினர் பவித்ரா வன்னியாராச்சி, ‘விக்னேஸ்வரன் கிளர்ச்சியைத் தூண்ட முயற்சிக்கிறார்’ என்று குறிப்பிட்டார்.

அதேவேளை, ‘இதுபோன்ற கருத்தை முன்னை அரசாங்கத்தின் காலத்தில் அவர் வெளியிட்டிருக்க முடியாது’ என்று முன்னாள் அமைச்சர் ஜி.எல்.பீரிஸ் இந்த செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.