Breaking News

காஷ்மீரை சுடுகாடாக மாற்றுவோம்:ஹிஸ்புல் முஜாஹிதீன் தலைவன் மிரட்டல்

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில கடந்த ஜூலை மாதம் 8-ந்தேதி ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பை சேர்ந்த பயங்கரவாதி புர்கான் வானி இந்திய பாதுகாப்புப் படையினால் சுட்டுக்கொல்லப்பட்டான். இதையடுத்து அங்கு வன்முறை போராட்டங்கள் வெடித்தன. இதில் 60க்கும் மேற்பட்டோர் பலியானார்கள். 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர். சுமார் இரண்டு மாதம் ஆகியும் அம்மாநிலத்தில் இயல்பு நிலை திரும்பவில்லை.

காஷ்மீரில் அமைதியான முறையில் தீர்வு காண நினைக்கும் இந்திய அரசின் முயற்சிகளை தடுக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை அங்கு அனுப்புவோம் என்று ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பின் தலைவர் சயத் சலாவுதின் மிரட்டல் விடுத்துள்ளான்.

காஷ்மீரில் நடந்துவரும் பிரச்சனைகளுக்கு அமைதியான முறையில் தீர்வு என்பதற்கு இடமே கிடையாது. சண்டையின் மூலம் தான் இதற்கு தீர்வு வரும். சுமூக தீர்வை நாடும் முயற்சியை குலைக்க தற்கொலைப்படை தீவிரவாதிகளை காஷ்மீருக்கு அனுப்புவோம். இந்திய ராணுவத்திற்கு எதிராக தாக்குதல் நடத்தி அப்பகுதியை சுடுகாடாக மாற்றுவோம் என்றும் சயத் சலாவுதின் தெரிவித்துள்ளான்.

போராட்டக்காரர்களுடன் பேச்சுவார்த்தை நடத்த பாராளுமன்ற பிரதிநிதிகள்குழு இன்று காஷ்மீர் சென்றுள்ள நிலையில், பாகிஸ்தானின் மிக மோசமான தீவிரவாத இயக்கமான ஹிஸ்புல் முஜாஹிதீன் அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.