வலி.வடக்கில் 1000 ஏக்கர் காணிகளைக் கோருகிறது இராணுவம்
தேசிய பாதுகாப்புத் தேவைகளுக்காக வலிகாமம் வடக்கில் 1000 ஏக்கர் காணிகளை வைத்திருப்பதற்கு அனுமதி அளிக்குமாறு காணி ஆணையாளரிடம் சிறிலங்கா இராணுவம் கோரியுள்ளது. யாழ். மாவட்ட அரச அதிபர் நா.வேதநாயகன் இந்தத் தகவலை வெளியிட்டுள்ளார்.
சிறிலங்கா இராணுவத்தினர் வசமுள்ள 4000 ஏக்கர் காணிகளிலேயே, இந்த 1000 ஏக்கர் காணிகளும் உள்ளடங்கியுள்ளது.
அதேவேளை, வலி.வடக்கில் சிறிலங்கா படையினர் வசமுள்ள பொதுமக்களின் 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணங்கியுள்ளனர்.
இடம்பெயர்ந்த மக்களின் மீள்குடியமர்வைத் துரிதப்படுத்துவதற்கு, 1500 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு தாம் விடுத்த கோரிக்கையை ஏற்றே, 700 ஏக்கர் காணிகளை விடுவிக்க இணங்கியுள்ளதாகவும், யாழ். மாவட்ட அரச அதிபர் தெரிவித்துள்ளார்.
மாவிட்டபுரம், கீரிமலை, காங்கேசன்துறை ஆகிய இடங்களிலேயே இந்தக் காணிகள் அமைந்துள்ளன.