பிரபாகரன் சிறந்த தலைவர் என்பதை இராணுவம் ஏற்றுக்கொண்டுள்ளது!
வன்னியில் போரை முன்னின்று நடாத்திய இராணுவத் தளபதிகளில் மேஜர் ஜெனரல் கமால் குணரத்னவும் ஒருவர். அவர் இப்போது,’பிரபாகரன் அவர்கள் உயர்ந்த பட்ச ஒழுக்கம் கொண்டவர். சேகரிக்கப்பட்ட அவர் தொடர்பான பத்தாயிரம் புகைப்படங்களில் எந்த ஒரு படத்திலேனும் மதுபானக் குவளையுடன் அவர் காணப்படவில்லை.
பெண் போராளிகளை அவர் தவறாகப் பயன்படுத்தியமைக்கான எந்தவித சான்றாதாரங்களும் இல்லை” என்று தெரிவித்திருக்கிறார்.
தமிழ்மக்கள் தங்களது தேசியத் தலைவராக ஏற்றுக்கொண்ட பிரபாகரன் அவர்களைச் சிறந்த தலைவர் என்று காலந் தாழ்த்தியேனும் இலங்கை இராணுவம் ஏற்றுக்கொண்டிருக்கிறது என்று வடக்கு கூட்டுறவு அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு தொடர்பாகப் பாடசாலை மாணவர்களிடையே நடாத்தப்பட்ட ஓவியப் போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கான பரிசளிப்பு நிகழ்ச்சி நேற்று புதன்கிழமை கிளிநொச்சி கூட்டுறவுக் கலாசார மண்டபத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் பிரதம விருந்தினராகக் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அமைச்சர் பொ.ஐங்கரநேசன் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்,
கூட்டுறவு தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்தி, பாடசாலைகளில் மாணவ கூட்டுறவு அமைப்புகளைத் தோற்றுவிக்கும் நோக்கிலேயே கூட்டுறவுத் திணைக்களம் மாணவர்களிடையே ஓவியப்போட்டிகளை நடாத்திப் பரிசுகளை வழங்கி வருகிறது.
வடமாகாணத்தில் ஆயிரக்கணக்கான பாடசாலைகள் இருந்தும் 43 பாடசாலைகளில் மட்டுமே மாணவக் கூட்டுறவு அமைப்புகள் இயங்கி வருகின்றன.
மாணவர்கள் ஆர்வத்தோடு கூட்டுறவு அமைப்புகளில் பங்கேற்க முன்வர வேண்டும். இன்று தலைவர்கள் என்று சொல்லத்தக்க வகையில் எங்களிடையே அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மாத்திரமே உள்ளார்கள்.
கட்சி பேதங்களைக் கடந்து தமிழ் மக்களை ஒன்றிணைக்கக்கூடிய, இவர் சொன்னால் எல்லோரும் கேட்பார்கள் என்று அடையாளப்படுத்தக்கூடிய தேசியத் தலைமைத்துவம் இன்று எங்களிடையே இல்லை.
எமது முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் அவர்களைப் பெரும்பாலான தமிழ்மக்கள் தங்களது தலைவராக ஏற்றுக்கொண்டுள்ளனர்.
அவரது ஆன்மீகப் போக்கு,நேர்மை, அழுத்தங்களுக்கு அடிபணியாமல் தமிழ்மக்களது பிரச்சினைகளுக்காக ஓங்கி ஒலிக்கும் அவரது குரல் அவரை இன்று நல்லதொரு தலைவராக அடையாளப்படுத்தியுள்ளது.
இன்றைய மாணவர்களில் இருந்துதான் நாளைய தலைவர்கள் உருவாக வேண்டும். அதற்கு கூட்டுறவு கைகொடுக்கும். கூட்டுறவு மாணவர்களிடையே அடுத்தவர்களுக்காக உழைக்கும் நல்மனப்பாங்கை உருவாக்கும்.
தலைமைத்துவப் பண்புகளை வளர்த்து எதிர்காலத்தில் சிறந்த குடும்பத் தலைவராக, சமுதாயத்தை வழிநடத்தும் நல்லதொரு தலைவராக ஏற்றம் காண வழிசமைக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.
கூட்டுறவு ஆணையாளர் மதுமதி வசந்தகுமார் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்ச்சியில் கூட்டுறவு அபிவிருத்தி உதவி ஆணையாளர்கள் பொ.மோகன்,கனகம்மா நல்லதம்பி, உ.சுபசிங்க, கு.இரவீந்திரநாதன், அ.செபமாலை ஆகியோரும் கலந்துகொண்டிருந்தார்கள்.