விச ஊசி ஏற்றப்படவில்லை வைத்தியர்களின் கருத்துக்கு முன்னாள் போராளிகள் அதிருப்தி
புனர்வாழ்வின் போது தமக்கு விச ஊசி ஏற்றப்பட வில்லையென வைத்தியர்கள் தெரிவித்து ள்ளமையை ஏற்றுக்கொள்ள முடியாது என முன்னாள் போராளிகள் தெரிவித்துள்ளனர்.
இதனால் உள்நாட்டு வைத்திய பரிசோதனையில் தமக்கு நம்பிக்கையில்லையெனவும் முன்னாள் போரளிகள் தெரிவித்துள்ளனர்.
2009 ஆம் ஆண்டு இறுதிக்கட்ட யுத்ததின் பின்னர் ஸ்ரீலங்கா இராணுவத்தினரிடம் சரணடைந்த தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளிகள் நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மர்ம்மான முறையில் உயிரிழந்துள்ளதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதன் கடந்த ஜூலை மாதம் 7 ஆம் திகதி நாடாளுமன்றத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த நிலையில் பொறுப்புக்கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான பொறிமுறைகள் தொடர்பில் மக்களின் கருத்துக்களை அறிந்துவரும் மனோரி முத்தெட்டுவேகம தலைமையிலான செயலணி முல்லைத்தீவு உட்டுசுட்டான் பகுதியில் நடாத்திய அமர்வில் கலந்துகொண்டு முன்னாள் போராளியொருவரும் தமக்கு புனர்வாழ்வு முகாம்களில் பலவந்தமாக இராணுவத்தினரால் விச ஊசி போடப்பட்டதாக முறையிட்டிருந்தார்
எனினும் இந்தத் தகவலை சிறிலங்கா இராணுவமும் அரசாங்கமும் முழுமையாக மறுதலித்த போதிலும் முன்னாள் போராளிகள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் மத்தியில் மாத்திரமன்றி தமிழ் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் தோற்றுவித்திருந்தது.
இதனையடுத்து முன்னாள் போராளிகளுக்கு விச ஊசி ஏற்றப்பட்டதாக தெரிவிக்கப்படும் கருத்து தொடர்பில் இரண்டாம் கட்ட மருத்துவ பரிசோதனைகள் இன்று வடமாகாணத்தின் ஐந்து மாவட்டங்களிலும் இடம்பெற்று வருகின்றன.
இந்த நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்ற மருத்துவ பரிசோதனையின் போதே விச ஊசி ஏற்றப்படவில்லையென வைத்தியர்கள் தமக்கு தெரிவித்தாக முன்னாள் போராளிகள் தெரிவித்தனர்.
இதனால் உள்நாட்டு வைத்தியர்களினால் மேற்கொள்ளப்படும் வைத்திய பரிசோதனைகளில் தமக்கு நம்பிக்கையில்லையென தெரிவித்த முன்னாள் போராளிகள். வைத்திய பரிசோதனையில் கலந்து கொள்வதில் அச்சம் வெளியிட்டுள்ளனர்.
இதேவேளை, விச ஊசி விவகாரம் தொடர்பில் வடமாகாண சுகாதார அமைச்சின் ஏற்பாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை 2ஆம் திகதி முதல் கட்டமாக முன்னாள் போராளிகளுக்கான மருத்துவ பரிசோதனைகள் இடம்பெற்றன.
அதில் யாழ் மாவட்டத்தில் 09 பேரும், கிளிநொச்சி மாவட்டத்தில் 07 பேரும், முல்லைத்தீவு மாவட்டத்தில் 07 பேரும், வவுனியா மாவட்டத்தில் 03 பேருமாக 26 பேர் மருத்துவ பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
எனினும் மன்னார் மாவட்டத்தில் எவரும் மருத்துவ பரிசோதனையில் பங்கேற்கவில்லை