உண்ணாவிரதத்தில் குதித்தனர் பரவிப்பாஞ்சான் மக்கள்
இராணுவத்தின் பிடியிலுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கிளிநொச்சி பரவிப்பாஞ்சான் மக்கள் முன்னெடுத்து வந்த கவனயீர்ப்பு போராட்டம் வெற்றியளிக்காத நிலையில், இன்று (புதன்கிழமை) காலை முதல் உண்ணாவிரத போராட்டத்தை ஆரம்பித்துள்ளனர்.
தமது காணிகளை முழுமையாக விடுவிக்குமாறு வலியுறுத்தி இப்பிரதேச மக்கள் கடந்த 6 தினங்களாக கவனயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்ததோடு, அங்குள்ள இராணுவ முகாமுக்கு முன்னால் நேற்று முதல் கொட்டகை அமைத்து தங்கியுள்ளனர்.
எனினும், அரசியல்வாதிகளோ அரச அதிகாரிகளோ தமக்கு எவ்வித சாதகமான பதிலையும் வழங்கவில்லையென தெரிவித்துள்ள பரவிப்பாஞ்சான் மக்கள், தமக்கு உரிய தீர்வு கிடைக்கும்வரை இப் போராட்டத்தை கைவிடப் போவதில்லையென தெரிவித்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் குழந்தைகள் வயோதிபர்கள் என அனைவரும் ஈடுபட்டுள்ள நிலையில், என்ன நடந்தாலும் தமது காணிகள் விடுவிக்கப்படும்வரை உண்ணாவிரத போராட்டத்தை கைவிடப் போவதில்லையென பரவிப்பாஞ்சான் மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.