Breaking News

7வது மட்டுமே படித்த சொகுசு பேரூந்துகளின் அரசன் -காணொளி

வெறும் 7வது மட்டுமே படித்த KPN நிறுவனர் -
வியக்க வைக்கும் இவரின் வரலாற்றை காணொளி வடிவில் இணைத்துள்ளோம்.

நடராஜன் தனது 7ம் வகுப்பு அறிவுடன் ஆரம்பித்த போக்குவரத்து சேவை தற்போது 210 பெஸ்களுக்கு சொந்தக்காரராகவும் தமிழகத்திலிருந்து எல்லா மாநிலங்களுக்குமான பேரூந்து சேவையினையம் செய்துவருகின்றார்.




“உழைக்கவும் அன்பு செலுத்தவும் தெரிந்து கொண்டால், இந்த உலகத்தில் மாண்புமிகுந்த வாழ்வு வாழலாம்!” என்பதற்கு உதாரணமாக இருக்கக்கூடியவர். ஆர்வத்துடன் ஏழைகளுக்கு நற்பணி ஆற்றும் அன்பு எங்கெங்கு உள்ளதோ, அங்கெல்லாம் இறைவன் இருக்கிறான் என ஆன்மீக பணியில் தனதை இணைத்துக் கொண்டு இன்புற்று மகிழக்கூடியவர்.

வாழ்க்கையை அது வரும்
விதத்தில் ஏற்று
பிறகு அதை உன் முயற்சியின் மூலம்
விரும்பும் விதத்தில் மாற்று

என்பதற்கேற்ப தான் சார்ந்த தொழிலில் பெரும் சாதிப்பை நிகழ்த்தி காட்டியிருப்பேன்.

நாலரை ஏக்கர் நிலம் மட்டுமே கொண்டே சாதாரண விவசாய பெருமகனாருக்கு மகனாக பிறந்து தான் கொண்ட இலக்கை அடைவதற்காக ரேசன் கடையில் வேலை பார்த்தும், அரிசி வாங்கி றும் தன் ஆரம்ப கால வாழ்க்கையை நகர்த்தி சாதித்திருப்பவர்,

“அன்புள்ள இதயம் இதயத்தின் ஊற்று: அதைச் சுற்றியுள்ளவர்களின் முகங்களெல்லாம் புன்னகையுடன் விளங்கும்” என்று சொல்வார்களே அப்படியாய் குடும்பத்தினரையும் (மனைவி சிவபாக்கியம், மகன் – திரு. ராஜேஸ் – சுமதி, மகள் புனிதா – பாலாஜி) நிர்வாகத்தில் பணி புரிபவர்களையும் நாளும் மகிழ்ச்சியுடன் வளர்ச்சியில் பங்கெடுத்துக் கொள்ள வைத்திருப்பவர்.

தமிழ்நாடு ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தின் சேர்மனாக இருக்கக் கூடியவர். மேலும் இன்பத்தின் இரகசியம் நாம் விரும்புவதை செய்வது மட்டும் அல்ல, நாம் செய்வதை பிறர் விரும்புவதிலும் அடங்கி இருக்கிறது என விருப்பத்துடன் எந்த பணியையும் சிறப்புடன் செய்து பாராட்டுகள் பெற்று வருபவருமான K.P.N. டிராவல்ஸ் இண்டியா லிமிடெட், K.P.N. ஸ்பீடு பார்சல் சர்வீஸஃ பிரைவேட் லிமிடெட், K.P.N. ப்யூல்ஸ் உள்ளிட்ட நிறுவனங்களின் நிர்வாக இயக்குனர் திரு. K.P.N. நடராஜன், அவர்களை நாம் நேர்முகத்திற்காக சந்தித்தோம்.

ஒரு நேர்மையான போலீஸ் அதிகாரியாக நீங்கள் வரவேண்டும் என்பது தானே உங்கள் தந்தையின் கனவு, அதை தகர்த்துவிட்டு எப்படி டிராவல்ஸ் தொழிலுக்கு வந்தீர்கள்?

விவசாய குடும்பத்தில் ஒரு அண்ணன், ஒரு சகோதரியுடன் K. பொன்மலைக் கவுண்டர் பழனியம்மாள் தம்பதியினருக்கு மகனாக பிறந்தேன். அப்பாவுக்கு பூர்வீகம் திருச்செங்கோடு அம்மாபாளையம் தான். காலப்போக்கில் இடம் பெயர்ந்து சேலம் கொண்டலாம்பட்டி புத்தூரில் பெற்றோர்கள் குடியமர்ந்த போதுதான் நான் பிறந்தேன். பெரிய அளவு படிக்க வேண்டும். பெரிய வேலையை தேடிக் கொள்ள வேண்டும் என்கிற எண்ணமெல்லாம் சிறு வயதிலிருந்தே எனக்குள் எழவில்லை. 

என் ஆசையெல்லாம் வேறு விதமாக இருந்து, படிக்கிற காலத்தில் பள்ளிக்கு சென்றதை விட பெற்றோர்க்குத் தெரியாமல் கொண்டலாம்பட்டி பேருந்து நிலையத்திற்கு சென்று பேருந்துகள் வந்து போவதை கண்ணிமைக்காமல் பார்த்து வியந்து கொண்டு இருப்பேன். ஒருசில நாள் பள்ளிக்கு போகாமல் கற்பனையில் பிரமிப்புடன் மூழ்கியிருப்பேன். ஆனால் என் அப்பா நான் ஒரு சிறந்த நேர்மையான போலீஸ் அதிகாரியாக வரவேண்டும் என பெரிதும் ஆசைப்பட்டார். இருப்பினும் என் எண்ணம் எல்லாம் மோட்டார் தொழிலை சுற்றியே இருந்ததால் அவரின் ஆசையை நிறைவேற்ற முடியாமல் போனது.

ஏழாவது வகுப்புடன் பள்ளி படிப்பை முடித்துக் கொண்டேன். “இன்றைக்கு படிக்காமல் போனதைப் பற்றி நினைத்து வருத்தப்படுகிறேன். படிப்பை நிறுத்திய சமயத்தில் அன்றைக்கு அரசாங்கம் தனியாருக்கு ரேசன் கடை நடத்த உரிமம் தந்தது. ஒரு கடைக்கு உரிமம் பெற்று நானும் அண்ணாவும் “திரு. நல்லாக்கவுண்டர்” கடையை ஒன்றரை வருடங்கள் மிகவும் நேர்மையுடன் மக்களுக்கு தேவையான உணவுப் பொருட்களை அப்போதும் கூட நான் கடையில் வேலை பார்த்துக் கொண்டே தெரிந்தவர்கள், உறவினர்கள் இவர்களை எல்லாம் ஒன்று சேர்த்து சுற்றுலா அழைத்துச் செல்வேன்.

கடையில் வேலை செய்தேன் என்பது சும்மா ஒரு கடமைக்காக தான் இருந்தது. என் எண்ணமெல்லாம் மோட்டார் தொழிலை சுற்றியே இருந்தது. டூர் சேர்த்து பலரையும் அழைத்துச் சென்றதின் பலன் எனக்குள் அந்த தொழிலின் மீது மேலும் ஆர்வத்தை ஏற்படுத்தியது.

உங்கள் ஆர்வத்திற்கு சரியான வாய்ப்பு எப்போது கிடைத்தது?

என் அண்ணாவுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டது. அப்போது அவரின் மாமனார் (திரு. செல்லப்ப கவுண்டர்) இரயில்வே துறையில் இரயில் இன்ஜின் டிரைவர் பணியில் இருந்தார். அவர் லாரி ஒன்றை வைத்து இயக்கிக் கொண்டும் இருந்தார். அப்போது நாம் எல்லோருமாக ஒன்று சேர்ந்து ஒரு பேருந்து வாங்கலாம் என்ற முடிவை எடுத்தோம். உடனே பேருந்து ஒன்றை வாங்கினோம். அதை “வெங்கடேஸ்வரா” என்கிற பெயரில் அதனை இயக்க ஆரம்பித்தோம். ஆம்னி பேருந்து என்றாலே அது டூருக்கு மட்டும்தான் என்று இருந்த சமயம். அப்போது பேருந்து வசதியும் இல்லாத நாள் மற்றும் இருபது நாள் வாடகை ஏதுமின்றி அப்படியே நின்று கொண்டு இருக்கும். 

எதிர்பார்த்த அளவு பேருந்து ஓட்டம் இல்லை. காரணம் வழித்தட பேருந்துகளுக்கு உள்ள உதவி பேருந்துகள் (Spare Bus) ஒரு உரிமையாளருக்கு வீதம் அதிக அளவில் இருந்ததால் எங்களின் ஆம்னி பேருந்து ஓட்டம் இல்லாமல் போனது. இந்நிலையில் சிந்தித்து வேறு விதமாக சேலத்தில் இருந்து குறைவான பயணிகளை ஏற்றுக் கொண்டு கோவை வந்தோம். மீண்டும் கோவையில் இருந்து சேலத்திற்கு பயணிகள் இல்லாத பேருந்தை எப்படி ஓட்டி செல்வது என்று இரயில் நிலையத்திற்கு அருகாமையில் நிறுத்திக் கொண்டு பயணிகளை சேலத்திற்கு அழைத்தோம். பலர் பெங்களூருக்கு வருமா என்றுதான் கேட்டார்கள் அங்கிருந்தவர்களின் அறிவுரையில் பெங்களூருக்கு இயக்க ஆரம்பித்தோம். மாற்றம் வர ஆரம்பித்தது. சேலத்தில் இருந்து பெங்களூர், பெங்களூரிலிருந்து கோவை, சேலம் என மாற்றி மாற்றி இயக்க ஆரம்பித்தோம். மாற்றத்தில் ஏற்றம் வந்தது. ஆம்! ஒரு பேருந்தை மட்டும் இயக்குதல் சரியாகப் படாதபோது “திருச்செங்கோடு டிரான்ஸ்போர்ட்” என்ற பெயரில் நடத்திய திருவாளர் ஒருவருடன் இணைந்து கோவை டூ பெங்களூருக்கு தினந்தோறும் இயக்க ஆரம்பித்தோம்.

K.P.N டிராவல்ஸ் எப்போது உருவானது?

ஒரு காலகட்டத்தில் “வெங்கடேஸ்வரா டிரான்போர்ட்” நிறுவனத்தினரிடம் இருந்து வெளிவந்து நானும் அண்ணா நல்லாக் கவுண்டரும் சேர்ந்து தனியாக “சிவகுமார் பஸ் சர்வீஸ்” என்ற பெயரில் பேருந்தை மதுரை – பெங்களூர் வழிதடத்தில் இயக்க ஆரம்பித்தோம். இந்நிலை எனக்கு திருமணம் நடைபெறும் வரை நீடித்தது.

ஓர் அளவு வளர்ச்சியை நோக்கி சென்றோம். ஆனாலும் எனக்கு சுதந்திரமாக செயல்பட முடியவில்லையே என்கிற கவலை இருந்து கொண்டே இருந்தது. என்னுடைய இலக்கு நோக்கிய பயணத்திற்கு இது தடையாக இருந்ததால், இனியும் தடையை கண்டு சும்மா இருத்தல் கூடாது என முடிவெடுத்து 1972-ல் தனிமனிதனாக வெளி வந்தேன். “K.P.N. டிராவல்ஸ்” என்ற பெயரில் தனி பஸ் சர்வீசை துவக்கினேன்.

“K.P.N. டிராவல்ஸ்” உருவாக்கியபோது பொருளாதாரத்தில் உங்களின் நிலை?

அடுத்தவர் உதவியை எதிர்நோக்கிய நிலைதான். காரணம் நானும் அண்ணாரும் சேர்ந்து செயல்பட்டபோது சில ரூட் வண்டிகளால் பெருத்த ஏமாற்றம் அடைந்து நிறைய இழப்புகளை சந்தித்தோம். அந்த இழப்புகளை சரி செய்து ஓரளவு நிறைவானபோது நான் தனியாக பஸ் சர்வீஸை தொடங்கி என் இலக்கை அடைய ஆசைப்பட்டேன். எனக்கு அன்று ஆதரவு எங்கிருந்தும் கிடைக்கப் பெறவில்லை. அப்பாவிடம் சென்று முறையிட்டேன். நான் இருக்கிற விவசாய வருமானத்தில் இருந்து என்ன பெரிதாக தந்துவிடமுடியும். ஆதலால் தனியாக செய்யும் எண்ணத்தை விட்டுவிடு என்று கூறிவிட்டார். நீங்கள் தராவிட்டாலும் பரவாயில்லை. கடனாக ரூ. 5000ம் யாரிடமேனும் பெற்றுத் தாருங்கள் என்றேன். பெற்றுத் தந்தார். என் மனைவி சிவபாக்கியத்தின் நகைகளை எல்லாம் விற்றேன். இப்படிக் கிடைக்கப் பெற்ற பணத்தில் இருந்து தான் எனது “K.P.N. டிராவல்ஸ்” பயணம் தொடங்கியது.

தனியாக வந்த புதிதில் நீங்கள் சந்தித்த இடர்பாடுகளை எப்படி உங்களுக்கு சாதகமாக்கினீர்கள்?

1970-ல் திடீரென அரசாங்கம் தமிழகத்தில் இயங்கும ஆம்னி பஸ்கள் அனைத்தையும சீஸ் செய்ய உத்தரவு பிறப்பித்தது. நான் டிரைவாக திண்டுகல்லில் பேருந்தை இயக்கிக் கொண்டு இருந்த போது தான் இந்த சம்பவம் நடைபெற்றது. உயர்நீதி மன்றத்திற்கு எல்லோருமாக சேர்ந்து இந்த வழக்கை எடுத்து சென்றோம். உயர்நீதி மன்ற நீதிபதி மாண்புமிகு திரு. ராம்பிரசாத் ராவ் அவர்கள் தான் எங்களுக்கு நல்ல தீர்ப்பை வழங்கி இந்த தொழிலுகு ஓர் புத்துயிரைத் தந்தார். ஆம்! அவர் தந்த தீர்ப்பிற்கு முன் கல்யாண விஷேசங்களுக்கும், பெரிய பெரிய கூட்டங்களுக்கும் ஓட்டிக்கொள்ளலாம். தனிப்பட்ட முறையில் பயணிகளுக்காக ஓட்டக்கூடாது என்று அரசு உத்தரவு இருந்தது. இதை மாற்றி தீர்ப்பை வழங்கினார். அந்த தீர்ப்புக்கு பின்புதான் பர்மிட் முறையில் மாற்றம் கொண்டு வரப்பட்டு ஏஜெண்டுகளை நியமித்து பயணிகளுக்காக ஆம்னி பஸ்களை இயக்க முடிந்தது.

பயணிகளின் தேவைகளை அறிந்து ஆம்னி பேருந்தில் நீங்கள் செய்த மாற்றங்கள் என்னென்ன?

டிரைவராகவும் முதலாளியாகவும் நானே இருந்து செயல்பட்டதால் பயணிகளின் தேவைகளை நன்கு உணர முடிந்தது. அதன் அடிப்படையில் நிறைய மாறுதல்களை கொண்டு வந்தோம். 1972-ல் 52 இருக்கைகளுடன் ஓரளவு லக்கரியாக (Luxury) முதல் பேருந்தை உருவாக்கினோம். அடுத்த பேருந்தை K.P.N. டிராவல்ஸ்க்காக உருவாக்கி திருநெல்வேலி டூ பெங்களூருக்கு இயக்கினோம். இந்த பேருந்தில் ரெக்சின் இருக்கைகளை மாற்றி வெல்வெட் துணி இருக்கைகளை கொண்டும் மைக்கா, இன்டீரியல் டெக்கரேசன் என பல மாற்றங்களை கொண்டுவந்தோம். நாளடைவில் வண்டிகளின் எண்ணிக்கை சிற்சில மாற்றங்களுடன் கூடிக் கொண்டே வந்தது. 1979-ல் இருக்கைகள் வரிசைக்கு மூன்று + இரண்டு என்பதை மாற்றி வரிசைக்கு இரண்டு + இரண்டு என்பதை மாற்றி சோபா இருக்கை வசதியுடன் கொண்டு வந்தோம். சீட்டின் எண்ணிக்கையை 51ல் இருந்து 40க்கு குறைத்தோ. நல்ல வரவேற்பு கிடைத்தது. 1981-ல் புஷ் பேக் வசதியுடனும், 1983-ல் வீடியோ வசதியுடனும் கூடிய பேருந்துகளை முதன் முதலாக தமிழகத்தில் உருவாக்கி அசத்தினோம்.

இருக்கைகளை குறைத்து பயணிகளுக்கு வசதிகளை அதிகரித்துக் கொடுத்த உங்களுக்கு வசதிகளை வருமானம் குறைந்திருக்குமே என்று நீங்கள் நினைக்கலாம். அதுதான் இல்லை. எங்கள் நிர்வாகத்தில் இயங்கும் பேருந்துகளுக்குள்ளேயே போட்டிகளை உருவாக்கினோம். இந்த இந்த வசதியுடன் கூடிய பேருந்துகள் இருக்கிறது. அதில் உங்களுக்கு (பயணிகளுக்கு) எது வசதியாக படுகிறதோ அதைப் பயன்படுத்திக் கொள்ளலாம் என பயணிகளுக்கு சாய்ஸ் கொடுக்க ஆரம்பித்தோம்.

மக்களின் ஆரதவு பெருகியது. எங்கள் நிறுவனத்தில் பேருந்தகளின் எண்ணிக்கையும் கூடியது 1994-ல் T.V.S. நிறுவனர் அவர்களின் பேரன் திரு. நரேஷ் அவர்களுடனும், வீல்ஸ் இந்தியா நிறுவனத்துடனும், இணைந்து கலந்து ஒரு புதிய முயற்சியில் இறங்கினோம். பயணத்தின் போது கலைப்பு கொஞ்சமும் ஏற்படாத வகையில் கார்களில் காயில் ஸ்பிரிங் உள்ளது போல் பேருந்தில் ஏர் சஸ்பென்சர் சிஸ்டம் போடாலாமே என்று முடிவெடுத்து “ஏர் பஸ்” என்று அதற்கு பெயர் கொடுத்து இயக்கி வந்தோம்.

இந்த ஏர் பஸ்ஸானது திருச்சிக்கும், சென்னைக்குமாக ஓடியது. சாலையில் செல்லும்போது இந்த மாதிரி பேருந்துகளால் என்ன பிரச்சனைகள் வரக்கூடும் என்பதை அறிந்து கொள்வதற்காக ஒரு மாத காலம் உடன் சென்று கவனித்தோம். சின்ன சின்ன பிரச்சனைகளையும் கண்டறிந்து முழு அளவு பேருந்தை பயணிகளுக்கு திருப்தி தரும் அளவு உருவாக்கினோம். இந்தியாவிலேயே முறைப்படி வெற்றியுடன் இயக்கிக் காட்டி “AIR BUS” என்ற பெயர் சூட்டி மகிழ்ந்த பெருமை K.P.N.க்கு சாரும்.

1995-ல் உதறல் (Vibration) இல்லாமல் பயணிகள் செல்வதற்கு ஏற்பாடு செய்தாயிற்று. அதே சமயம் பயணிகள் ஏன் குளுரூட்டப்பட்ட பேருந்தில் இன்னும் சொகுசாக செல்லக்கூடாது என முடிவு செய்து A/C உடன் கூடிய பேருந்தை (பலர் முன்னமே முயற்சி செய்திருந்தாலும்) வெற்றியுடன் கொண்டு வந்த பெருமையை எட்டினோம். தற்சமயம் K.P.N. டிராவல்ஸஃ நிறுவனத்தில் 140 குளிரூட்டப்பட்ட பேருந்துகள் இயங்கிக்கொண்டு இருக்கின்றன. அதற்கு பின்பு “எக்ஸ்கூடிவ்” (Excutive) என்று சொல்லக்கூடிய பேருந்து வரிசைக்கு ஒன்று + ஒன்று + என 25 இருக்கைகள் கொண்ட பேருந்துகளை உருவாக்கினோம். இப்படி நிறைய மாற்றங்களுடன் பேருந்துகளை உருவாக்கியதில் நல்ல வளர்ச்சியை நிறுவனம் எட்டியது. ஒரு பேருந்துக்கு கடனை கட்டி முடித்தவுடன் புதிய பேருந்துக்கு கடன் பெற்று அதை கட்டி முடிப்பதென்று அடுத்தடுத்து போராட்டி போராடிதான் இன்றைக்கு இந்த வளர்ச்சியை எட்ட முடிந்திருக்கிறது. வசதிகள், நேரம் தவறாமை உடனுக்குடன் குறைகளைக் களைதல் இப்படி ஒழுங்குடன் கூடிய எங்கள் செயல்பாட்டினால் இன்றைக்கு பயணிகளிடையே நன்மதிப்பைப் பெற்று வருகிறோம்.

“K.P.N ஸ்பீடு பார்சல்” நிறுவனம் உருவானதின் பின்னணி என்ன?

டிராவல்ஸ் தொழிலில் பார்சல் இன்றி பேருந்தை இயக்கி லாபம் பார்ப்பது என்பது கடினமான ஒன்று. அரசு பேருந்துக்கும் எங்களுக்கும் விதிக்கப்படுகின்ற சாலை வர அதிக வித்தியாசம் கொண்டது. அதனால் அரசின் வரிவிதிப்பை சமாளிக்க பார்சலை ஏற்றி செல்வது அவசியமானதாக இருந்தது. ஆனால் அது பயணிகளுக்கு தொந்தரவாக இருந்தது. எந்த காரணத்தாலும் பயணிகளுக்கு துன்பம் இருக்கக்கூடாது என்பதில் ஆரம்பம் முதலே கவனம் செலுத்தி வந்த எனக்கு தோன்றிய மாற்று வழிதான் K.P.N. ஸ்பீடு பார்சல் ஆகும். தற்போது பார்சலுக்கென்றே 200 லாரிகள் தனித்தனியாக இயங்கி வருகிறது. K.P.N. ஸ்பீடு பார்சல் அலுவலம் செயல்பட்டு வருகிறது. ஒரு நாளைக்கு 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பார்சல்கள் எடுக்கப்பட்டு டெலிவரி செய்யப்பட்டு வருகிறது.