Breaking News

சர்வதேச நீதிபதிகள் என்ற பேச்சுக்கே இடமில்லை- மனோ(காணொளி)

யுத்த குற்ற விசாரணையில் சர்வதேச நீதிபதிகளின்
பிரசன்னம் இருக்காது என்பதை தேசிய கலந்துரையாடல்கள், சகவாழ்வு மற்றும் அரச கரும மொழிகள் அமைச்சர் மனோ கணேசன் உறுதிப்படுத்தியுள்ளார்.

சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்புடன், யுத்த குற்ற விசாரணை இடம்பெறும் என சிலர் அச்சுறுத்தி வந்த நிலையில், கொழும்பில்   நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு உரையாற்றுகையில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

‘கடந்த காலங்களில் எமது நாடு சர்வதேசத்தினால் ஏற்றுக்கொள்ளப்படாத ஒரு நாடாக காணப்பட்டது. இன்று நிலைமை அவ்வாறு இல்லை. ஜனாதிபதியினதும், பிரதமரினதும் வழிகாட்டலின் கீழ் எமது அமைச்சரவை எமது நாட்டிற்கு நற்பெயரை ஏற்படுத்தும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளது.

எவரது அழுத்தத்திற்கும் அடிபணிந்து நாம் இதனைச் செய்யவில்லை. நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு தொடர்பிலான நடவடிக்கைகளை முன்னெடுக்கையில் சர்வதேசத்தின் அழுத்தம் காணப்படுவதாக சிலர் கூறுகின்றனர். எமக்கு எந்தவொரு அழுத்தமும் கொடுக்கப்படவில்லை.

யாருடைய அழுத்தத்திற்கும் அடிபணிய வேண்டிய தேவையில்லை. பான் கீ மூன், ஒபாமா, மோடி யார் வேண்டுமாலும் இலங்கைக்கு வரலாம் அதில் எமக்கு பிரச்சினை இல்லை. எனினும் எமக்கு வேண்டியதையே நாம் செய்வோம்.



இன்று சர்வதேச யுத்தக்குற்ற விசாரணைகள் குறித்து பேசுகின்றனர். சர்வதேச விசாரணைகள் எனும் போது சர்வதேச நீதிபதிகளின் பங்களிப்பு இருக்கும் என சிலர் எம்மை அச்சுறுத்தினர். சர்வதேச நீதிபகள் உள்ளடக்கப்படமாட்டார்கள் என ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஆகியோர் கூறினர் எனினும் சிலர் அதனை எதிர்த்து வாதிட்டனர்.

தற்போது உண்மை தெரியவந்துள்ளது. எமது பிரச்சினைகளை நாமே தீர்த்துக்கொள்வோம். எங்களுக்கு தேவையான வகையில் நாமே முடிவெடுப்போம்.’ என்றும் கூறினார்.


முக்கியமான செய்திகளை அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்