Breaking News

ஜனாதிபதியின் சர்ச்சைக்குரிய உரை ; பாராளுமன்றில் விவாதம் நடத்த கோரிக்கை



முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவை விசாரணைக்கு அழைத்தமை தொடர்பில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் அண்மையில் வெளியிடப்பட்ட கருத்து தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதமொன்று நடத்த கோரிக்கை விடுக்கப்படவுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான ஒன்றிணைந்த எதிர்கட்சியினர் சபாநாயகரிடம் இந்தக் கோரிக்கையை முன்வைக்கவுள்ளனர்.

சர்ச்சைக்குரிய எவன்காட் நிறுவன வழக்கு அண்மையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ச, முன்னாள் கடற்படை உயரதிகாரிகள் மூவர் உள்ளிட்டோர் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

இந்த வழக்கில் பிணை கிடைக்கும்வரை கோட்டாபய ராஜபக்ஷ சிறிதுநேரம் நீதிமன்ற விளக்கமறியலிலும் வைக்கப்பட்டிருந்தார்.

இந்த நிலையில் கடந்த வாரம் கொழும்பில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டிருந்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, கோட்டாபய மற்றும் முன்னாள் கடற்படை அதிகாரிகளை இவ்வாறு விசாரணைக்கு அழைத்திருந்தமை தொடர்பில் தனது அதிருப்தியை வெளியிட்டிருந்தார்.

குறித்த உரை அரசியல் களத்தில் சூடுபிடித்திருக்கும் நிலையில் அடுத்தவாரம் கூடவுள்ள பாராளுமன்றத்தில் இதுகுறித்த விவாதமொன்றை நடத்த சபாநாயகரிடம் ஒன்றிணைந்த எதிர்கட்சி கோரிக்கை விடுக்கவுள்ளது