Breaking News

வடக்கு கிழக்கு இணையாவிட்டால் கிழக்கு மாகாணம் பறிபோகும்: சம்பந்தன் எச்சரிக்கை!



வடக்கு கிழக்கு மாகாணங்கள் மீண்டும் இணைக்கப்படாவிட்டால் கிழக்கு மாகாணம் பறிபோய்விடும் என தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவரான எதிர்கட்சித் தலைவர் இரா.சம்பந்தன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதனால் தமிழ் மக்களுடன் இணைந்து வாழ முஸ்லீம் மக்கள் முன்வர வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ள சம்பந்தன் இது நிறைவேறாவிட்டால், கிழக்கு மாகாணம் தமிழ் பேசும் மக்களிடமிருந்து பறிபோவதை யாராலும் தடுக்க முடியாது போய்விடும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

ஏற்கனவே தமிழ் பேசும் மக்களின் ஏராளமான காணிகள் அபகரிக்கப்பட்டு சிங்களக் குடியேற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ள நிலையில் திருகோணமலைத் துறைமுகத்தை மையப்படுத்தி அரசாங்கம் மேற்கொள்ளத் திட்டமிட்டுள்ள பாரிய அபிவிருத்திக்காக பல்லாயிரக்கணக்கான சிங்கள மக்கள் திருகோணமலையில் குடியமர்த்தப்படவுள்ளதாகவும் சம்பந்தன் தெரிவித்துள்ளார்.

வடக்கு முஸ்லீம் சிவில் சமூகத்தின் ஏற்பாட்டில் நேற்று தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தனுடன் விசேட கலந்துரையாடலொன்று  கொழும்பிலுள்ள ஹெக்டர் கொப்பேகடுவ ஞர்கார்த்த மண்டபத்தில் இடம்பெற்றது.

இதில் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்த பல தரப்பினர் கலந்துகொண்டு வடக்கிலிருந்து இடம்பெயர்ந்த முஸ்லீம்களின் மீள்குடியேற்றம் உட்பட பல பிரச்சனைகள் தொடர்பில் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் தலைவருடன் விரிவாக ஆராய்ந்தனர்.

இதன்போது தமிழ் மக்கள் தமது உரிரிமைக்காக மேற்கொண்ட சாத்வீகப் போராட்டம் முதல் ஆயுதப் போராட்டம் வரை, முஸ்லீம்கள் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்யாது ஒதுங்கியிருந்ததையும் பகிரங்கமாக சுட்டிக்காட்டிய சம்பந்தன், அதற்காக தொடர்ந்தும் அவ்வாறு பிரிந்து செயற்பட முடியாது என்றும் தெரிவித்துள்ளார்.