Breaking News

வடமாகாண பொலிஸாருக்கு எச்சரிக்கை விடுக்கும் பிரபாகரன் படை!



வட மாகாணத்தில் சேவை செய்யும் அனைத்து தமிழ் பொலிஸ் அதிகாரிகளையும் இலக்கு வைத்து அச்சுறுத்தல் கடிதம் ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வவுனியா மற்றும் மன்னார் ஆகிய மாவட்டங்களின் சிரேஷ்ட அதிகாரிகளுக்கே இந்த கடிதம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

“பிரபாகரன் படை” என்ற பெயரில் நடத்தி செல்லப்படுகின்ற குழுவினால் இவ்வாறு இந்த கடிதங்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.

அந்த கடிதத்தில் யாழ்ப்பாண மாணவர்களின் மரணம் தொடர்பில் சட்டத்தை செயற்படுத்தும் வரையில் தமிழ் பொலிஸ் அதிகாரிகள் தற்காலிகமாக தங்கள் பதவியில் இருந்து விலக வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

வடக்கு மாகாணத்தின் பொலிஸ் அலுவலகங்கள் மற்றும் பொலிஸ் நிலையங்களில் சேவை செய்யும் தமிழ் அதிகாரிகளை வேறு பிரதேசங்களுக்கு மாற்றுமாறு குறித்த கடிதத்தில் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

அதற்காக 21 நாட்கள் கால அவகாசம் வழங்கப்படும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளதாக குறித்த சிங்கள ஊடகம் தகவல் வெளியிட்டுள்ளது.

எப்படியிருப்பினும் இந்த கடிதத்தை அனுப்பி வைத்தது யார் என்பது தொடர்பில் பொலிஸ் திணைக்களம் விசேட விசாரணைகளை ஆரம்பித்துள்ளன.

அண்மையில் யாழ் பல்கலைக்கழக மாணவர்கள் பொலிஸாரினால் சுட்டுக் கொலை செய்யப்பட்ட பின்னர் வடமாகாணத்தில் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டது. இதனை பயன்படுத்தி வடபகுதியில் மீண்டும் பதற்றம் ஏற்பட்டுள்ளதாகவும் அதன் பின்னணியில் விடுதலைப் புலிகள் உள்ளதாகவும் தென்னிலங்கை ஊடகங்கள் போலியான செய்திகளை வெளியிட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.