வடக்கு முதல்வர் பற்றி விமர்சிக்க தடை..!- கூட்டு எதிர்க்கட்சியினருக்கு நேர்ந்த அவமானம்
நாட்டில் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுத்துள்ள வடக்கு முதல்வருக்கு என்ன நடவடிக்கை அரசு எடுக்கப்போகின்றது என பாராளுமன்றத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன கேள்வி எழுப்பினார்.
இன்றைய தினம் பாராளுமன்றத்தில் உரையாற்றும் போதே அவர் இதனைத் தெரிவித்தார்.
மேலும், வடக்கு முதலமைச்சர் நாட்டின் பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் விடுக்கும் முகமாக எழுக தமிழ் பேரணியின் போது தமிழ் மக்களை ஒன்று திரட்டி உரை நிகழ்த்தியுள்ளார்.
அவரது உரையில் சிங்களவர்களை வடக்கிலிருந்து வெளியேற்ற வேண்டும், விகாரைகள் அகற்றப்படவேண்டும் சிங்களவர்கள் வடக்கில் குடியேற்றப்படக் கூடாது போன்ற தேச விரோத கருத்துகளை முன்வைத்துள்ளார்.
இதன் காரணமாக வடக்கு முதல்வர் விசாரணை செய்யப்பட வேண்டும், அவருக்கு எதிராக என்ன நடவடிக்கையினை அரசு எடுக்கப்போகின்றது? தேச விரோதியான அவர் விசாரணை செய்யப்படுவாரா? என்ற கேள்விகளை தினேஷ் குணவர்தன முன்வைத்தார்.
இந்த கேள்விகளுக்கு முகம் கொடுக்க லக்ஷமன் கிரியெல்ல முன்வந்த போது விமல் வீரவன்ச உள்ளிட்ட கூட்டு எதிர் கட்சியினர் பதில் கோரி கோஷங்களை எழுப்பினார்கள்.
இதன்போது எம்மிடம் எவரும் பயமுறுத்தி பதில் பெற்றுக்கொள்ள நினைக்க வேண்டாம் நாம் யாருக்கும் பயம் இல்லை அனைவரும் அமைதியாக இருங்கள் என அமைச்சர் லக்ஷமன் கிரியெல்ல பதில் அளித்தார்.
மேலும், பாராளுமன்றத்திற்கு வருகை தரும் போதே கூட்டு எதிர்கட்சியினர் குழப்பத்துடனேயே வருகின்றனர். சபையை குழப்புவது மட்டுமே அவர்களது நோக்கம் தற்போது வடக்கு முதல்வரின் உரை தொடர்பில் பாராளுமன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய அவசியம் இல்லை எனவும் லக்ஷமன் கிரியெல்ல தெரிவித்தார்.
சபாநாயகரும் தற்போது வடக்கு முதல்வர் தொடர்பில் விவாதிக்க எவரும் முற்பட வேண்டாம் என எச்சரிக்கை விடுத்தார்.
இதேவேளை வடமாகாண முதலமைச்சர் சீ.வி.விக்னேஸ்வரனுக்கு எதிர்ப்பு தெரிவித்து இன்று நாடாளுமன்றில் அனல்பறக்கும் விவாதங்களை நடத்துவதற்கு கூட்டு எதிர்க்கட்சி தீர்மானித்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.