பயங்கரவாதத்துக்கு எதிரான புதிய சட்டம் ‘புதிய கோப்பையில் பழைய மது’ –கூட்டமைப்பு கண்டனம்
பயங்கரவாத தடைச்சட்டத்துக்குப் பதிலாக புதிதாக உருவாக்கப்படும் பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டத்தை புதிய கோப்பையில் பழைய மது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு விமர்சித்துள்ளது.
பயங்கரவாத தடைச்சட்டத்தில் சர்ச்சைக்குரிய பல பகுதிகள் புதிய சட்டத்திலும் இடம்பெறக் கூடும் என்றும் கூட்டமைப்பு அச்சம் வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து இந்தியன் எக்ஸ்பிரசிடம் கருத்து வெளியிட்டுள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரான நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன், “ இந்த விடயங்களில் பாதுகாப்பு கட்டமைப்புகளின் செல்வாக்கு இருப்பதால், பயங்கரவாத தடைச்சட்டத்தை விடவும், புதிய சட்டம் மோசமானதாக அமையலாம் என்று குறிப்பிட்டுள்ளார்.
“பயங்கரவாத தடைச்சட்டத்துக்கு பதிலாக புதிய சட்டத்தை அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப உருவாக்குவதற்கான பரிந்துரைகளுடன் சட்ட ஆணைக்குழு அறிக்கை ஒன்றைச் சமர்ப்பித்திருந்தது.
அதனை நிராகரித்து விட்டு, சிறிலங்கா அரசாங்கம் பாதுகாப்பு கட்டமைப்புகளின் துணையுடன் புதிய சட்டத்தை வரைந்திருப்பதாக கேள்வியுற்றேன்.
இந்த விடயம் தொடர்பாக கடந்த 4ஆம் நாள் நான் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பிய போது, நீதி அமைச்சரோ அல்லது வேறெந்த அமைச்சருா பதில் அளிக்கவில்லை. குற்றவியல் நடைமுறைக் கோவை தொடர்பான எனது கேள்விக்கு மாத்திரமே நீதி அமைச்சர் பதில் அளித்தார்.
அனைத்துலக நடைமுறைகளுக்கு ஏற்ப பயங்கரவாத தடைச்சட்டம் மாற்றியமைக்கப்பட வேண்டும் என்று ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 2015 ஒக்ரோபர் 1 தீர்மானத்தில் தெளிவாக கூறப்பட்டுள்ள நிலையில், அதனை சிறிலங்கா அரசாங்கம் மீறினால் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை மீளப் பெற முடியாது போகும்.” என்றும் அவர் எச்சரித்துள்ளார்.