ஐ.நா பொதுச்செயலராகிறார் அன்ரனியோ குட்டெரெஸ்
ஐ.நாவின் புதிய பொதுச்செயலராக போர்த்துக்கல் நாட்டின் முன்னாள் பிரதமர் அன்ரனியோ குட்டெரெஸ் இன்று அதிகாரபூர்வமாகத் தெரிவு செய்யப்படவுள்ளார்.
ஐ.நா பாதுகாப்புச் சபை நாடுகள் மத்தியில் நேற்று நடத்தப்பட்ட ஆறாவது கட்ட வாக்கெடுப்பில், பாதுகாப்புச் சபையில் அங்கம் வகிக்கும் 15 நாடுகளும், அவருக்கு ஒருமித்து ஆதரவளித்ததை அடுத்தே, இன்று நடக்கவுள்ள இறுதி வாக்கெடுப்பில் அவர் தெரிவு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
இன்று காலை 10 மணியளவில் ஐ.நா தலைமையகத்தில் நடக்கும் இறுதி வாக்கெடுப்பு சம்பிரதாயபூர்வமானதாகவே இருக்கும் என்று ஐ.நா பாதுகாப்புச் சபையின் உறுப்பு நாடுகள் அறிவித்துள்ளன.
ஐ.நா பொதுச்செயலர் பான் கீ மூனின் பதவிக்காலம், இந்த ஆண்டு இறுதியுடன் முடிவடையவுள்ள நிலையிலேயே, புதிய பொதுச்செயலராக அன்ரனியோ குட்டரெஸ் தெரிவு செய்யப்படவுள்ளார்.
இவர் கடந்த 10 ஆண்டுகளாக அகதிகளுக்கான ஐ.நாவின் உயர் ஆணையராகப் பதவி வகித்து வருகிறார்.
வரும் ஜனவரி மாதம் இவர் ஐ.நா பொதுச்செயலராகப் பதவியை ஏற்றுக் கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக, இம்முறை பெண் ஒருவரே ஐ.நா பொதுச்செயலராக தெரிவு செய்யப்பட வேண்டும் என்ற கருத்து வலியுறுத்தப்பட்டு வந்த போதும், அந்த வாய்ப்பு மீண்டும் ஆண் ஒருவருக்கே வழங்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.