Breaking News

இலங்கைக்கு அதிக கரிசனை: ஐ.நா தெரிவிப்பு



பூகோள மற்றும் தேசிய அபிவிருத்தி முன்னுரிமைகளை உருவாக்குவதில், இலங்கை முக்கிய கவனம் செலுத்துவதாக, ஐக்கிய நாடுகள் தெரிவித்துள்ளது. 

அரசாங்கத்தின் சமாதானத்தைக் கட்டியெழுப்பும் முயற்சிக்கும் நல்லிணக்கத்துக்கும் ஆட்சியின் நிகழ்ச்சி நிரலுக்கும், காலநிலை மாற்றத்தின் தாக்கத்தைச் சமாளிக்கவும் உலக நியமங்களை, விழுமியங்களை வளர்த்தெடுக்கவும்,

நிலையான அபிவிருத்தி இலக்குகளை நாட்டுக்கேற்ப வகுத்துக்கொள்ளவும் சமூக மாற்றத்துக்கான வருங்கால முனைப்பாளர்களான இளைஞர்களை ஈடுபடுத்தவும், அரசாங்கம் எடுக்கும் முயற்சிகளுக்கு வழங்கும் ஆதரவை, ஐக்கிய நாடுகள், இவ்வருடம் அதிகரித்துள்ளது என, ஐக்கிய நாடுகளின் வதிவிட இணைப்பாளரும் ஐக்கிய நாடுகள் அபிவிருத்தித் திட்டத்தின் வதிவிடப் பிரதிநிதியுமான உனா மக்கலே தெரிவித்தார். 

ஐக்கிய நாடுகளின் கொழும்பிலுள்ள கட்டத்தில், “ஐ.நா தினம் 2016”ஐக் கொண்டாடும் நிகழ்விலேயே அவர், மேற்கண்டவாறு கூறினார். 

“பூகோள இலக்குகளை அடையப் பெறுவது நிதர்சனமாகியுள்ள நிலையில், நாட்டின் அபிவிருத்தி முன்னுரிமைகளை அடைய, இலங்கை மக்களுடன் நெருக்கமாக வேலை செய்வதில், நாம் மிகுந்த நாட்டம் கொண்டுள்ளோம்’ என அவர் கூறினார். 

“இலங்கை அரசாங்கத்துக்கும் மக்களுக்கும், வித்தியாசமான முறையில் உதவி வழங்குவதிலும், நிலையான சமாதானத்தை நோக்கிய பணியை ஆற்றவும் நாம் முழு ஈடுபாடு கொண்டுள்ளோம்” என அவர் கூறினார்.