Breaking News

மூன்று ஆண்டுகளில் 425 இலங்கையர்களை திருப்பி அனுப்பியது அவுஸ்ரேலியா



படகுகளில் அவுஸ்ரேலியா சென்ற 425 பேர், கடந்த மூன்று ஆண்டுகளில் சிறிலங்காவுக்குத் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று, ‘தி ஒஸ்ரேலியன்’ ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

2013ஆம் ஆண்டு செப்ரெம்பர் மாதம் தொடக்கம் 2016ஆம் ஆண்டு ஒக்ரோபர் மாதம் வரையான காலப்பகுதியிலேயே இவர்கள் திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இந்தக் காலப்பகுதியில் படகு மூலம் வந்து அவுஸ்ரேலியாவில் அடைக்கலம் கோரிய 320 பேரில் புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்டு, சிறிலங்காவுக்கு திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர் என்று அவுஸ்ரேலியாவின் குடிவரவு மற்றும் எல்லைப் பாதுகாப்பு பிரிவு புள்ளிவிபரங்களில் கூறப்பட்டுள்ளது.

இவர்களில் பாதிப் பேர், வேறு வழியின்றி தாமாகவே முன்வந்து நாடு திரும்பினர். 160 பேர் பலவந்தமாக சிறிலங்காவுக்கு நாடு கடத்தப்பட்டனர்.

இவர்கள் தவிர, அவுஸ்ரேலியா நோக்கி வந்த ஆறு படகுகளில் இருந்த 105 இலங்கை அகதிகள் படகில் வைத்து திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்.

இவ்வாறு திருப்பி அனுப்பப்பட்டவர்கள் சிறிலங்காவில் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்ட பின்னர் பெரும்பாலானவர்கள் இரண்டொரு நாட்களில் விடுவிக்கப்பட்டனர்.

எனினும் சிலர் பல மாதங்களாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர் என்றும் “தி ஒஸ்ரேலியன்“ ஊடகம் குறிப்பிட்டுள்ளது.