Breaking News

9 பொலிஸ் குழுக்கள் யாழில் களமிறக்கம்

வட மாகாணத்தில் அண்மைய நாட்களில் வாள்வெட்டு சம்பவங்கள் மற்றும் சமூக விரோதச் செயற்பாடுகள் தலைதூக்கியுள்ள நிலையில், வடக்கில் செயற்படும் ஆவா குழு உள்ளிட்ட 5 சமூகவிரோதக் குழுக்களை கைது செய்து அவர்களது செயற்பாடுகளை முடக்குவதற்கு ஒன்பது பொலிஸ் குழுக்கள் யாழ்.குடாநாட்டில் களமிறக் கப்பட்டுள்ளன. இந்த பொலிஸ் குழுக்களில் பொலிஸ்மா அதிபர் பூஜித ஜெயசுந்தரவின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் ஒரு பொலிஸ் குழுவும் செயற்பட்டு வருகின்றது.      


அண்மையில் வடக்கில் இடம்பெற்ற சமூகவிரோத செயற்பாடுகளுக்கு பின்னால் ஆவா என்ற சமூக விரோத குழு இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. எனினும், வடக்கில் ஆவா உள்ளிட்ட ஐந்து சமூக விரோத குழுக்கள் செயற்படுவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. பாதுகாப்பு தரப்பினர் இந்த தகவலை தெரி வித்துள்ளனர். இந்நிலையில், இவ்வாறான சமூக விரோத குழுக்களை கட்டுப்படுத்த ஒன்பது பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

ஆவா குழுவுக்கு அப்பால் நிமலன், டில்லு, ஜூட், பஹீல் மற்றும் சன்னா ஆகிய பெயர்களில் குடாநாட்டில் சமூக விரோத குழுக்கள் செயற்பட்டு வருவதாக வட பிராந்தியத்தின் சிரேஷ்ட பொலிஸ் அதிகாரி ஒருவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த குழுக்களை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்வரும் நாட்களில் யாழ். குடாநாட்டில் தேடுதல் வேட்டை இடம்பெறவுள்ளதாகவும், சமூகவிரோத குழுக்களை இலக்கு வைத்து இந்த தேடுதல் நடவடிக்கை முன்னெடுக்கவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, யுத்தத் தின் பின்னர் வடக்கில் பல நிதி நிறுவனங்கள் ஊடாக தவணைக்கொடுப்பனவு முறையில் வாகனங்கள் வழங்கப்பட்டுள்ளன.

 குறித்த வாகனங்களுக்கு தவணை கட்டணம் செலுத்த தவறிய சந்தர்ப்பங்களில் இத்தகைய சமூக விரோத குழுக்களின் உதவியை நாடி வாகனங்கள் மீட்கப்பட்ட சம்பவங்கள் பல பதிவாகியுள்ளமை விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளதாக கூறப்பட்டுள்ளது.

மேலும், வடக்கில் செயற்படும் சமூக விரோத குழுக்களில் ஆவா குழுவே முன்னிலையில் இருப்பதாகவும், அதன் தலைவனாக கருதப்படும் விநோதன் என்பவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் அந்த சமூக விரோத குழுவை சேர்ந்தோர் வாள் வெட்டில் ஈடுபட்டு வருவதாகவும், இவர்களை கைது செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவ தாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

குளப்பிட்டியில் நடை பெற்ற துப்பாக்கி சூட்டு சம்பவத்தில் யாழ்.பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் கொல்லப்பட்டதனை அடுத்து, சுன்னாகத்தில் இடம்பெற்ற வாள் வெட்டு சம்பவம் ஒன்றில் பொலிஸார் இருவர் படுகாயமடைந்திருந்தனர். இதனை அடுத்து குறித்த வாள்வெட்டு தமது குழுவினாலேயே மேற் கொள்ளப்பட்டதாக  துண்டுப் பிரசுரங்கள் மூலம் ஆவா குழு உரிமை கோரியது.

இதனை அடுத்தே யாழ். குடாநாட்டில் செயற்பட்டு வரும் சமூக விரோத கும்பல்களை அடக்கும் நடவடிக்கைகளில் பொலிஸ் தரப்பு தீவிரமாக களமிறங்கியுள்ளது. 
இந்த குழுக்களில் பொலிஸ்மா அதிபரின் நேரடிக் கண்காணிப்பில் செயற்படும் புலனாய்வுக்குழு ஒன்றும் செயற்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.