Breaking News

தமிழர் எழுச்சி பேரணிகள் தொடர்வதும் நிறுத்தப்படுவதும் அரசின் கைகளில் ; சிவசக்தி ஆனந்தன்

வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தலைமையில் அண்மையில்  யாழில் இடம் பெற்ற ‘எழுக தமிழ்’ பேரணியை தொடர்ந்து பல்வேறு சர்ச்சைகள் கிளம்பியிருந்தன.


இந்த நிலையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன்,  தமிழர் பிரதேசங்களில் ‘எழுக தமிழ்’ எழுச்சி பேரணிகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்படுவதா? அல்லது இத்துடன் நிறுத்தப்படுவதா என்பதை அரசாங்கமே தீர்மானிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

எழுக தமிழ் பேரணியானது  சிங்கள மக்களுக்கு எதிரானதாகவும், இனவாத நோக்கம் கொண்டதாகவும் பலராலும் சித்தரிக்கப்பட்டது. ஆனால் இவ்வாறான கீழ்த்தரமான நோக்கங்களுக்காக முன்னெடுக்கப்பட்டதல்ல எனவும் அது தமிழ் மக்களின் பிரச்சினைகளையும், கோரிக்கைகளையும் வெளிகாட்டும் வகையிலேயே மேற்கொள்ளப்பட்டது. எனவும்  சிவசக்தி ஆனந்தன் தெரிவித்தார்.

‘எழுக தமிழ்’ பேரணியை இனவாத கண்ணோட்டத்துடன் பார்ப்பதை நிறுத்தி, தமிழ் மக்களின் நியாய கோரிக்கைகளை கவனத்தில் கொள்ள வேண்டும். தமிழ் மக்களின் பிரச்சினைகளை தீர்க்க அரசு முன்வராவிட்டால், இவ்வாறான பேரணிகளையும் தடுக்க முடியாது.

எனவே இவ்வாறான எழுச்சி பேரணிகள் தொடர்வதா? அல்லது இத்துடன் நிறுத்திக்கொள்வதா என்பதை ஜனாதிபதி மற்றும் பிரதமரே தீர்மானிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார்.