Breaking News

அமெரிக்க அதிபர் தேர்தலும்...20 சுவாரஸ்ய தகவல்களும்!



அமெரிக்க அதிபரை தேர்ந்தெடுப்பதற்காக, அமெரிக்க மக்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ள இந்த நேரத்தில், தேர்தல் முறை பற்றியும், தேர்தல் வரலாற்றின் சில சுவாரஸ்ய தகவல்களும் உங்களுக்காக.

1. அமெரிக்காவின் அதிபர் தேர்தல் 227 ஆண்டுகள் வரலாறு கொண்டது. முதல் தேர்தல் 1789-ம் ஆண்டு நடைபெற்றது.

2. முதல் அதிபர் ஜார்ஜ் வாஷிங்டன். இவரை எதிர்த்து யாரும் போட்டியிடவில்லை. இருந்தும் 600 லிட்டர் ரம்மை கொடுத்து வாக்காளர்களை கவர்ந்திருக்கிறார். அப்போவே சரக்கு விளையாடிருக்கு.

3. அப்போது சொத்து வைத்திருக்கும் ஆண்கள் மட்டுமே வாக்களிக்க முடியும்.

4. 1920 முதல் பெண்கள் வாக்களிக்க அனுமதிக்கப்படுகின்றனர்

5. இதுவரை அமெரிக்காவில் ஆட்சி புரிந்த அதிபர்கள் மொத்தம் 44 பேர்.

6. ஹிலரி கிளின்டன் இருக்கும் ஜனநாயக கட்சி சார்பாக 15 அதிபர்களும், குடியரசு கட்சி சார்பில் 18 அதிபர்களும் பதவி வகித்துள்ளனர்.

7. பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த 200 பெண் வேட்பாளர்கள் இதுவரை போட்டியிட்டுள்ளனர். ஆனால் இன்னும் ஒரு பெண் அதிபரைக் கூட அமெரிக்கா பார்க்கவில்லை. இந்த தேர்தலில் ஹிலரி வெற்றி பெற்றால், முதல் பெண் அதிபராவார்.

8. அதிக வயதில் அதிபரானவர் ரொனால்டு ரீகன் (69). குறைந்த வயதில் அதிபரானவர் ஜான்.எஃப். கென்னடி (34). இந்த முறை டிரம்ப் (70) அதிபரானால், அமெரிக்க வரலாற்றில் மிக அதிக வயதில் பதவி ஏற்கும் அதிபராவார்.

9. நீண்ட காலம் பதவி வகித்தவர் ஃபிரான்க்லின் டி ரூஸ்வெல்ட். 4 முறை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். பதவியில் இருக்கும்போதே மரணித்தார். ரூஸ்வெல்ட்டின் மரணத்துக்குப் பிறகு, ஒரு அமெரிக்க அதிபர் அதிகபட்சம் இரண்டு முறை மட்டுமே பதவி வகிக்க முடியும் என்று சட்டம் இயற்றப்பட்டது.

10. தற்போதைய அதிபர் ஒபாமா உள்பட 17 அதிபர்கள் இரண்டு முறை பதவி வகித்துள்ளனர்.

11. 1892-ம் ஆண்டு தேர்தலில் வாக்குப்பதிவு இயந்திரம் அறிமுகப்படுத்தப்பட்டது.

12. தேர்தலை நடத்த அமெரிக்காவில் தேர்தல் ஆணையம் கிடையாது. மாநில அரசுகளே சட்டத்தின்படி தேர்தலை நடத்த வேண்டும்.

13. அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட விரும்புவர்கள், அமெரிக்காவில் பிறந்தவர்களாக இருக்க வேண்டும்.

14. கடந்த 14 ஆண்டுகளாக நிரந்திர குடியுரிமை பெற்றவராக இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 35 வயதுடையவராக இருந்தால்தான் தேர்தலில் போட்டியிட முடியும்.

15. 9-வது அதிபர் வில்லியம் ஹென்ரி ஹேரிசன், பதவி ஏற்பு விழாவின்போது கடும் குளிர் காற்றில் 2 மணி நேரம் உரையாற்றினார். இதுவே அமெரிக்க அதிபர் ஒருவர் வழங்கிய நீண்ட நேர உரை. குளிரில் நீண்ட நேரம் உரையாற்றியதால், நிமோனியா காய்ச்சலால் பாதிக்கப்பட்டு ஒரே மாதத்தில் உயிரிழந்தார். இவர் தான் பதவியில் இருக்கும்போதே மரணித்த முதல் அமெரிக்க அதிபர்.

16. லீப் வருடத்தின் நவம்பர் மாதத்தில், முதல் திங்களுக்கு அடுத்து வரும் செவ்வாய் அன்று தான் தேர்தல் நடைபெறும்.

17. 1980-ம் ஆண்டுக்குப் பிறகு ஆண்களை விட பெண்களே அதிகம் வாக்களித்து வருகின்றனர்.

18. ஆண்களின் ஆதரவு பெரும்பாலும் குடியரசு கட்சிக்கும், பெண்களின் ஆதரவு அதிகமாக ஜனநாயக கட்சிக்கும் இருப்பதாக ஆய்வுகள் கூறுகின்றன.

19. பைபிள் மீது கைவைத்து அமெரிக்க அதிபர்கள் சத்திய பிரமாணம் எடுத்துக் கொள்வது வழக்கம். இதில் எந்த உள் அர்த்தமும் இல்லை. முதல் அதிபர் பைபிளை பயன்படுத்தியதால் அந்த மரபு தொடர்கிறது.

20. டெடி ரூஸ்வெல்ட் மற்றும் ஜான் மெக்குன்ஸி ஆடம்ஸ் ஆகிய அதிபர்கள், பதவி ஏற்பின்போது பைபிளை பயன்படுத்தவே இல்லை.