Breaking News

புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு: குற்றத்தை ஒப்புக்கொண்ட சந்தேகநபர்கள்



ஊர்காவற்துறை நீதிவான் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து தமிழ் பொலிஸ் உத்தியோகஸ்தர் ஒருவருக்குக் கொலை மிரட்டல் விடுத்த குற்றச்சாட்டை, புங்குடுதீவு மாணவி கொலை வழக்கு சந்தேகநபர்கள் ஏற்றுக்கொண்டுள்ளனர்.

பொலிஸ் உத்தியோகத்தருக்கு கொலை மிரட்டல் விடுத்தமை தொடர்பான வழக்கு விசாரணை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்றில் பதில் நீதவான் சரோஜினி இளங்கோவன் முன்னிலையில், நேற்றுத் திங்கட்கிழமை (28) எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது, குறித்த குற்றத்தை ஏற்றுக்கொள்கிறீர்களா? என, சந்தேகநபர்களிடம் பதில் நீதவான் கேட்டபோது அவர்கள் குற்றத்தை ஏற்றுக்கொள்வதாகத் தெரிவித்தனர்.

அதனையடுத்து குறித்த வழக்கை, எதிர்வரும் 9ஆம் திகதிக்கு பதில் நீpவான் ஒத்தி வைத்தார்.
மாணவி கொலை வழக்கின் சந்தேக நபர்கள் கடந்த ஜனவரி மாதம் ஊர்காவற்துறை பொலிஸ் நிலையத்தை சேர்ந்த பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல் விடுத்து இருந்தனர்.

குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் தம்மைப் பழி தீர்க்கும் முகமாகவே மாணவி கொலை வழக்கில் தம்மைச் சிக்க வைத்து உள்ளார் எனவும், தாம் இந்தக் கொலை வழக்கிலிருந்து வெளியே வந்ததும் தம்மைச் சிக்க வைத்த பொலிஸ் உத்தியோகஸ்தரைக் கொலை செய்வோம் எனவும் சந்தேகநபர்கள் மிரட்டியிருந்தனர்.

அந்தச் சம்பவம் தொடர்பில் சந்தேகநபர்கள் ஒன்பது பேரிடம் இருந்து வாக்கு மூலத்தைப் பதிவு செய்ய அனுமதிக்குமாறு, கடந்த 15ஆம் திகதி நடைபெற்ற வழக்கு விசாரணையின் போது ஊர்காவற்துறைப் பொலிஸார், நீதவானிடம் கோரிக்கை விடுத்தனர். 

அதனை ஊர்காவற்துறை நீதவான் நீதிமன்ற நீதவான் ஏ.எம்.எம்.றியால் ஏற்றுக்கொண்டு குறித்த ஒன்பது சந்தேகநபர்களிடமும் நீதிமன்ற வளாகத்தினுள் வைத்து வாக்கு மூலத்தைப் பெற்றுக்கொள்ளுமாறு உத்தரவிட்டிருந்தார்.