Breaking News

மாவீரர் நாளில் நடைபெற்ற நரித்தனங்கள் இரண்டு(ஆதாரங்களோடு)

2016ஆம் ஆண்டு நடைபெற்று முடிந்த மாவீரர் நாள் சர்வதேச ரீதியாக தமிழர் தாயகத்தினைத் திரும்பிப்பார்க்க வைக்கும் அளவிற்கு வல்லமைபெற்ற ஒன்றாக நடந்தேறி முடிந்திருக்கிறது.

மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றுமுடிந்தாலும் விமர்சனங்களும் விமர்சனங்களை முன்வைப்பவர்கள் மீதான விமர்சனங்களும் சரமாரியாக காணப்பட்டுவருகின்றன.

உண்மையில் கிழக்கிலும் மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருந்தாலும் வடக்கில் குறிப்பாக கிளிநொச்சி கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வே மிகக்கூடுதலாக அவதானிக்கப்பட்டதாக தெரிகிறது.

நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளில் தங்கள் உறவுகளுக்கு அவர்கள் விதைக்கப்பட்ட மண்ணில் சுடரேற்றுகின்ற நிகழ்வில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணர்வுபூர்வமாகத் திரண்டிருந்தார்கள்.

ஆன போதிலும் அந்த நிகழ்வுகளில் தங்கள் பிள்ளைகளுக்காக திரண்ட மக்கள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறீதரனின் அழைப்புக்காகத் திரண்டதாகத் தோற்றம் காட்டுவதற்கான முயற்சி நடைபெற்றிருக்கிறது என்றே சொல்லலாம்.

அதாவது, துயிலும் இல்லங்கள் சுத்தம் செய்யப்பட்டு மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றிருக்கின்றன.

இவற்றில் குறிப்பாக கனகபுரம், முழங்காவில் மற்றும் வன்னிவிளாங்குளம் மாவீரர் துயிலும் இல்லங்களில் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள் பிரதான சுடர் ஏற்றியிருந்தனர்.

துயிலும் இல்லங்களுக்கு திரண்டிருந்த பெற்றோரிலோ உறவினர்களிலோ தங்கள் குடும்பத்தினைச் சேர்ந்த மாவீரர்கள் மூவர் அல்லது நால்வரை விடுதலைக்காகக் கொடுத்தவர்களே கூடுதலாக இருந்திருக்கிறார்கள். அவர்களில் ஒருவரையேனும் பிரதான சுடர் ஏற்றவைத்துவிட்டு அதற்கு துணையாக அரசியல் பிரமுகர்கள் நின்றிருக்கலாம் என்பது தான் அனைவரது அங்கலாய்ப்பாகவும் ஏதிர்பார்ப்பாகவும் இருந்திருக்கிறது.

இந்த இடத்தில் உடுத்துறை மாவீரர் துயிலும் இல்லத்தில் ஜனநாயகப் போராளிகள் நடந்துகொண்டவிதம் அனைவரையும் பாராட்ட வைத்திருக்கிறது. மூன்று மாவீரர்களின் தாயார் ஒருவரே பிரதான சுடர் ஏற்றியிருக்கிறார். இந்த இடத்தில் தான் ஜனநாயகப் போராளிகள் தாங்கள் முன்னாள் போராளிகள் தான் என்பதை நிரூபித்துக்காட்டியிருக்கின்றனர். பிரித்தானியாவில் கூட முதலாவது தாக்குதல் தளபதி சீலன் அவர்களின் தந்தையே ஏற்றியிருந்தார் ஆனால் அரசியல்வாதிகளோ அரசியல் ஆதாயத்துக்காக மாவீர்களுக்கு பிரதான சுடர் ஏற்ற ஆசைப்பட்டு தங்களை தோலுரித்துக் காட்டியிருக்கிறார்கள். தளபதி தீபன் அவர்களின் தந்தையார்கூட அதே இடத்தில்தால் நின்றதாகவும் ஆனால் அவருக்குகூட அந்த வாய்ப்பு மடறுக்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.

நிகழ்வின்போது அறிவிப்பாளர் வரிக்குவரி சொன்ன துயிலுமில்ல மரபை பேணிப்பாதுகாருங்கள் என்று வந்திருந்த மக்களுக்கு சொல்லிவிட்டு தாங்களே மரபை மீறுவது சரியா என்பதை புரிந்துகொள்ள வேண்டும்.

முழங்காவில் மாவீரர் துயிலும் இல்லத்தில் நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா சுடர் ஏற்றியபோதிலும் அதுகுறித்த ஒளிப்படங்களோ, செய்திகளோ சமூகவலைத் தளங்களையோ ஊடகங்களையோ அலங்கரிக்கவில்லை.

இதே மாவை சேனாதிராஜா மாவீரர் நாளுக்கு முதல்நாள் மக்களை சன்னதமாடாது தற்போதைய நிலமையை கருதி அமைதியான முறையில் வீடுகள் மற்றும் ஆலையங்களில் நினைவுகூருமாறு அறிவித்தல் விட்டவர் மக்கள் தாங்களாக முன்வந்து துயிலுமில்லங்களை துப்பரவுசெய்து நிகழ்வுகளை நடாத்த எத்தணித்தபோது அதற்குள் புகுந்துகொண்டு தங்கள் அரசியல் திருவிளையாடல்களை கச்சிதமாக நடாத்தி முடித்திருக்கின்றார். குறிப்பாக துயிலுமில்ல துப்பரவு பணிகளில் மக்களோடு சேர்ந்து பாராளுமன்ற உறுப்பினரும் போரில் ஒரு காலை இழந்தவருமான சாந்தி அவர்களே கலந்துகொண்டிருந்தார் என்பதும் எல்லா பாராளுமன்ற உறுப்பினரும் துயிலுமில்லத்தை துப்பரவு செய்வதற்கும் மாவீரர் தினம் அனுஸ்டிப்பது தொடர்பில் அறிவித்தல் விடுவதற்கும் ஆர்வலர்கள் கேட்டிருந்தும் மறுப்பு தெரிவித்தனர் என்பதும் பாராளுமன்ற உறுப்பினர் சாந்தி அவர்கள் மாத்திரமே தனது அழைப்பை உத்தியோகபூர்வமாக விடுத்திருந்தார் என்பதும் இங்கு சுட்டிக்காட்டத்தக்கது.
பா.உ.சாந்தி அவர்களின் நிகழ்வு அழைப்பு
மாவை சேனாதிராயாவின் அறிக்கையை அவரது ஆதரவாளர் பகிரும்போது

ஆனால் கனகபுரம் மாவீரர்துயிலும் இல்லத்தில் நடைபெற்ற நிகழ்வு நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் முகநூலில் (கவனிக்க) நேரலையாக ஒளிபரப்பட்டப்பட்டது. அதனைவிடவும் தரமான ஒளிப்படங்களும் வெளியாகியிருந்தன.

எனவே தாயகத்தை மட்டுமல்லாது சர்வதேசத்திலும் வாழ்கின்ற தமிழ் மக்களையும் உற்றுப்பார்க்கும் அளவிற்கு அவருடைய முகநூல் காட்சிகள் அமைந்திருந்தன. இதுவரையில் இலட்சக்கணக்கான வாசகர்கள் அந்தக் காட்சியினைப் பார்த்திருந்ததை அவதானிக்கமுடியும்.

இதே போல சரவணபவனும் தான் கலந்துகொண்ட நிகழ்வை செல்பி எடுத்து அடுத்த தேர்தலுக்கு ஆவணப்படுத்திக்கொண்டார்.

இதேவேளையில் இன்னொரு விடயமும் நடைபெற்றிருந்தது தற்போது விமர்சனங்களுக்கு உள்ளாகியுள்ளது. தமிழீழ மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெறுகின்றபோது அந்த மாவீர்நாளின் பிரதான விடயமாக தமிழீழத் தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின் உரை அமைவது வழக்கம்.
கிளிநொச்சி கனகபுரம் துயிலும் இல்லத்தில் திரண்ட ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் பிள்ளைகளுக்காகவும் உறவுகளுக்காகவும் சுடர்ஏற்றிக்கொண்டிருக்க. விடுதலைப்புலிகள் பாணியில் அமைக்கப்பட்ட பிரதான சுடரினை சிறிதரன் ஏற்றியிருந்தார். அதன் பின்னர் பாராளுமன்றில் இரண்டு நாட்களுக்கு முன்னர் அவர் ஆற்றியிருந்த உரையினை துயிலும் இல்லத்தில் ஒளிபரப்பியிருக்கிறார்கள்.

துயிலும் இல்லங்களில் உரைகளை தவிர்க்கவேண்டும் என்று ஏற்பாட்டாளர்கள் தெரிவித்து அதற்கு ஒப்புதல் வழங்கியிருந்த நிலையிலும் சிறிதரனின் ஏற்பாட்டுக்கு அமைய அவர் பாராளுமன்றில் ஆற்றிய உரை ஒளிபரப்பட்டிருக்கிறது. அத்தோடு அவரது பாராளுமன்ற உரை கட்டணம் செலுத்தப்பட்டு முகநூலிலும் விளம்பரப்படுத்தப்பட்டிருந்தது.
கட்டணம் செலுத்தி விளம்பரப்படுத்தியமைக்கான சான்று


இது நீண்டகால தலைமை கனவு பயணத்திற்கு கீழுள்ள படத்தை பாருங்கள்
சரி, அவருடைய முகப்புப்புத்தகத்தில் அவர் ஆற்றிய உரைக்கு பாராட்டுமழைகள் ஏராளமாக குவிந்துவருவதை அவதானிக்கமுடிகிறது. தென்னிந்திய திரைப்படம் ஒன்றில் வடிவேலு என்கிற நகைச்சுவை நடிகரை நினைவுபடுத்தும் வகையில் சிறீதரனின் உரையும் அதன் பின்னணியும் அமைந்திருந்தமை அடுத்த விமர்சனத்தை எதிர்கொண்டிருக்கிறது.

“மண்டைக்குள்ள இருக்கிற கொண்டைய மறந்திட்டீங்களே” என்பது போல பாராளுமன்றத்தில் சிறீதரன் ஆற்றிய உரையின் மூலங்களைக் கண்டுபிடித்துவிட்டார்கள் தமிழ்மக்கள்.

தமிழீழத் தேசியத் தேசியத்தலைவர் அவர்கள் ஆண்டு தோறும் ஆற்றிய மாவீரர்நாள் உரைகளில் ஒவ்வொரு பந்தியை களவாடி தன்னுடைய உரையாக பாராளுமன்றில் முழங்கியிருக்கிறார் சிறீதரன். தலைவருடைய உரையை பாராளுமன்றில் ஆற்றினால் அது வரவேற்கத்தக்கது தானே என்கின்றனர் சிறீதரனின் ஆர்வலர்கள்.

அன்பான ஆர்வலர்களே,

அவர் தலைவருடைய உரையினை பாராளுமன்றில் ஆற்றினால் அது வரவேற்கத்தக்கதுதான். ஆனால் அவர் தன்னுடைய உரையின் போது எந்த ஆண்டு நடைபெற்ற மாவீரர்நாள் உரையில் தலைவர் பிரபாகரன் இவ்வாறு தெரிவித்தார் என்பதைச் சுட்டிக்காட்டி உரையாற்றியிருந்தால் அவரை தலையில் வைத்துக் கொண்டாடியிருக்கலாம்.

ஆனால் அவர் ஆற்றிய உரை இரண்டு உள்நோக்கங்களின் பின்னணியைக் கொண்டது என்பதைப் புரிந்துகொள்ளவேண்டும். ஒன்று பாராளுமன்றில் ஆற்றப்படுகின்ற உரையை மையப்படுத்தி சட்டநடவடிக்கை எடுக்கமுடியாது.

இன்னொன்று அதே உரையை துயிலும் இல்லத்திலும் ஒளிபரப்பினால் பாராளுமன்ற உரையைத்தான் ஒளிபரப்பினோம் என்று தெரிவித்துவிடலாம்.
தலைமையை இலக்குவைத்தே அவர் இவ்வாறு நடந்துகொள்வதாக விமர்சனங்கள் முன்வைக்கப்படுகின்றன.

ஆனால், சொந்தமாக மாவீரர்கள் நினைவாக ஒரு உரையைக் கூட எழுதமுடியாத நிலையில் “கூரையேறி கோழி பிடிக்கத்தெரியாத ஒருவன் வானம் ஏறி வைகுண்டம் போனேன்” என்றானாம் என்பது போல அவருடைய தலைமைக்கனவு என்கின்றனர் விமர்சகர்கள்.

சிறீதரனும் தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினரும் நடைபெற்ற மாவீரர்நாள் நிகழ்வுகளை தங்களுடைய ஏற்பாட்டின் அடிப்படையிலேயே நடந்ததாக எண்ணிக்கொள்ளலாம். அந்த எண்ண ஓட்டம் பாமர மக்கள் மத்தியில் எடுபட்டும் இருக்கலாம்.

ஆனால் இந்த விடயங்களுக்குப்பின்னால் இன்னொரு நரித்தனத்தின் தந்திரம் இருந்திருக்கிறது என்பது தான் உண்மை.

மாவீரர்நாள் நிகழ்வுகள் நடைபெற்றன, படங்களும் வெளியாகியிருந்தன. இவை ஒருவகையான திடீர் எழுச்சியாகவும் அரசியல்வாதிகளின் சாதனையாகவும் தெரியலாம். ஆனால் இந்த விடயங்கள் பல மாதங்களுக்கு முன்னரே அரச இயந்திரத்தினால் திட்டமிடப்பட்டிருக்கின்றது என்பதை ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும்.

துயிலும் இல்லங்கள் அனைத்தையும் ஆக்கிரமித்துவைத்திருந்த படையினர் அங்கு தங்களுடைய முகாம்களையும் நிறுவியிருந்தனர் என்பது அனைவரும் அறிந்தவிடயம். ஆனாலும் சில மாதங்களுக்கு முன்னர் குறிப்பிட்ட துயிலும் இல்லங்களை இராணுவத்தினர் கைவிட்ட சம்பவங்களை ஊடகங்கள் சில வெளியிட்டுமிருந்தன.

உண்மையில் துயிலும் இல்லங்களை விடுதலைசெய்வது என்பது பரந்த மனதின் வெளிப்பாடாக அமைந்திருக்கும் என்று யாராவது கருதினால் அதனை ஏற்றுக்கொள்ளமுடியாது.

மைத்திரி அரசாங்கத்தின் பிரதான இயங்குதளமாக ரணில்விக்கிரமசிங்கவே விளங்கிவருகிறார். அவருடைய திட்டத்தின் அடிப்படையிலேயே துயிலும் இல்லக் காணிகள் சில விடுவிக்கப்பட்டிருக்கின்றன. இந்த இடத்தில் காணி விடுவிப்பிற்கான உரிமையை கூட்டமைப்பினர் கோரமுடியாது. காரணம் மண்வெட்டிகொடுப்பதையோ, கோழிக்குஞ்சு கொடுப்பதையோ அரசியலாக ஊடகங்களில் பயன்படுத்துகின்ற கூட்டமைப்பினர் தாங்கள் இவ்வாறு ஒரு கோரிக்கை விடுத்திருந்தால் அமைதி காத்திருப்பார்களா?

இந்த இடத்தில்தான் ரணிலின் திட்டமே இது என்ற விடயம் வலுக்கிறது. எதிர்வரும் காலத்தில் ரணில் – மைத்திரி அரசின் கூட்டுஅணி வெற்றிபெறுவது என்பது சிங்கள தேசத்தினை மட்டும் வைத்துக்கொண்டால் எட்டாக்கனியே. இந்த நிலையில் வடக்கு – கிழக்கில் இருக்கின்ற மக்களின் மனங்களை நிரந்தரமாக அபகரிக்க ஒரே வழி மாவீரர்நாளை கொண்டாட அனுமதிப்பது என்ற தன்னுடைய எண்ண ஓட்டத்திற்கு அவர் வழிசெய்திருக்கிறார் என்றே கருதவேண்டும்.

அடுத்த மாவீர்நாளுக்கு முன்பாக இன்னும் பல மாவீரர் துயிலும் இல்லங்களும் விடுவிக்கப்படலாம்.

இதேவேளையில் சர்வதேச ரீதியாக இலங்கை அரசாங்கம் நல்லாட்சியில் சிறந்து விளங்குவதாக காட்டுவதற்கான பல்வேறு வேலைகள் நடைபெற்றுவருகின்றன.

இதன் ஒருகட்டமாக விடுதலைப்புலிகளின் மாவீர்ர்களை நினைவுகூரும் அளவிற்கு நிலமை சுமூகமாக இருப்பதாகக் காட்டிக்கொள்ளமுடியும். இவ்வாறான நடவடிக்கைகள் சர்வதேச அழுத்தங்களிலிருந்து மீண்டுவருகின்ற சிங்கள ஆட்சிபீடத்தினை இன்னும் மீட்டுத்தரும் என்பதை அவர்கள் செயல்வடிவில் காட்டியும் வருகிறார்கள்.

இவ்வாறான நிலையில் மாவீரர்நாளை நடைபெற வைப்பதன் பின்னணியில் அரசாங்கம் இருப்பதற்கான இன்னொரு ஆதாரத்தையும் முன்வைக்கமுடியும்,
துயிலும் இல்லங்களில் நிகழ்வுகளைச் செய்வதற்காக ஏற்பாட்டாளர்கள் பொலிஸ் நிலையத்தினை நாடி அனுமதி கோரியிருக்கின்றனர்.
பொலிஸார் மூன்று நிபந்தனைகளை முன்வைத்து அனுமதி வழங்கியிருக்கின்றனர்.

அவையாவன,

தமிழீழத் தேசியக் கொடி ஏற்றக்கூடாது, விடுதலை கீதங்கள் இசைக்கக்கூடாது, தமிழீழத் தேசித்தலைவரின் ஒளிப்படங்களையோ சீருடைகளையோ பயன்படுத்தக்கூடாது என்பன.

ஆக, மேலிடத்திலிருந்து கிடைத்திருக்கின்ற அனுமதியின் அடிப்படையிலேயே மாவீரர் நாளுக்கான ஏற்பாடுகளும் நிகழ்ச்சிகளும் நடந்திருக்கின்றன.
ஒட்டுமொத்தத்தில் தமிழ்மக்கள் திரண்டு தங்கள் உறவுகளுக்காக மனம் உருகி சுடரேற்றி வணங்கினார்கள் என்பது மாற்றுக் கருத்துக்கிடமின்றிய ஆறுதல் தரும்விடயம்தான்.

ஆனாலும் இந்தத் தியாகங்களை வைத்து அரசியல் இலாபம் தேடுகின்ற தந்திரங்கள் தென்னிலங்கை மையப்பீடத்திலும் வடக்கின் அரசியல்மைய பீடத்திலும் கையாளப்பட்டிருக்கின்றது என்பதை அப்பாவி மக்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

கடந்த வாரம் சிறிதரன் அவர்கள் பாராளுமன்றத்தில் ஆற்றிய உரையை கனகபுரம் மாவீரர் துயிலிமில்லத்திலும் ஒலிபரப்புச் செய்திருந்தார். அவ் உரையானது தமிழீழத் தேசியத் தலைவர் அவர்களால் 1990 இலிருந்து 2007 இல் ஆற்றிய உரைகளில் இருந்து பிரதியெடுத்தது என்பது ஆதாரத்துடன் நிரூபிக்கப்படுகிறது.
தேசியத் தலைவரின் உரைகளும் சிறிதரன் செய்த மாற்றங்களும் (?) ஆதாரங்களுடன் கீழே தரப்படுகிறது.

இந்த உரை எங்கிருந்து எடுக்கப்பட்டது என்பதற்கான ஆதாரங்கள் கீழே

“எமது இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, எமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் நாம் நினைவு கூரும் நன்நாள்.” ( தலைவர் 2002)
தமிழ் இனத்தின் இருப்பிற்காக, தமது இன்னுயிரை ஈகம் செய்த உன்னதமானவர்களை, தமது நெஞ்சத்தின் நினைவாலயத்தில் தமிழர்கள் நினைவு கூரும் நாள்.  (சிறிதரன் 2016)


“தமிழீழ தேசம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். எமது மண்ணின் விடிவிற்காகவும் எமது மக்களின் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை எமது இதயக் கோவில்களில் நாம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.” (தலைவர் 2003)
தமிழர்நிலம் சுதந்திர தாகம் கொண்டு எழுச்சி கொள்ளும் மகத்தான நாள். தமிழர் மண்ணின் விடிவிற்காகவும் தமிழர் விடுதலைக்காகவும் தமது இன்னுயிரை ஈகஞ்செய்த எம்மினிய வீரர்களை தமிழர்தம் இதயக் கோவில்களில் தம் நெஞ்சுருகிப் பூசிக்கும் திருநாள்.” (சிறிதரன் 2016)

“தமது உன்னதமான உயிருக்கும் மேலாக, தமது தேசத்தின் விடுதலையை அதியுன்னதமானதாக நேசித்து, அந்த உயரிய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிக்கொண்ட எமது மாவீரர்களை நாம் போற்றி வணங்கும் நன்னாள்.” (தலைவர்2004)சிறியர் 2016 ஈயடிச்சான்

“ஆயிரமாயிரம் அக்கினிப் பந்துகளாக, எரி நட்சத்திரங்களாக எரிந்து, எமது விடுதலை வானை அழகுபடுத்தி, அலங்கரித்து நிற்கும் எமது சுதந்திரச்சிற்பிகளை நினைவுகூரும் புனிதநாள்.”  (தலைவர் 2007)

“இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து, எமது மண்ணுக்காக, எமது மக்களுக்காக, எமது மக்களது உயிர்வாழ்விற்காகத் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு இன்று நாம் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்துகிறோம்.”( தலைவர் 2006)
“இந்த உலகத்தைத் துறந்து, இளமையின் இனிமையான உணர்வுகளைத் துறந்து, சாதாரண வாழ்வின் சகலவற்றையும் துறந்து தமிழ் மக்களுக்காகவும் அவர்களின் உயிர்வாழ்விற்காகவும் தமது உன்னதமான உயிர்களை உவந்தளித்த உத்தமர்களுக்கு  தமிழர்கள் சிரந்தாழ்த்தி வணக்கம் செலுத்தும் நாள்.” ( சிறிதரன் 2016)


“சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை நாம் நினைவு கூரும் புனித நாள்.” (தலைவர் 2005)“சுயநல இன்பங்களைத் துறந்து பொதுநல இலட்சியத்திற்காகப் போராடி வாழ்ந்து, அந்தச் சத்திய இலட்சியத்திற்காகச் சாவைத் தழுவிய உத்தமர்களை தமிழர்கள் நினைவு கூரும் புனித நாள்.” (சிறிதரன் 2016)

“விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது மாவீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.” (தலைவர் 2002)
“விடுதலை என்பது வாழ்வின் அதியுயர்ந்த விழுமியம். அந்த விழுமியத்தை இலட்சியமாக வரித்து, அதற்காக வாழ்ந்து, அதற்காகப் போராடி, அதற்காக மடிந்த எமது வீரர்கள் மகத்தான மனிதப் பிறவிகள். அவர்களது வாழ்வும் வரலாறும் எமது வீர விடுதலைக் காவியத்தின் உயிர் வரிகள்.” (சிறிதரன் 2016)

“எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாளில்” (தலைவர் 2004)“எமது மாவீரர்களின் வீரஞ்செறிந்த போராட்ட வாழ்வையும் அவர்களது ஒப்பற்ற தியாகங்களையும் அற்புதமான அர்ப்பணிப்புகளையும் நெஞ்சில் நிறுத்தி நினைவுகூரும் இத் திருநாள் தமிழர்களின் வரலாற்றில் புனித நாள்” (சிறிதரன் 2016)

“நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால் சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் மாவீரர்களை இன்று கௌரவிப்பதில் தமிழீழ தேசம் பெருமை கொள்கிறது. மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும்பொழுது அந்த எரியும் சுடரில் அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், நான் ஒரு தரிசனத்தைக் காண்கிறேன்.

அக்கினியாக பிரகாசித்தபடி ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதிபோல ஒளிகாட்டி, வழிகாட்டிச்செல்லும் ஒரு அதிசயக்காட்சி திடீரென மனத்திரையில் தோன்றி மறையும். (தலைவர் 2000)


“நீங்காத நினைவுகளாக எம்மோடு ஒன்றிக் கலந்துவிட்ட உணர்வுகளாக, காலத்தால் சாகாது என்றும் எம்முள் உயிர்வாழும் இம் மாவீரர்களை இன்று கௌரவிப்பதில் தமிழர் தாயகம்  பெருமை கொள்கிறது. மாவீரர் நினைவாக ஈகச்சுடரை ஏற்றும்பொழுது அந்த எரியும் சுடரில் அந்தத் தீ நாக்குகளின் அபூர்வ நடனத்தில், அந்த அற்புதமான படிமத்தில், தமிழர்கள் தங்களுக்காக ஈகம் புரிந்த பிள்ளைகளின்  தரிசனத்தைக் காண்கின்றார்கள்.

அக்கினியாக பிரகாசித்தபடி ஆயிரமாயிரம் மனித தீபங்கள், நெருப்பு நதிபோல ஒளிகாட்டி, வழிகாட்டிச்செல்லும் ஒரு அதிசயக்காட்சி ஒவ்வொரு தமிழர்  மனத்திரையிலும் திடீரென  தோன்றி மறையும். (சிறிதரன் 2016)

“மாவீரர்களைப் புனிதர்களாகவே நான் கௌரவிக்கிறேன். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள். சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணிக்கத் துணிகிறார்கள் இதனை ஒரு புனிதமான துறவறமாகவே நான் கருதுகிறேன். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை நாம் புனிதர்களாகவே பூசிக்க வேண்டும்.” (தலைவர் 1997)

“மாவீரர்களைப் புனிதர்களாகவே தமிழர்கள் கௌரவிக்கிறார்கள். தாய் நாட்டின் விடுதலையென்ற பொதுமையான பற்றுணர்வால் ஈர்க்கப்படும் அவர்கள், தமது தனிமையான பற்றுக்களையும் பாசவுறவுகளையும் துறந்துவிடுகிறார்கள். சுயவாழ்வின் சுகபோகங்களைக் கைவிட்டு பொதுவாழ்வின் அதியுயர் விழுமியத்தைத் தழுவிக்கொள்கிறார்கள். அந்தப் பொதுவான இலட்சியத்திற்காக தமது சொந்த வாழ்வையும் அர்ப்பணித்தவர்கள். இதனை ஒரு புனிதமான துறவறமாகவே தமிழர்கள் கருதுகிறார்கள். இந்தப் புனிதத் துறவறத்திற்கு இலக்கணமாக விளங்கும் மாவீரர்களை தமிழர்கள் புனிதர்களாகவே பூசிக்கிறார்கள்.”  (சிறிதரன் 2016)

“எமது வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது.  இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல.  இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, எமது போராட்டத்தின் உயிர்மூச்சாக எமது போராளிகளின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.  இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்: எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்.  எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல.  அவன் ஒரு இலட்சியவாதி.  ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன்.  மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக வாழ்பவன்.  சுய நலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன்.  எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள்.  அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல.  அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு.  ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு.  உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை.  அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப் பற்றிக்கொள்கிறது.  ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.” (1990 மாவீரர் தின உரை)


தமிழர்களின் வீர சுதந்திர வரலாறு இந்த மாவீரர்களின் இரத்தத்தால் எழுதப்பட்டிருக்கிறது.  இவர்களது இறப்புக்கள் அர்த்தமற்ற இறப்புக்கள் அல்ல.  இந்த வீரர்களின் சாவுகள் எமது சரித்திரத்தையே இயக்கும் உந்து சக்தியாக, தமிழர் போராட்டத்தின் உயிர்மூச்சாக தமிழர்களின் உறுதிக்கு உத்வேகமளிக்கும் ஊக்குசக்தியாக அமைந்துவிட்டது.  இந்த மாவீரர்கள் காலத்தால் சாகாத சிரஞ்சீவிகள்: சுதந்திரச் சிற்பிகள்: எமது மண்ணிலே ஒரு மாபெரும் விடுதலை எழுச்சிக்கு வித்திட்டுச் சென்ற வீரமறவர்கள்.  எமது இனத்தின் சுதந்திரத்திற்காக, பாதுகாப்பிற்காக தமது இன்னுயிரை அர்ப்பணித்துள்ள இந்த மகத்தான தியாகிகள் காலம் காலாக எமது இதயக் கோவிலில் பூசிக்கப்பட வேண்டியவர்கள்.

ஒரு விடுதலை வீரன் சாதாரண வாழ்க்கையை வாழும் ஒரு சாதாரண மனிதப் பிறவி அல்ல.  அவன் ஒரு இலட்சியவாதி.  ஒரு உயரிய இலட்சியத்திற்காக வாழ்பவன், தனக்காக வாழாமல் மற்றவர்களுக்காக வாழ்பவன்.  மற்றவர்களின் விடிவுக்கக, விமோசனத்திற்காக வாழ்பவன்.  சுய நலமற்ற, பற்றற்ற அவனது வாழ்க்கை உன்னதமானது, அர்த்தமானது, சுதந்திரம் என்ற உன்னத இலட்சியத்திற்காக அவன் தனது உயிரையும் அர்ப்பணிக்கத் துணிகிறன்.  எனவே, விடுதலைவீரர்கள் அபூர்வமான மனிதப் பிறவிகள்.  அசாதாரணமான பிறவிகள்.

ஒரு விடுதலை வீரனின் சாவு, ஒரு சாதாரண மரண நிகழ்வு அல்ல.  அந்தச் சாவு, ஒரு சரித்திர நிகழ்வு.  ஒரு உன்னத இலட்சியம் உயிர்பெறும் அற்புதமான நிகழ்வு.  உண்மையில் ஒரு விடுதலைவீரன் சாவதில்லை.  அவனது உயிராக இயங்கி வந்த இலட்சிய நெருப்பு என்றுமே அணைந்துவிடுவதில்லை. அந்த இலட்சிய நெருப்பு ஒரு வரலாற்றுச் சக்தியாக மற்றவர்வகளைப் பற்றிக்கொள்கிறது.  ஒரு இனத்தின் தேசிய ஆன்மாவை தட்டி எழுப்பிவிடுகிறது.” (சிறிதரன் 2016)


முக்கியமான செய்திகளை உடனுக்குடன்  அறிந்திட Fallow ஐ கிளிக் செய்யுங்கள்