Breaking News

யாழ். பல்கலைக்கழக மாணவர் படுகொலை; ஐந்து பொலிஸாருக்கும் விளக்கமறியல்



யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்ட ஐந்து பொலிஸாரையும் எதிர்வரும் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்றத்தின் பதில் நீதிபதி இளங்கோவன் உத்தரவிட்டுள்ளார்.

யாழ். நீதவான் நீதிமன்றத்தில் இன்று இடம்பெற்ற வழக்கு விசாணையின் போது மாணவர்களின் படுகொலை தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வு பிரிவினர் நீதிமன்றத்தில் சமர்ப்பித்துள்ளதாக மாணவர்கள் சார்பில் முன்னிலையான சட்டத்தரணி கேசவன் சயந்தன் தெரிவித்தார்.

யாழ்ப்பாணம் - கொக்குவில் குளப்பிட்டி சந்தியில் வைத்து கடந்த ஒக்டோபர் மாதம் 21 ஆம் திகதி இரவு யாழ். பல்கலைக்கழக 3 ஆம் வருட கலைப்பீட மாணவர்களான விஜயகுமார் சுலக்சன், நடராஜா கஜன் ஆகியோர் பொலிஸாரினால் சுட்டுக்கொலை செய்யப்பட்டனர்.

இந்தக் கொலைச் சம்பவம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகஸ்தர்கள் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டு இன்று வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.

இந்த நிலையில் இன்று மீண்டும் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்ட போதே டிசம்பர் மாதம் 02 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்..

இன்றைய வழக்கு விசாரணையின் போது மாணவர்களின் படுகொலை தொடர்பான மேலதிக விசாரணை அறிக்கையை குற்றப் புலனாய்வு பிரிவினர் இன்று நீதிமன்றத்தில் சமர்ப்பித்ததாக உயிரிழந்த மாணவர்கள் இருவர் சார்ப்பிலும் முன்னிலையான வடமாகாண சபை உறுப்பினரும் சட்டத்தரணியுமான கேசவன் சயந்தன் தெரிவித்தார்.