Breaking News

 “நொண்டிக் குதிரைகள்” என்றவருக்கு எதிராக முறைப்பாடு

“வடக்கில் பிரபாகரனும் தெற்கில் விஜயவீரவும் ஆயுதப் போராட்டம் நடத்தியபோது, மலையகத்தில் அஹிம்சை ரீதியிலான சாத்வீக போராட்டத்தை நடத்தியவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான். அவரது வழிநடத்தல் காரணமாகவே, மலையக இளைஞர்கள் இன்றும் அமைதி, அஹிம்சை கொள்கைகளைக் கடைபிடித்து வருகின்றனர்” என்று, சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து தெரிவித்தார். 

“அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பி.சந்திரசேகரன் ஆகியோருக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் வகையில், பேஸ்புக் கணக்கில், “நொண்டிக் குதிரைகள்” என்ற குறிப்பொன்றை பதிவேற்றிய பதிவாளருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனவும், குற்றபுலனாய்வு திணைக்களத்திடம் அவர் வேண்டுகோள் விடுத்தார். 

பேஸ்புக் பயனாளர் ஒருவர், கடந்த 19ஆம் திகதியன்று, அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அமரர் பெ.சந்திரசேகரன் ஆகியோரை அகௌரவப்படுத்தும் வகையில், 'நொண்டிக் குதிரைகள்" என குறிப்பிட்டிருந்தார். இப்பயனாளரின் செயற்பாட்டைக் கண்டித்துள்ள சௌமிய இளைஞர் நிதியத்தின் தலைவர் எஸ்.பி.அந்தோனிமுத்து, அவ்விடயத்தை பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவின் கவனத்துக்கும் கொண்டுவந்தார். பின்னர், பூஜித் ஜயசுந்தரவின் பணிப்பின்பேரில், குற்றப்புலனாய்வு திணைக்களத்திடமும் முறையிட்டுள்ளார். 

குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் இயக்குநர் டி.ஆர்.எஸ்.ஆர் .நாகமுல்லவை, திங்கட்கிழமை (7) சந்தித்து முறையிடும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். 

இது தொடர்பில் மேலும் கூறியுள்ள அவர், “தலைவர் அமரர் சௌமியமூர்த்தி தொண்டமான், அக்காலத்தில் நடத்திய சாத்வீகப் போராட்டங்கள் காரணமாகவே, மலையக மக்கள் தாம் இழந்த பல உரிமைகளை மீண்டும் பெற்றெடுத்தனர். இதனை நான் நன்கு அறிந்தவன் என்பதால், அவரது பெயருக்கு கலங்கம் ஏற்படுவதை தடுப்பதற்காகவே இவ்வாறு முறையிடுகின்றேன்” என்றார்.