சம்பூர் காணிகளை மீளவும் கையளிக்கவும்
சம்பூர் அனல் மின் நிலையத்தின் பாவனைக்கான நிலக்கரி கொண்டுசெல்லல் மற்றும் கடல் நீர்கொண்டுசெல்லல் என இரு பாதைகளுக்கும் தேவைக்கென எடுக்கப்பட்ட தமது காணிகளை மீளக்கையளிக்குமாறு கோரி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்குக் கடிதமொன்று அனுப்பிவைக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் பிரதேச செயலாளர் பிரிவில் பாதிக்கப்பட்ட, சம்பூர் மற்றும் கடற்கரைச்சேனை கிராமங்களில் வசிக்கும் சுமார் 30க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களே இவ்வாறு கடிதம் அனுப்பிவைத்துள்ளனர். அக்கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, எந்தவித அடிப்படை வசதிகளுமின்றி, நலன்புரி நிலையங்களில் கடந்த 10 வருடகாலமாக, அகதி வாழ்க்கை வாழ்ந்த எங்களை, தாங்கள் ஆட்சிக்கு வந்ததும் மீளக்குடியேற்றியிருந்தீர்கள். அதற்கு, எமது நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.
இடம்பெயர்ந்திருந்த போது, எமக்குச் சொந்தமான பல ஏக்கர் காணிகளை, முன்னைய (2015 முன்) அரசாங்கம், நடைமுறையிலுள்ள சட்ட ஏற்பாட்டுக்கு முரணான முறையில் அரசுடைமையாக்கியது. அபிவிருத்தி செய்யப்பட வேண்டிய கனரகத் தொழில்களுக்கான ஒரு விசேட வலயமென காணிகள், வர்த்தமானப் பத்திரிகையின் ஊடாகப் பிரகடனப்படுத்தப்பட்டன. 2015ஆம் ஆண்டு உங்களுடைய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர், கனரகத் தொழில்களுக்கான விசேட வலயத்துக்கென வழங்கப்பட்ட 818 ஏக்கர் 02 றூட் 35.38 பேர்ச் காணிகளும் வர்த்தகமானிப் பத்திரிகை அறிவித்தல் ஊடாக இரத்து செய்யப்பட்டது.
பின்னர் இடம்பெயர்ந்திருந்த மக்களை உத்தியோகபூர்வமாக இரண்டு தடவைகளில் (19.08.2015) (25.03.2016) குடியேற்றியது. இந்நிலையில், மூதூர் பிரதேச செயலகம் ஊடாக கடற்கரைச்சேனை கிராமப்பிரிவிலுள்ள 46 குடும்பங்களுக்கும், சம்பூர் கிராமங்களிலுள்ள 16 குடும்பங்களுக்குரிய காணிகள் அனைத்தும் அனல் மின் நிலையத்தின் பாவனைக்கான நிலக்கரி கொண்டுசெல்லல் மற்றும் கடல் நீர்கொண்டுசெல்லல் என இரு பாதைகளுக்கும் ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிவுறுத்தப்பட்டிருந்தது.
எமது காணிகளைக் கோரி, உரிய அரச அதிகாரிகளிடம் நாங்கள் பலதடவைகளில் மனுக்களை வழங்கி இருந்தும் இன்றுவரை எமக்குரிய காணிகள் ஒன்றுமே விடுவிக்கப்படாமலே இருந்தது. இந்நிலையில், அனல் மின் நிலையம் தொடர்பான மனு, 2016 செப்டெம்பர் மாதம் 13ஆம் திகதியன்று உயர் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இதன்போது சம்பூரில் அனல் மின் நிலையம் அமைக்கப்படமாட்டாது என உரிய அமைச்சினால் கூறப்பட்டது. உயர் நீதிமன்றத் தீர்ப்பின் பிரகாரம் சம்பூரில் அனல் மின் நிலையம் இல்லை. எனினும், நிலக்கரி மற்றும் நீர் கொண்டுசெல்வதற்காக பெறப்பட்ட எமது குடியிருப்புக் காணிகள், இன்று வரை விடுவிக்கப்படவில்லை. மின்நிலையத்திட்டத்துக்கென ஒதுக்கப்பட்ட 505 ஏக்கர் மற்றும் மின்சாரசபைக்கென ஒதுக்கப்பட்ட 40 ஏக்கருக்குப் புறம்பாக எமது குடியிருப்புக்களை ஊடறுத்து மேற்படிகாணிகள் எடுக்கப்பட்டுள்ளன.
இதனால் எமது பலகுடும்பங்களின் பாரம்பரிய வாழ்வாதார, குடியிருப்பு முயற்சிகள் முடக்கப்பட்டுள்ளன. அனல் மின்நிலையம் இல்லை என்றால், அதற்கான நிலக்கரி, நீரும் தேவையற்றதாகிறது. எனவே, குறித்த எமது காணியையும் விடுவித்து, எமது இயல்பானவாழ்க்கைக்கு வழி சமைத்துத் தருமாறும் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.