விடுதலைப் புலிகள் இல்லாமையே முறைகேடுகளுக்கு காரணம்: ஐங்கரநேசன்
விடுதலைப் புலிகளின் காலத்தில் தவறு செய்தால் தண்டனை கிடைக்கும் என்று தெரிந்திருந்தமையால் முறைகேடுகள் இடம்பெற வில்லையென்றும் விடுதலைப்புலிகள் இல்லாத காரணத்தினாலேயே கூட்டுறவுத்துறையில் பல்வேறு முறைகேடுகள் இடம்பெற்று வருவதாகவும் வடக்கு மாகாண விவசாய, கால்நடை, கூட்டுறவுத்துறை அமைச்சர் பொ.ஐங்கரநேசன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணம் ஏழாலையில் நேற்று (சனிக்கிழமை) நடைபெற்ற ஏழாலை மேற்கு ஸ்ரீ சித்திவிநாயகர் ஐக்கிய நாணய சங்கத்தின் கூட்டுறவாளர் தின விழாவில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். இதன்போத அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-
”ஸ்ரீமாவோ பண்டாரநாயக்க பிரதமராகவும் என்.என்.பெரேரா நிதியமைச்சராகவும் இருந்த காலகட்டத்தில் கூட்டுறவுக்குக் கிடைத்த வருமானமும் பெருமையும் புகழும் அதிகம். பொருளாதார கொள்கை பலம் மிக்கதாகவிருந்தது. உள்நாட்டு உற்பத்திகளுக்கான சரியான சந்தை வாய்ப்புப் பெற்றுத் தரப்பட்டது. ஆகவே, அவர்களுடைய கொள்கை மூலம் விவசாய உற்பத்திகளைக் கூட்டுறவுச் சங்கங்களின் ஊடாக விற்பனை செய்யக் கூடியதாக இருந்தது.
ஆனால், இன்று இலங்கை அரசாங்கம் விரும்பினாலும்கூட எந்தவொரு சந்தர்ப்பத்திலும் வெளிநாட்டு உற்பத்திகள் இலங்கைக்குள் நுழைவதைத் தடை செய்ய முடியாது. இதுவே திறந்த பொருளாதாரக் கொள்கை அல்லது உலக மயமாதலின் நியதியாகவுள்ளது.
எனினும், கூட்டுறவு இயக்கம் எப்போதும் தோற்றுப் போகாது. ஆகவே, கூட்டுறவாளர்கள் எப்போதும் மனத்தைச் சோரவிட வேண்டிய அவசியமில்லை” என்றார்.