Breaking News

அலெப்போவில் போர்க்குற்றங்கள்: சிறிலங்காவில் நேற்று, சிரியாவில் இன்று



கடந்த சில நாட்களாக சிரியாவின் அலெப்போ நகர மக்களுக்கெதிராக ரஷ்ய சிரிய அரச படைகள் மேற்கொண்டு வரும் கொடூரமான போர்க்குற்றங்கள் 2009ம் ஆண்டின்போது சிறிலங்கா அரசு ஈழத் தமிழ் மக்கள் மீது நடத்திய இனப்படுகொலையை நினைவுக்குக் கொண்டு வருகின்றது.

இவ்வாறு நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமர் பணிமனையினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் மேலும், குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

அனைத்துலக சமூகம் மீள இம்முறையும் அப்பாவிக் குடிமக்களின் உயிர்களைப் பாதுகாப்பதிலும், சர்வதேச ஒழுங்கமைப்புகள் மற்றும் சட்டமுறை விதிகளைப் பேணுவதிலும் இழிவான வகையில் தவறியுள்ளன.

பல்வேறு மனித உரிமை அமைப்புகள் ஐ நா வின் சிரிய விவகாரம் தொடர்பான விசாரணைக் குழுவிடம் முன்வைத்த ஆவணம் ஒன்றின்படி அலெப்போ பகுதியில் ரசியாவின் வான்வழித் தாக்குதல்கள் மூலம் 380 சிறுவர்கள் உட்பட 1207 பொதுமக்கள் கொல்லப்பட்டுள்ளனர். பொதுமக்கள் கொல்லப்படுவதைத் தடுக்கும் சர்வதேச சட்டங்களுக்கு முரணான வகையில், குறிப்பாக ஜூலை முதல் ஜனவரிக்கு உட்பட்ட காலத்தில், 304 தாக்குதல்கள் நிகழ்த்தப் பட்டுள்ளதையும் இவ் ஆவணம் குறிப்பிட்டுள்ளது.

2009 நடுப்பகுதியில் No Fire Zone என்ற பாதுகாப்பு வலயத்தில் தஞ்சமடைந்திருந்த தமிழ் மக்களை சிறிலங்கா அரச படையினர் சுற்றிவளைத்துக் குண்டு பொழிந்து கொன்றொழித்த போது உயிரிழந்தோர் ஒரு இலட்சத்தினர் என மதிப்பிடப் பட்டது. அந்நேரத்தில் ஐ நா வும் உலக சமூகமும் சிறிலங்கா அரசின் தாக்குதல் அழிவுகளைக் கண்டும் காணாமல் இருந்ததும் இக்குற்றங்கள் சார்பில் இன்றுவரை ஒருவர் கூடத் தண்டிக்கப்படவில்லை என்பதோடு இக்குற்றம் புரிந்தோரை சட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்துவதில் உலக ஆதிக்க வலுவுள்ளோர் யாரும் ஆர்வம் காட்டுவதாயும் இல்லை.

முள்ளிவாய்க்காலில் உயிரிழந்தோருக்கென நீதி தேடுவதில் நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் எது வந்தாலும் எத்தனை காலமெடுத்தாலும் பற்றுறுதியுடன் செயற்படும். எமது அத்தகை முயற்சிகளை நாம் தமிழர் சார்பில் மட்டும் மேற்கொள்ளவில்லை. உலகெங்கும் பல்வேறு அரசுகளும் அவர்களது கூலிப் படைகளும் தத்தமது அதிகாரத்தையும் நில ஆதிக்கத்தையும் நிலைநாட்டவென மேற்கொள்ளும் யுத்தங்களில் மீண்டும் மீண்டும் ‘தவிர்க்க முடியாத அழிவு’ (collateral damage) எனக் குறியிடும் அளவுக்கு மடிந்துபோகும் எண்ணற்ற பொதுமக்கள் சார்பிலும் நாம் இப்போராட்டத்தை மேற்கொண்டுள்ளோம்.

இரண்டாம் உலக யுத்தத்தின் அழிவுக்குப் பின்னர் ஐரோப்பாவில் நாற்சிகள் மேற்கொண்ட கொடுமைகள் மீளவும் நிகழாமல் பார்ப்பதற்கென உலகின் வலுமிக்க சக்திகள் மத்தியில் அனைத்துலக சட்டங்களை மதிக்கும் தன்மையும், பிணக்குகள் ஏற்படும் இடத்தில் இராஜதந்திர வழியிலான பேச்சு வார்த்தைகள் மூலம் அவற்றினைத் தீர்த்து வைப்பர் என்ற பலத்த எதிர்பார்ப்பும் இருந்து வருகிறது. அவ்வகை உன்னதமான இலட்சியங்களுக்கமைய நடப்பதற்குப் பதிலாக உலக சமூகம் இன்று தானும் அதே குற்றங்களை அடிக்கடி கையில் எடுக்கும் குற்றவாளியாகவே தென்படுகிறது.

சர்வதேச மயப்படுத்தப்படட இன்றைய உலக ஒழுங்கில் இப்பூவுலகில் குடிமக்களுக்குச் சரியான நீதியை வழங்கவல்ல, உண்மையிலேயே பக்கசார்பற்ற, சுயாதீனமாக இயங்கவல்ல உலக நிறுவனங்கள் முன்னென்றும் இல்லாத அளவுக்குத் தேவைப்படுகின்றன.

யுத்தக் குற்றம் புரிந்தோர் தத்தமது நாடுகளினது இறையாண்மை என்ற கவசத்தின் பின்னால் மறைத்துப் பாதுகாக்கப்படும் நிலைமை இருக்கக் கூடாது. அவ்வகைக் குற்றம் புரிந்தோர் விசாரிக்கப் பட்டு தண்டிக்கப்படாத போது முழு மானிடத்தின் எதிர்காலமுமே கேள்விக்குள்ளாகிறது.

அத்தகைய உலகமட்ட நிறுவனங்களை உருவாக்குவதெனில் மக்களது சார்பில் இயங்கத் தவறி உலக அரசாங்கங்களின் பிரதிநிதியாகிவிட்ட ஐ நா உட்பட்ட நிறுவனங்களிடையே தீவிரமானதும் ஆழமானதுமான மறுசீரமைப்புத் தேவைப் படுகிறது. அத்தகைய மறுசீரமைப்பு நிகழுமானால் அதுவே சர்வதேச ஒழுங்கும் நீதியும் முறிவடைந்ததன் காரணமாக அர்த்தமற்ற வகையில் அநியாயச் சாவடைந்த அனைத்து உயிர்களுக்குமான பிராயச்சித்தமாக அமையும். அப்போது உலகெங்குமுள்ள சாதாரண குடிமக்கள் மனதில் தாமும் வெறும் எண்ணிக்கையாகிப் போய்விடாமல் மனிதர்களாக மதிக்கப்படும் வாய்ப்பு உண்டென்று நம்பிக்கை பெறுவர்.