Breaking News

ஒட்டாவா பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு பாதுகாப்பு அமைச்சு முட்டுக்கட்டை



இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும் என்று சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.

ஒட்டாவா உடன்பாடு என்று அழைக்கப்படும், கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் 160 நாடுகள் அமைப்புகள் கையெழுத்திட்டுள்ளன.

இந்தப் பிரகடனத்தில் கையெழுத்திடுவதற்கு சிறிலங்கா அமைச்சரவை கடந்த மார்ச் மாதம் அனுமதி அளித்திருந்தது.

எனினும், சிறிலங்கா பாதுகாப்பு அமைச்சு இன்னமும் இதற்கு பச்சைக்கொடி காண்பிக்கவில்லை.

இதுகுறித்து பிரிஐ செய்தி நிறுவனத்துக்கு கருத்து வெளியிட்டுள்ள சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி, ”இராணுவ முகாம்களைப் பாதுகாப்பதற்கான மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்ட பின்னரே, கண்ணிவெடிகளைத் தடை செய்யும் அனைத்துலகப் பிரகடனத்தில் சிறிலங்கா அரசாங்கம் கையெழுத்திடும்.

இந்த உடன்பாட்டில் சிறிலங்கா கையெழுத்திடாமல் இருப்பதற்கும், நல்லிணக்கத்துக்கும் எந்த தொடர்பும் இல்லை“ என்று தெரிவித்துள்ளார்.