Breaking News

மெரினாவை நோக்கி படையெடுக்கும் இளைஞர்கள் கூட்டம்: தமிழகத்தில் வெடித்தது அறவழி புரட்சி

ஜல்லிக்கட்டு நடைபெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் போராட்டம் உச்சக் கட்டத்தை அடைந்து வருகிறது. 

பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டு நடைபெற அனுமதி கிடைத்துவிடும் என்று அனைத்து தரப்பு மக்களும் நம்பிக் கொண்டிருந்தனர். அரசியல்வாதிகள் தரப்பிலும் அப்படி ஒரு வாக்குறுதி தொடர்ச்சியாக கொடுக்கப்பட்டு வந்தது. 

ஆனால் பொங்கலுக்குள் ஜல்லிக்கட்டுக்கு அனுமதி கிடைக்காத நிலையில் மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்த தொடங்கினர். அலங்காநல்லூரில் தொடங்கிய இந்த போராட்டம் மாநிலம் முழுவதும் பரவியது. 

குறிப்பாக சென்னை மெரினா கடற்கரையில் சில நூறு மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் மட்டுமே தொடங்கிய போராட்டமானது பெரிய புரட்சியாக தற்போது உருமாறியுள்ளது. 

பல்வேறு இடங்களில் இருந்து கட்டுக்கடங்காத கூட்டம் மெரினாவை நோக்கி வந்து கொண்டே இருக்கிறார்கள். இளைஞர்கள் மட்டுமல்லாமல் பெண்கள், தனியார் நிறுவன ஊழியர்கள் என பல்வேறு தரப்பினரும் மெரினாவில் குவிந்து வருகின்றனர்.

நேற்று மாலை நிலவரப்படி மெரினாவில் சுமார் 50 ஆயிரத்திற்கும் அதிகமானோர் கூடி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

மதுரை அலங்காநல்லூரிலும் 4-வது நாளாக போராட்டம் வலுவாக நடைபெற்று வருகிறது. அதேபோல் நேற்று இரவு மதுரை தமுக்கம் மைதானத்தில் போராட்டம் தொடங்கியுள்ளது. இதில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டுள்ளனர்.