Breaking News

கிரவல் அகழ்வினால் முல்லைத்தீவில் மண்ணரிப்பு ஏற்படும் அபாயம்: விவசாயமும் பாதிப்பு


முல்லைத்தீவு மாவட்டம் மாந்தை கிழக்கு பிரதேச செயலாளர் பிரிவிற்கு உட்பட்ட வன்னிவிளான் குளம் பகுதியில் இடம்பெற்றுவரும் கிரவல் அகழ்வினால், அப்பிரதேசத்தில் மண்ணரிப்பு ஏற்படும் அபாயம் காணப்படுவதோடு சுற்றியுள்ள குடியிருப்புகளும் பாதிக்கப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.


குறித்த பகுதியில் நிலங்களை விலைக்கு கொள்வனவு செய்யும் கிரவல் வியாபாரிகள், அருகில் இருக்கும் குடியிருப்புக்களை கருத்திற்கொள்ளாது கிரவல் அகழ்வில் ஈடுபடுவதாக தெரிவிக்கும் வன்னிவிளான் குளம் கமக்காரர் அமைப்புச் செயலாளர் பூபாலன், சுமார் 15 குடியிருப்பாளர்கள் மற்றும் விவசாயிகளும் பாதிப்பை எதிர்கொண்டுள்ளதாக குறிப்பிட்டதோடு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.

கிரவல் அகழ்வுக்காக கடந்த காலத்தில் தோண்டப்பட்ட குழிகள் இன்னும் மூடப்படவில்லையென அப்பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் குறிப்பிட்டுள்ளார். கடந்த காலத்தில் பிரதேச செயலாளர் மற்றும் பொலிஸாரும் பொதுமக்களும் இணைந்து கிரவல் அகழ்வை தடுத்து நிறுத்தியிருந்த போதும் தற்போதுள்ள செயலாளர் அசமந்தப் போக்குடன் செயற்படுவதாக அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.

தற்போது மழை ஆரம்பித்துள்ள நிலையில், கிரவல் அகழ்வுக்காக தோண்டப்படும் குழிகளில் நீர் தேங்கி பயிர்கள் நாசமடைவதோடு, மண்ணரிப்பு அபாயத்தையும் இப்பிரதேசம் எதிர்கொண்டுள்ளது. இவற்றைக் கருத்திற்கொண்டு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் இதனை தடுத்து நிறுத்த வேண்டுமென இப்பிரதேச மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.