Breaking News

விக்னேஸ்வரனை வரவேற்பதிலும் சந்திப்பதிலும் நான் பெருமையடைகின்றேன் - ஒன்ராறியோ முதல்வர்

வட மாகாண முதலமைச்சர் சி.வி. விக்னேஸ்வரனை வரவேற்றதிலும் சந்தித்ததிலும் தான் பெருமையடைவதாக ஒன்ராறியோ முதல்வர்  கத்தலின் வெயின்  தெரிவித்துள்ளார்.


ஒன்ராறியோவுக்கு விஜயத்தை மேற்கொண்டுள்ள வட மாகாண முதல்வர் சி.வி. விக்னேஸ்வரன்,  ஒன்ராறியோ முதல்வர்  கத்தலின் வெயினை சந்தித்தார்.

இந்த இருதரப்புகளுக்கிடையான சந்திப்பு, இரு தரப்பு அரச தலைவர்களுக்கும் முதல் தடவையாக அமைந்ததுடன், ஒன்ராறியோ - வட மாகாணங்களுக்கிடையான உறவை மேலும் பலப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்பாகவும் அமைந்துள்ளது.

வடமாகாண முதலமைச்சர்  நீதியரசர் சி.வி. விக்னேஸ்வரனை, கத்தலின்  தனது அலுவலகத்தில் வரவேற்றதோடு ஒரு காத்திரமான சந்திப்பையும் மேற்கொண்டார். 

பொருளாதார அபிவிருத்தி, பெண்களை வலுவூட்டல், நிறுவன நல்லாட்சி மற்றும் பொதுசன சேவை நிறுவனங்களின் துறைசார் விருத்திகள் உட்பட ஒன்ராறியோ - வடமாகாண உறவின் முகிழ்வையும் ஓத்துழைப்பையும் நல்குவதுடன் அதனை மேலும் வலுப்படுத்துவதில் ஒன்ராறியோ   விரும்புகின்றது இந்த சந்திப்பின் போது கத்தலின் தெரிவித்துள்ளார். 

மேலும் இந்த சந்திப்பில், வட மாகாணத்தில் போரினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களை சமத்துவமான முறையிலும் எதிர்காலத்தில் நின்றுநிலைக்கக் கூடிய வகையிலும் ஒன்ராறியோவின் சிறப்பான சேவை அணுகுமுறைகளையும், அனுப அறிவுகளையும் மற்றும் கொள்கைசார் விடயங்களையும் பகிர்வது பற்றி ஆக்கபூர்வமாகப் பேசப்பட்டது. 

இச் சந்திப்பு முடிவில் கருத்து தெரிவித்த ஒன்ராறியோ முதல்வர்  கத்தலின் வெயின்,

"ஒன்ராறியோவுக்கு வட மாகாண முதல்வர் சி.வி. விக்கினேஸ்வனை வரவேற்பதிலும் சந்திப்பதிலும் நான் பெருமையடகின்றேன். இரு மாகாணங்களிலும் பொதுவாக காணப்படும் சாத்தியப்பாடுகளில் கூட்டுச் செயற்பாடுகள் பற்றி மிகவும் காத்திரமாக உரையாடப்பட்டது. வட மாகாணத்தை சமத்துவமான முறையிலும் எதிர்காலத்தில் நின்றுநிலைக்கக் கூடிய வகையிலும் வழிநடாத்தும் முதலமைச்சரின் முயற்சிகளுக்கு மேலும் ஆதரவு வழங்குவதற்கான வாய்ப்புக்களை முன்னெடுப்பதற்கு ஆவலாக உள்ளேன்"  என தெரிவித்துள்ளார்.