நல்லிணக்க செயலணியின் பரிந்துரைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும்
நல்லிணக்க பொறிமுறை குறித்த ஆலோசனை செயலணியின் பரிந்துரைகளை முழுமையாக செயல்படுத்த தேசிய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என உலக தமிழர் பேரவை வேண்டுகோள் விடுத்துள்ளது.
அருட்தந்தை இமானுவேல் அடிகளார் தலைமையிலான உலக தமிழர் பேரவையினால் வெளியிடப்பட்ட ஊடக அறிக்கையிலேயே இவ்விடயம் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க் குற்றங்கள் குறித்த விசாரணையில் சர்வதேச நீதிபதிகளை ஈடுபடுத்த வேண்டும் என ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளர் செயிட் அல் ஹுசைன் பரிந்துரைத்திருந்தார். அவரது பரிந்துரையை இந்த செயலணியின் அறிக்கையும் வலியுறுத்தியுள்ளது.
அதேவேளை, இராணுவத்தினரின் வசமுள்ள காணிகள் உரிய மக்களிடம் வழங்கப்பட வேண்டும், தடுப்பு முகாம்களில் உள்ளவர்கள் விடுவிக்கப்பட வேண்டும், பயங்கரவாத தடைச்சட்டம் நீக்கப்பட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு விடயங்கள் இந்த அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டுள்ளன.
நல்லிணக்க பொறிமுறை குறித்த அறிக்கையானது நாடளாவிய ரீதியில் பல்வேறு அமர்வுகள் மற்றும் சந்திப்புகளை நடத்தி பக்கசார்பற்ற வகையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே இதில் பரிந்துரைக்கப்பட்டுள்ள விடயங்கள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும். அதற்கான உரிய நடவடிக்கைகளை தேசிய அரசாங்கம் தைரியமாக முன்னெடுக்க வேண்டும் என உலக தமிழர் பேரவை மேலும் வலியுறுத்தியுள்ளது