Breaking News

பொருத்து வீட்டுத்திட்டத்தை நிராகரியுங்கள்

பொருத்து வீடுகளுக்கான விண்ணப்பங்களை நிராகரித்து, கல் வீடுகள் தான் வேண்டுமென்று, அமைச்சின் அதிகாரிகளிடம் எழுத்துமூலம் அறிவிக்குமாறு, வீட்டுத்தேவையுடைய மக்களிடம், நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா, கோரிக்கை விடுத்துள்ளார்.  


இது தொடர்பில், அவர் விடுத்துள்ள அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,  

“பொருத்து இரும்பு வீட்டுத்திட்டத்துக்கு, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பதினாறு நாடாளுமன்ற உறுப்பினர்களும் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களும், உயர்மட்ட அரசியல் தலைவர்களும், எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்.  

மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுக்கூட்டங்களிலும் மாகாண சபைகளிலும், பொருத்து வீட்டுத் திட்டத்தை எதிர்த்து, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. நாடாளுமன்றத்தில், எனது தலைமையில் உள்ள மீள்குடியேற்ற அமைச்சு உள்ளிட்ட மேற்பார்வைக்குழுவிலும், இத்திட்டம் வேண்டாம் எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.  

யாழ்ப்பாணத்தில், 8 இலட்சம் வீட்டுத்திட்டங்கள், வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டு வருகின்றன. ஆனால், கல்லில்லை, மணலில்லை, நீரில்லை என்ற அற்ப காரணங்களைக் காட்டி, மக்களை ஏமாற்றுகின்றனர்.  

போரினால் அழிந்து போயுள்ள வடக்கு - கிழக்குப் பிரதேசங்களுக்கு, கல், சீமெந்தினால் கட்டப்பட்ட ஒரு இலட்சத்து 30 ஆயிரத்துக்கும் அதிகமான வீடுகள் தேவை” என, அவர் அதில் மேலும் தெரிவித்துள்ளார்.