Breaking News

யுத்த பாதிப்புகளிலிருந்து மீளவே நல்லாட்சியை ஏற்படுத்தினோம்: விஜயகலா



யுத்த காலத்தில் செல்வீச்சுக்கு மத்தியில், பதுங்கு குழிகளில் தங்கி கல்விகற்று வடக்கு கிழக்கு மாகாண மாணவர்கள் பல்கலைக்கழகம் சென்றிருந்த நிலையில், யுத்தத்தின் பின்னர் மிகவும் பாதிக்கப்பட்ட மாகாணமாக வடக்கு கிழக்கு காணப்படுகின்றதென்றும் இதனை மாற்றியமைக்கவே நல்லாட்சி அரசாங்கத்தை கொண்டுவந்தோம் எனவும் சிறுவர் மற்றும் மகளிர் விவகார ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

கிளநொச்சியில் நேற்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற, யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு கற்றல் ஊக்குவிப்பு நிதி வழங்கும் நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

தற்போது க.பொ.த. சாதாரண தரத்தில் கல்விகற்பவர்கள் அனைவரும் உயர்தரம் கற்பதற்கான வாய்ப்பை அரசாங்கம் ஏற்படுத்திக்கொடுத்துள்ள நிலையில், பெற்றோர் தமது பிள்ளைகளின் கல்வியில் அதிக சிரத்தை எடுக்கவேண்டுமென ராஜாங்க அமைச்சர் குறிப்பிட்டார். குறிப்பாக பிள்ளைகள் வீதிகளில் நிற்பதையும் வேறு இடங்களுக்கு வேலைக்கு செல்வதையும் உடன் நிறுத்த வேண்டுமென குறிப்பிட்டார்.

குறிப்பாக வடக்கு கிழக்கில் இவ்வாறான சிறுவர்களை இனங்கண்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக குறிப்பிட்ட விஜயகலா மகேஸ்வரன், மலையகத்தில் இச் செயற்பாடு தொடர்ந்து செல்வதாக சுட்டிக்காட்டியதோடு, இதனை தடுத்து நிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.