சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது - THAMILKINGDOM சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது - THAMILKINGDOM
 • Latest News

  சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது  தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனைப் படுகொலை செய்ய முயற்சித்தார் என்ற குற்றச்சாட்டில், மற்றொரு சந்தேக நபர் மன்னாரில் கைது செய்யப்பட்டுள்ளார் என்று கிளிநொச்சி நீதிவான் நீதிமன்றத்துக்கு பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நேற்று அறிவித்துள்ளனர்.

  மன்னாரைச் சேர்ந்த விஜயன் என்ற ஐந்தாவது சந்தேக நபரே கைது செய்யப்பட்டுள்ளார் என்று நீதிமன்றத்துக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

  சுமந்திரனைக் கொலை செய்ய முயன்ற குற்றச்சாட்டில், ஏற்கனவே கைது செய்யப்பட்ட நால்வரிடம் நடத்தப்பட்ட விசாரணைகளை அடுத்தே ஐந்தாவது சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

  கைது செய்யப்பட்டுள்ள ஐந்து சந்தேக நபர்களும், போதைப்பொருள் குற்றச்சாட்டு மற்றும் அரசியல்வாதி ஒருவரை படுகொலை செய்யும் சதி குற்றச்சாட்டின் அடிப்படையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவினர் நீதிமன்றத்தில் தெரிவித்தனர்.

  நேற்று பயங்கரவாத தடுப்பு பிரிவினரால் மூன்று அறிக்கைகள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. சந்தேக நபர்களின் தொலைபேசிகளை ஆய்வு செய்வதற்கும் அவர்கள் நீதிமன்றத்தின் அனுமதியைக் கோரியுள்ளனர்.

  இந்தக் குற்றச்சாட்டில் ஏற்கனவே நான்கு புனர்வாழ்வு அளிக்கப்பட்ட முன்னாள் போராளிகள் கைது செய்யப்பட்டிருந்தனர்.

  திருகோணமலையைச் சேர்ந்த ஞானசேகரலிங்கம் ராஜ்மதன், மருதங்கேணியைச் சேர்ந்த லூயிஸ் மரியாம்பிள்ளை, கிளிநொச்சியைச் சேர்ந்தவர்களான முருகையா தவேந்திரன் மற்றும் காராளசிங்கம் குலேந்திரன் ஆகியோர் கடந்த 14ஆம் நாள் கைது செய்யப்பட்டனர்.

  இவர்களிடம் இருந்து கிளைமோர் குண்டு, குண்டுகளை வெடிக்கவைக்கும் கருவிகள், பெருமளவு கேரள கஞ்சா ஆகியவற்றைக் கைப்பற்றியிருப்பதாக, பயங்கரவாத தடுப்பு பிரிவு காவல்துறையினர் கடந்த 20ஆம் நாள் கிளிநொச்சி நீதிமன்றத்தில் தெரிவித்திருந்தனர்.

  சந்தேக நபர்கள் தற்போது அனுராதபுர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். இவர்களை, யாழ்ப்பாணம் சிறைச்சாலைக்கு அனுப்புவதற்கு நேற்று கிளிநொச்சி நீதிமன்றத்தின் உத்தரவைப் பெறுவதற்கு, இவர்களின் சட்டவாளர்கள், முயற்சிகளை மேற்கொண்டனர்.

  எனினும், இவர்களை தொடர்ந்து பெப்ரவரி 13ஆம் நாள் வரை விளக்கமறியலில் வைக்க கிளிநொச்சி நீதிவான் உத்தரவிட்டுள்ளார்.

  ஐந்து சந்தேக நபர்களும் பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் கைது செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது,
  • Web site Comments
  • Facebook Comments
  Item Reviewed: சுமந்திரன் கொலை முயற்சி – ஐந்தாவது சந்தேகநபர் மன்னாரில் கைது Rating: 5 Reviewed By: Tamilkingdom
  Scroll to Top