யாழ்.குடாநாட்டிலிருந்து இராணுவத்தை குறைக்க முடியாது! - யாழ்.கட்டளைத் தளபதி
யாழ்.குடாநாட்டில் நிலை கொண்டுள்ள இராணுவ வீரர்களின் எண்ணிக்கையை குறைக்கும் சந்தர்ப்பம் இன்னும் ஏற்படவில்லை. என்று யாழ். மாவட்ட கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க கொழும்பு வார இதழ் ஒன்றுக்கு வழங்கிய செவ்வியின் போது தெரிவித்தார்.
அவர் வழங்கிய செவ்வியின் முழுவடிவம் வருமாறு:-
கேள்வி – தமிழ் அரசியல்வாதிகள் மற்றும் பொதுமக்கள் யாழ்.குடாநாட்டில் பெரும்தொகையான இராணுவத்தினர் குவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த எண்ணிக்கை குறைக்கப்பட வேண்டும் எனவும் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வருகின்றனர். நீங்கள் யாழ்.குடாநாட்டில் கட்டளைத் தளபதியாகப் பொறுப்பேற்ற பின்னர் அங்கு நிலைகொண்டுள்ள இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைத்துள்ளீர்களா?
பதில் – நாங்கள் யாழ்.குடாநாட்டில் இராணுவம் நிலைகொண்டுள்ள பிரதேசங்களைக்குறைத்து வருகின்றோம். இராணுவத்தினரின் எண்ணிக்கையை அல்ல. இராணுவத்தினரின் எண்ணிக்கையை குறைக்க வேண்டிய காலம் இன்னும் வரவில்லை.
இதற்கு காரணம் சமீபத்தில் ஆவா குழு என்றொரு வன்முறைக்குழு உருவாகியது. இதுபோன்ற குழுக்கள் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக இருக்கும் பட்சத்தில் அவற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர வேண்டும்.
இதேவேளை முன்னாள் புலி உறுப்பினர்கள் 2963 பேர் யாழ்.குடாநாட்டில் வசிக்கின்றனர். இவர்கள் அனைவரும் புனர்வாழ்வு அளிக்கப்பட்டவர்கள். புனர்வாழ்வுக்கு உட்படாத 300க்கும் அதிகமான முன்னாள் புலி உறுப்பினர்களை நாங்கள் இனம் கண்டுள்ளோம்.
இந்தியா, பிரான்ஸ், லண்டன் ஆகிய நாடுகளிலிருந்து இவர்களை மீண்டும் பயங்கரவாதத்தில் ஈடுபடுத்த முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு நிதி அனுப்பும் சூழ்நிலையும் இன்னும் இருக்கின்றது.
புலம்பெயர் அமைப்புகளுடன் முன்னாள் புலி உறுப்பினர்கள் தொடர்பு வைத்திருப்பதும் எமக்குத் தெரியும். எனவே இவர்கள் மீண்டும் பயங்கரவாத நடவடிக்கையில் ஈடுபடாமல் கண்காணிப்பதும் எமது பொறுப்பாகும்.
கேள்வி – அப்படியாயின் யாழ்.குடாநாட்டில் இராணுவத்தினரின் எண்ணிக்கையைக் குறைப்பதற்கு முடியாது என்கின்றீர்களா?
பதில் – இப்போது குறைக்க முடியாத சூழ்நிலையே காணப்படுகின்றது. இருந்தும் இராணுவத்தினர் நிலைகொண்டுள்ள காணிகளை படிப்படியாக மீள ஒப்படைத்து வருகின்றோம்.
கேள்வி – இன்றுவரை மக்களின் காணிகளில் எத்தனை ஏக்கர் காணிகள் மக்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன?
பதில் – 2009ம் ஆண்டு யுத்தம் முடிவடைந்த போது யாழ்.குடாநாட்டில் மாத்திரம் 26982 ஏக்கர் மக்களுக்குச் சொந்தமான காணிகளை இராணுவம் தம்வசம் வைத்திருந்தது. அதில் இன்றுவரை 22168 ஏக்கர் மக்களின் காணிகளை நாங்கள் விடுவித்துள்ளோம். 4814 ஏக்கர் காணிகளையே இராணுவம் வைத்திருக்கின்றது.
யாழ்.குடாநாட்டில் பலாலி இராணுவ முகாமே மிகப் பெரியதாகும். பலாலியில் மாத்திரம் 3491 ஏக்கர் காணி இராணுவத்தினருக்குச் சொந்தமாக உள்ளது. இதில் 1000 ஏக்கர் பலாலி விமான நிலையத்துக்குச் சொந்தமானதாகும்.
காங்கேசன்துறை துறைமுகம் இன்று எவருக்கும் பயனற்றதாக காணப்படுகின்றது. 4814 ஏக்கர்களில் வீதிகள் மற்றும் அரச கட்டிடங்களும் காணப்படுகின்றன. இவற்றில் மக்களது காணிகள் பெரும்பாலும் இல்லையென்றே கூற வேண்டும்.
உண்மையில் கூற வேண்டுமாயின் இந்தக் காணிகளில் சீமேந்துக் கூட்டுத்தாபனக் காணிகளும் உள்ளடங்கியுள்ளன. யாழ்.குடாநாட்டைப் பொறுத்தவரையில் இராணுவத்தினரிடம் 1.67 வீதமான காணிகளே இருக்கின்றது.
கேள்வி – இராணுவம், வர்த்தகம் செய்கின்றது, யோகட் தயாரிப்பு மற்றும் விவசாய நடவடிக்கைகளை மேற்கொள்கின்றது என்ற குற்றச்சாட்டு நீண்டகாலமாக இருந்து வருகின்றது. இதன் உண்மை நிலை என்ன?
பதில் – இந்தக் காணிக்குள் எமது பண்ணை ஒன்று இருக்கின்றது. அது உண்மை அந்தப் பண்ணை விமானநிலைய ஓடுபாதைக்கு இருகில் நடத்தப்படுகின்றது. அங்கு உயரமான மரங்களை வளர்க்க முடியாது. நாங்கள் அந்தப் பிரதேசத்தில் பயிர்ச்செய்கைகளையே மேற்கொண்டோம். தற்போதும் மேற்கொண்டு வருகின்றோம்.
இதில் பெறப்படும் விளைபொருட்களை எமது ஒப்பந்தக்காரரிடமே கையளிக்கின்றோம். அவர்கள் எமக்கு விநியோகிக்கும் எமது விளைபொருட்களையே நாங்கள் எமது உணவுக்குப் பயன்படுத்தி வருகின்றோம்.
நாங்கள் எமது உற்பத்திகளை வெளியாருக்கு விற்பதில்லை என்பதை உறுதியாக கூறுகின்றேன். மொத்தத்தில் கூறுவதானால் எமது விவசாய நடவடிக்கைகள் காரணமாக அரசாங்கமே நன்மையடைகின்றது.
கேள்வி – இராணுவம் யோகட் தயாரித்து விற்பனை செய்கின்றது எனக் கூறப்படுவது பொய்யா?
பதில் – எம்மிடம் யோகட் உற்பத்தி செய்யப்படும் தொழிற்சாலை ஒன்றுள்ளது. இங்கு உற்பத்தியாகும் யோகட்களை நாங்கள் வெளியில் விற்பதில்லை. எமது இராணுவத்தினரின் பயன்பாட்டுக்காகவே அவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
கேள்வி – யுத்தம் முடிவடைந்த பின்னர் இந்தியாவிலிருந்து யாழ்.குடாநாடு வழியாக பெரும் தொகையான கேரளா கஞ்சா கடத்தி வரப்படுவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. இதனைத் தடுப்பதில் இராணுவத்தினரின் பங்களிப்பு யாது?
பதில் – நாங்கள் பொலிசாரின் கடமைகளில் தலையிடுவதில்லை. கடத்தி வரப்படும் கேரளா கஞ்சாவை கைப்பற்ற வேண்டிய பொறுப்பு பொலிசாரிடமே இருக்கின்றது. இருந்தும் கஞ்சா கடத்தல் தொடர்பாக இராணுவப் புலனாய்வுப் பிரிவுக்கு கிடைக்கும் தகவல்களை நாங்கள் பொலிசாருக்கு வழங்கி கஞ்சாக் கடத்தலை முறியடிக்கும் விதமாக எமது பங்களிப்பைச் செய்து வருகின்றோம்.
இன்று நாட்டில் அவசரகாலச் சட்டம் இல்லை. நாட்டில் சிவில் சட்டமே அமுலில் இருக்கிறது. இதற்குப் பொலிசாரே பொறுப்பேற்றுச் செயற்படுகின்றனர். எனவே நாங்கள் கேரளா கஞ்சாவை கைப்பற்றும் நடவடிக்கைகளில் ஈடுபடுவதில்லை.
கேள்வி – கடந்த காலங்களில் ஆவா குழு என்ற வன்முறைக்குழு ஒன்று இயங்கி வந்ததாக செய்திகள் வெளிவந்தன. இப்போது அந்த ஆவா குழு பொலிசாரால் ஒழிக்கப்பட்டு விட்டதாகத் தெரியவருகின்றது. சமுிப காலங்களில் மேலும் சில துப்பாக்கிக் குழுக்கள் இயங்கி வந்ததாகச் செய்திகள் வெளிவந்தன. கடந்த வாரம் கூட இப்படியான குழுவொன்று துப்பாக்கிகளுடன் அட்டகாசம் புரிந்ததாகத் தெரியவந்தது. இதுபோன்ற குழுக்களை அடக்க இராணுவத்தினரின் பங்களிப்பு என்ன?
பதில் – இந்தக் குழுக்கள் எப்படி உருவாகின்றன என்பதை முதலில் பார்க்க வேண்டும். தற்போது நாட்டில் அளவுக்கதிகமான சுதந்திரம் இருக்கின்றது. இந்தச் சுதந்திரம் தெற்கிலும் இருக்கின்றது. வடக்கிலும் இருக்கின்றது.
இப்போதுள்ள இளந்தலைமுறையினர் தமக்கு முன்னோடியாக செயற்படுபவர் ஒருவரை இனங்காணவில்லை. இவர்கள் கண்போகும் போக்கில் அலைந்து திரியத் தொடங்கி விட்டனர்.
இவ்வாறான நிலையில் அவர்கள் தென்னிந்தியத் திரைப்படங்களைப் பார்க்கின்றனர். அப்படங்களில் வேட்டியை மடிச்சுக் கட்டிக்கொண்டு பொலிசாரைத் தாக்கும் காட்சிகள் பெரும்பாலும் இடம்பெறுகின்றன. இதை நாங்கள் பல்ஸர் கலாசாரம் என்கின்றோம்.
மோட்டார் சைக்கிள்களில் வாளுடனும் துப்பாக்கியுடனும் அலைந்து திரியும் கலாசாரமே பல்ஸர் கலாசாரம். இது பயங்கரவாத செயற்பாடல்ல. நான்தான் வீரன் என்று பறைசாற்றும் செயற்பாடாகும்.
உதாரணமாக கைதடியில் ஓர் இளைஞர் குழு மற்றொரு இளைஞர் குழு மீது தாக்குதலை மேற்கொண்டது. இந்தத் தாக்குதலை நடத்தியவர்களும் தம்மை ஆவா குழுவென்று இனம்காட்டிக் கொண்டனர். இவர்களுக்கும் ஆவா என்ற பெயருக்கும் எதுவித சம்பந்தமும் இல்லை.
அதுவொரு பொதுச்சொல்லாகவே மாறிவிட்டது. சண்டியர்கள் பெரும்பாலும் இந்த ஆவா என்ற பெயரைப் பயன்படுத்துவதை வழமையாக கொண்டுள்ளனர். இதற்கு யாழ். குடாநாட்டில் கல்வித்தரம் குறைந்துள்ளதையும் காரணமாகக் கொள்ளலாம்.
நல்லூர் ஆலயத்தில் இன்று வேட்டி கட்ட வேண்டிய நிலை எழுந்துள்ளது. உள்ளூர் இளைஞர்கள் இன்று கட்டைக் காற்சட்டையுடன் வலம் வருகின்றனர். இவர்களுக்காகவே நல்லூர் ஆலயத்தில் மாற்றுடையாக வேட்டி கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
கலாசார சீரழிவுக்கு இதுவொரு அடையாளமாகும். இதைப் பார்த்து தமிழ் கலாசாரம் தரம் தாழ்ந்து போகின்றதே என நான் கவலையடைகின்றேன்.
இங்குள்ள அரசியல் தலைமைகள் இதுகுறித்து கவலைப்படுவதாகத் தெரியவில்லை. நடக்க முடியாதவை குறித்தே அவர்கள் கவலைப்படுகின்றனர்.
குறிப்பாக யாழ்.குடாநாட்டிலிருந்து முற்றுமுழுதாக இராணுவம் வெளியேற வேண்டுமெனக் கூறுகின்றனர். இராணுவம் ஏன் வெளியேற வேண்டும்? இதுபோன்ற நடக்கமுடியாத விடயங்கள் குறித்து அவர்கள் தங்களது நேரத்தை வெறுமனே செலவிடுகின்றனர்.
மக்களின் நலன் குறித்தும் கல்வித்தரம் குறித்தும் இந்த அரசியல்வாதிகள் கவலை கொள்வதாகத் தெரியவில்லை. பாடசாலைகளில் மலசலகூடங்களை இராணுவத்தினரே நிர்மாணித்து வருகின்றோம்.
கேள்வி – இதற்கான செலவை யார் தருவது?
பதில் – பொதுநலன் விரும்பிகளே இதற்கான செலவை மேற்கொள்கின்றனர். இதற்கு அரசாங்கம் பணம் ஒதுக்குவதில்லை. நான் கொழும்பு ஆனந்தாக் கல்லூரியின் பழைய மாணவன். இக்கல்லூரியின் பழைய மாணவர்களும் இதற்கு நிதி உதவி வழங்குகின்றனர்.
நாங்கள் யாழ்.குடாநாட்டில் மூன்று முக்கிய விடயங்கள் குறித்து கவனம் செலுத்தி வருகின்றோம். கல்வி, சுகாதாரம், மற்றும் வீடமைப்பு ஆகிய விடயங்களுக்கு நாங்கள் முக்கியத்துவம் வழங்கி செயற்படுகின்றோம்.
யாழ்.குடாநாட்டில் மூன்று எம்ஓஎச் அலுவலகங்களை நிர்மாணிக்க ஆரம்பித்துள்ளோம். ஏப்ரல் 30ம் திகதி இதன் நிர்மாணப் பணிகள் முடிவடையும்.
கேள்வி – யாழ்.குடாநாட்டில் எத்தனை புனர்வாழ்வு பெற்ற முன்னாள் பெண் போராளிகள் இருக்கின்றனர்?
பதில் – யாழ்.குடாநாட்டில் மாத்திரம் 615 புனர்வாழ்வு பெற்ற பெண் போராளிகள் இருக்கின்றனர். இவர்களில் 45 சதவீதமானோர் திருமணமானவர்கள் இதில் 20 சதவீதமானோர் பிரிந்து வாழ்கின்றனர். அல்லது விவாகரத்து பெற்றவர்களாவர். இப்பெண்களில் பலர் முன்னாள் போராளிகளை மணந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
திருமணமாகிப் பிரிந்து வாழும் அல்லது விவாகரத்து பெற்ற பெண்களின் குழந்தைகளுக்கு இராணுவத்தினர் பால்மாவை வழங்கி வருகின்றனர். அத்துடன் இப்பெண்களின் பெற்றோர்களுக்கும் இராணுவம் பலவேறு உதவிகளை வழங்கி வருகின்றது. இப்பெண்கள் மீண்டும் ஆயுதத்தை ஏந்தக்கூடாது என்ற நோக்கத்திலேயே இராணுவம் இவர்களுக்கு உதவி வருகின்றது.
இப்பெண்கள் யாழ்.குடாநாட்டில் பரந்து வாழ்கின்றனர். அத்துடன் இவர்களின் வாழ்வாதாரத்துக்காக சில பெண்களுக்கு தையல் இயந்திரங்கள், கோழிக்குஞ்சுகள் ஆகியவற்றையும் வழங்கியுள்ளோம். இப்படிச் செய்யும்படி எம்மை யாரும் கோரவில்லை. நாமாகவே இந்த நடவடிக்கைகளை மனமுவந்து மேற்கொண்டு வருகின்றோம்.
பொது மக்கள் வாழும் உரிமையை மாத்திரமே கேட்கின்றனர். அவர்கள் புதிய அரசியமைப்பு வேண்டுமென ஒருபோதும் கேட்கவில்லை. மக்கள் நிம்மதியாக வாழும் சூழ்நிலை ஏற்பட வேண்டும். முறையான வருமானம் கிடைக்க வேண்டும். என்பதையே விரும்புகின்றனர்.