ஜனாதிபதியுடன் அவசர சந்திப்பை நடத்த கூட்டமைப்பு முடிவு
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு மற்றும் புதுக்குடியிருப்பு ஆகிய பிரதேசங்களில் நிலமீட்பு போராட்டத்தில் ஈடுபட்டுவரும் மக்கள் தொடர்பாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் அவசர கலந்துரையாடலை நடத்துவதற்கு தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
விடுவிக்கப்பட்டதாககக் கூறப்பட்ட போதிலும் தங்களது காணி இதுவரை கிடைக்கவில்லை என்று தெரிவித்து கடந்த ஒருவாரத்திற்கும் மேல் இந்த நிலமீட்பு போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
முல்லைத்தீவில் இரண்டு நில மீட்புப் போராட்டங்கள் தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக கேப்பாப்பிலவு மற்றும் பிலவுக் குடியிருப்பு மக்கள் கடந்த மாதம் 31ஆம் திகதி முதல் தொடர்ச்சியான போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதே போன்று புதுக்குடியிருப்பு மக்களும் தமது காணிகளை விடுவிக்கக் கோரி நேற்று முதல் சுழல்ச்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இப் போராட்டத்தில் ஈடுபடும் மக்களுக்கு ஆதரவு வழங்கும் வகையில் இரு போராட்டத்தில் ஈடுபட்டவர்களையும் நேற்றைய தினம் இரவு தமிழ் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் சந்தித்தார்.
இதன் போது போராட்டக்கார்கள் முன்னிலையில் இருந்து எதிர்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா.சம்மந்தனுடன் தொலைபேசியூடாக தொடர்பு கொண்ட நாடாளுமன்ற உறுப்பினர், மக்களின் அவல நிலை தொடர்பில் அவருடன் பேசியிருந்தார்.
இதன் போது நில மீட்புப் போராட்டம் தொடர்பாக பிரதமர் பாதுகாப்பு அமைச்சின் செயலாளருடன் இரு முறை தாம் பேசியிருப்பதாகவும், இருப்பினும் அப் பேச்சுவாத்தைகளின் எந்த பயனும் இல்லை என்றும் சாதகமான பதிலை பிரதமர் தரவில்லை எனவும் இரா. சம்பந்தன் பதில் வழங்கினார்.
இதனால் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் இவ்விடயம் தொடர்பாக அவசரமாக கலந்துரையாடவுள்ளோம் என்று எதிர்கட்சித் தலைவர் குறிப்பிட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரீதரன் மக்களிடம் தெரிவித்தார்.
ஜனாதிபதியுடன் தமிழ் தேசியக் கூட்டமைப்பு நடத்தும் பேச்சுவார்த்தையின் போது, காணி விடுவிப்புத் தொடர்பாக இறுக்கமாக வலியுறுத்தல்கள் செய்யப்படும் என்றும் அவர் வாக்குறுதி அளித்தார்.
“மக்கள் போராட்டம் வெற்றிபெற வேண்டும். மக்களது நியாயமான போராட்டங்கள் வெற்றி பெறுவதற்கான முழுமையான ஒத்துழைப்பினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு வழங்கும். முல்லைத்தீவில் நில மீட்புக்காக நடைபெற்று வரும் இரு போராட்டங்களில் ஈடுபட்டு வருபவர்களுக்கான தீர்வினை தமிழ் தேசியக் கூட்டமைப்பு பெற்றுத்தரும்” என்றும் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் மேலும் தெரிவித்தார்.








