Breaking News

கருணாவை தண்டித்தால் 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் தண்டிக்க வேண்டும்!



புலிகளிடமிருந்து கருணா பிரிந்து வந்ததாலேயே யுத்தத்தை வெற்றிகொள்ள முடிந்ததென தெரிவித்துள்ள பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, யுத்தகாலத்தில் இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக அவரை தண்டிக்க வேண்டுமாயின் கடந்த அரசாங்கத்தால் விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் தண்டிக்க வேண்டுமென குறிப்பிட்டுள்ளார்.

தமது கட்சி காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்விடயத்தைக் குறிப்பிட்டுள்ளார். இங்கு அவர் தொடர்ந்து குறிப்பிடுகையில்-

”விநாயகமூர்த்தி முரளிதரன் எனும் கருணா அம்மான் புதிய கட்சியொன்றை ஆரம்பித்துள்ளமை வரவேற்கத்தக்கது. இறுதிக்கட்ட யுத்தத்தின்போது கிழக்கு மாகாணத்தை புலிகளிடமிருந்து மீட்டெடுக்க அவர் பெரிதும் உதவினார். விடுதலைப் புலிகளிடமிருந்து அவர் விலகி வந்ததாலேயே யுத்த வெற்றி எமக்கு சாதகமாக அமைந்தது.

அத்தோடு, அரந்தலாவல பிக்குகள் கொலைச் சம்பவத்தின் பின்னணியில் கருணா உள்ளாரென தெரிவிக்கப்பட்டாலும், அதனை நிரூபிப்பதற்கான சாட்சிகள் இல்லை. யுத்தத்தின் போது இழைக்கப்பட்ட குற்றங்களுக்காக அவரை தண்டிக்க வேண்டுமாயின் கடந்த அரசால் விடுவிக்கப்பட்ட 12 ஆயிரம் முன்னாள் போராளிகளையும் தண்டிக்க வேண்டும்.

தற்போதைய அரசாங்கம் ஒருபுறத்தில் புலிகள் தலைதூக்குவதற்கான சக்தியை வழங்கிவிட்டு மறுபுறத்தில் ராணுவத்தை தண்டிக்கும் நடவடிக்கையை முன்னெடுக்கின்றது. மேலும், வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள மக்களை தூண்டிவிடுபவர்களே எழுக தமிழ் பேரணியை நடத்தி, ராணுவத்தை வடக்கிலிருந்து வெளியேறுமாறு வலியுறுத்தி வருகின்றனர்” என்றார்.