21 ஆண்டுகள்... 21 அதிர்வலைகள்... ஜெ-சசிகலா வழக்கில் இதுதான் நடந்தது...!
ஜெயலலிதாவின் நிம்மதியைக் கெடுத்து... ஜெயலலிதாவின் பதவியைப் பறித்து... ஜெயலலிதாவின் விதியை முடித்த அபாய சரித்திரம் கொண்டது சொத்துக்குவிப்பு வழக்கு. 21 ஆண்டுகளாக இழுத்துக்கொண்டிருக்கும் இந்த வழக்கு தற்போது சசிகலாவின் முதலமைச்சர் கனவுகளையும் நொறுக்கித் தகர்த்துள்ளது. வழக்கு கடந்துவந்த 21 ஆண்டுகளைப் பற்றிய பருந்துப் பார்வை இது...
1. முட்டாள்கள் தின காமெடி!
1995, ஏப்ரல் 1...
2. 'மூன்றே மாதங்களில் முடிக்கலாம்!’
“இந்திய அரசியல் சட்ட வரலாற்றில், முதலமைச்சர் மீதான ஊழல் குற்றங்களை விசாரிக்க, மாநில ஆளுநர் அனுமதி கொடுத்தது இதுதான் முதல்முறை. லஞ்ச ஒழிப்புச் சட்டத்தின்படி நான் தொடரப்போகும் இந்த வழக்கில், சட்டரீதியான நடைமுறைகள்படி தாமதம் ஏற்பட வாய்ப்பு இல்லை. நடைமுறை தாமதங்களையும் தவிர்க்கத்தான் சிறப்பு நீதிமன்றமும் சிறப்பு நீதிபதியும் வேண்டும் என்கிறேன். ஜெயலலிதா மட்டும் வழக்கு நடைமுறைகளுக்கு இசைந்தால், மூன்றே மாதங்களில் வழக்கை முடித்துவிடலாம்!'' என்று அப்போது கூறினார் சுப்ரமணியன் சுவாமி.
3. ஜெயலலிதாவின் முதல் ரியாக்ஷன்!
‘ஜெயலலிதா மீது வழக்கு போடலாம்’ என ஆளுநர் சென்னாரெட்டி அனுமதியளித்த கடிதத்தின் நகல், சுவாமி பேட்டியளித்த நாள் அன்று மதியம் 12.30 மணிக்கு போயஸ் கார்டன் ஃபேக்ஸ் மெஷினில் வந்து விழுந்தது. அதைப் படித்ததும் ஆத்திரம், இயலாமை, வெறுப்பு... என நிதானம் இழந்த நிலையில், அப்போது தனக்கு எதிரே நின்றுகொண்டிருந்த அமைச்சர் கே.ஏ.கிருஷ்ணசாமியை விளாசித்தள்ளினார் ஜெயலலிதா. 'நீங்கள் இத்தனை பேர் இருந்தும் என்ன பிரயோஜனம்? நான் எல்லாவற்றையும் உதறிவிட்டு எங்கேயாவது போகிறேன்!’ எனக் கடுகடுத்தார்!
4. ‘ராஜினாமா பெஸ்ட்!’
முன்னாள் ஜனாதிபதி ஆர்.வெங்கட்ராமனைத் தொடர்புகொண்டு, ‘ஆளுநர் சென்னா ரெட்டி, சுப்ரமணியன் சுவாமிக்கு அளித்த அனுமதியை ரத்துசெய்யக் கோரி நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்போகிறேன். இதில் உங்கள் கருத்து என்ன?’ என்று கேட்டார். முழு விவரத்தையும் பொறுமையாகக் கேட்ட ஆர்.வி, ‘அது மிகப் பெரிய விபரீதமாக முடியும். வழக்குத் தொடுத்தால், அதுபற்றிய செய்திகள் தினமும் விவாதிக்கப்படும். உங்கள் மீது 'ஊழல்வாதி’ என்ற பிம்பம் படியும். எனவே, இப்போதே நீங்கள் பதவியை ராஜினாமா செய்து, வேறு ஒருவரை முதல்வராக அமர்த்திவிட்டு, வழக்கை முழுமூச்சாக எதிர்கொள்ளுங்கள்’ என்றார். ஆனால், அதைச் செய்யவில்லை ஜெயலலிதா!
5. மலையெனக் குவிந்த புகார்கள்!
1995, ஏப்ரல் 15-ம் தேதி தி.மு.க சார்பில், 'தமிழகத்தில் ஊழல்கள் பெருகிவிட்டன’ எனச் சொல்லி 539 பக்கங்கள் கொண்ட அறிக்கை அப்போதைய ஆளுநர் சென்னா ரெட்டியிடம் அளிக்கப்பட்டது. அவர்களைத் தொடர்ந்து வாழப்பாடி ராமமூர்த்தி, பா.ம.க நிறுவனர் ராமதாஸ் ஆகியோரும் ஆளுக்கு ஓர் அறிக்கையை ஆளுநரிடம் கொடுத்தனர். ம.தி.மு.க சார்பிலும் ஊழல் பட்டியல் தரப்பட்டது. சுவாமி கிள்ளிய திரிக்கு, மற்ற அனைத்துக் கட்சிகளும் வெடிமருந்துகளைக் குவித்தன!
6. அரசியலில் இது சாதாரணம் அல்ல!
‘தமிழக முதலமைச்சரான தன் மீது வழக்குத் தொடுக்க ஆளுநர் அளித்த அனுமதிக்குத் தடை விதிக்க வேண்டும்’ என சென்னை உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா தாக்கல் செய்த மனுவை விசாரித்தார் நீதிபதி சிவராஜ் பாட்டீல். ஜெ. தரப்பு வழக்குரைஞர் பராசரன், 'முதலமைச்சருக்கும் ஆளுநருக்கும் இடையில் ஏற்பட்ட மனக்கசப்பு மற்றும் அரசியல் காழ்ப்பு உணர்ச்சியின் காரணமாக இப்படி ஓர் ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. எனவே, அதை ரத்துசெய்ய வேண்டும்’ என்றார்.
நீதிபதி சிவராஜ் பாட்டீல், 'இது மிகுந்த அரசியல் முக்கியத்துவம் வாய்ந்த வழக்கு. எனவே, டிவிஷன் பெஞ்சுக்கு மாற்றுகிறேன்!’ என உத்தரவிட்டார்.
7. சுவாமி மீது தாக்குதல் சுனாமி!
8. தி.மு.க ஆட்சியில் விறுவிறு வேகம்!
1996-ம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க மாபெரும் வெற்றி பெற்று ஆட்சிக்கு வர, சென்னை சிங்காரவேலர் மாளிகையில் சிறப்பு நீதிமன்றம் அமைக்கப்பட்டு, வேகம் பிடித்தது ஜெ. மீதான சொத்துக்குவிப்பு வழக்கு. 'முதலமைச்சராக இருந்த ஜெயலலிதா வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்துள்ளார். அதுபற்றி விசாரிக்க உத்தரவிட வேண்டும்’ என வழக்குத் தொடர்ந்தார் சுவாமி. நீதிபதி சம்பந்தம், விசாரணைக்கு உத்தரவிட்டார். நீதிமன்றம் நல்லம்ம நாயுடு தலைமையில் தனிப் படை அமைத்து உத்தரவிட்டது.
9. சிறையில் ஜெ... கார்டனுக்குள் போலீஸ்!
வருமானத்துக்கு அதிகமாகச் சொத்து சேர்த்த வழக்கில் முதல் குற்றவாளியாக ஜெயலலிதா, இரண்டாவது குற்றவாளியாக சசிகலா, மூன்றாவது குற்றவாளியாக வளர்ப்பு மகன் சுதாகரன், நான்காவது குற்றவாளியாக இளவரசி ஆகியோரைச் சேர்த்து, 1996 செப்டம்பர் 18 அன்று முதல் தகவல் அறிக்கை பதியப்பட்டது. அதன்பிறகே 5.5.1997-ல் நீதிபதி சம்பந்தம், ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில் முதல் விசாரணையைத் தொடங்கினார். அப்போது தி.மு.க அரசு தொடர்ந்த பல வழக்குகளில் ஒன்றான கலர் டி.வி ஊழல் வழக்கில் கைதுசெய்யப்பட்டு, சென்னை மத்திய சிறையில் இருந்தார் ஜெயலலிதா. அந்தச் சமயம் லஞ்ச ஒழிப்புத் துறை அதிகாரிகள் போயஸ் கார்டனுக்குள் நுழைந்தனர்.
10. மாறியது காட்சி!
11. வழக்கு பெங்களூருவுக்கு பார்சல்!
‘தி.மு.க ஆட்சிக் காலத்தில் இந்த வழக்கில் வாக்குமூலம் அளித்த சாட்சிகளில் 76 பேர், இப்போது தங்கள் தரப்பை மாற்றிச் சொல்லியிருக்கிறார்கள். அத்துடன் லஞ்ச ஒழிப்புத் துறையும் முதலமைச்சர் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் துறையாக இருக்கிறது. அதனால் வழக்கை தமிழகத்தில் நடத்தினால், நியாயம் கிடைக்காது. அதிகாரிகள் தைரியமாகச் செயல்பட முடியாது. எனவே, வழக்கை வேறு மாநிலத்துக்கு மாற்ற வேண்டும்!’ என தி.மு.க பொதுச் செயலாளர் க.அன்பழகன் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார். 2003, நவம்பர் 18-அன்று, வழக்கை பெங்களூருக்கு மாற்றி உத்தரவிட்டது உச்ச நீதிமன்றம்.
12. வழக்கைத் தரவில்லை தமிழகம்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்ற சிறப்பு நீதிபதியாக பச்சாபுரே நியமிக்கப்பட்டார். தமிழகத்தில் அப்போது ஜெயலலிதா தலைமையில் அ.தி.மு.க ஆட்சி. அதனால் வழக்கை சென்னையில் இருந்து விடுவிக்க தாமதம் ஆனது. 10 மாதங்கள் கழித்தே, வழக்கின் தமிழ் ஆவணங்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்துக்கு அளித்தார்கள்.
13. எரிச்சல் ஆன நீதிபதிகள்!
பெங்களூரு சிறப்பு நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகாமல் தவிர்த்து வந்தார் ஜெயலலிதா. 'கடந்த ஆறு மாதங்களாக நான் தினம் தினம் வந்துவிட்டு உட்கார்ந்துவிட்டுப் போகிறேன். நான் தனிமைச் சிறையில் இருப்பதைப்போல் உணர்கிறேன். குற்றம் சாட்டப்பட்டவர்கள் இனியும் வராவிட்டால், நான் அதைக் காரணம்காட்டியே தீர்ப்பைச் சொல்வேன்’ எனக் கடுகடு எச்சரிக்கை விடுத்தார் நீதிபதி பச்சாபுரே. அவர் ஓய்வுபெற, மல்லிகார்ஜூனையா புதிய நீதிபதியாகப் பொறுப்பு ஏற்றுக்கொண்டார். அவரிடமும் இதே இழுத்தடிப்புகள் தொடர்ந்தன.
14. லண்டன் சிக்கல்!
சொத்துக்குவிப்பு வழக்கோடு லண்டன் ஹோட்டல் வழக்கு ஒன்றும் இணைக்கப்பட்டு இருந்தது. அந்த வழக்கின் குற்றவாளிகளைக் கண்டுபிடிக்க முடியாததால், வழக்கு இழுக்கப்பட்டது. தி.மு.க ஆட்சிக் காலத்தில் லண்டன் வழக்குஇதிலிருந்து பிரிக்கப்பட்டது. ஆனால், லண்டன் சொத்துக்குவிப்பு வழக்கையும் பெங்களூரு வழக்குடன் சேர்த்து விசாரிக்க வேண்டும் என ஜெயலலிதா தரப்பு கர்நாடக உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்ய, அந்த மனு மீதான தீர்ப்பு வரும்வரை பெங்களூரு வழக்கு விசாரிக்கப்படவில்லை. இறுதியில் உச்ச நீதிமன்றம், பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் சொத்துக்குவிப்புவழக்கை மட்டும் விசாரித்தால் போதும் என உத்தரவிட்டது. இடையில் நான்கு ஆண்டுகள் உருண்டோடியிருந்தன!
15. உச்சந்தலையில் கொட்டிய உச்ச நீதிமன்றம்!
சொத்துக்குவிப்பு வழக்கின் குற்றப்பத்திரிகையை எதிர்த்து ஒரு வழக்கு, ‘இந்த வழக்கு விசாரணை முழுவதும் சட்ட விரோதம். எனவே, இத்துடன் விசாரணையை நிறுத்த வேண்டும்’ எனக் கோரி ஒரு வழக்கு, வழக்கின் ஆவணங்கள் தமிழில் வேண்டும் எனக் கோரிக்கை என, உயர் நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் மனுக்கள் மேல் மனுக்கள் போட்டார் ஜெயலலிதா. தீவிர விசாரணைக்குப் பிறகு பல மனுக்களைத் தள்ளுபடிசெய்த உச்ச நீதிமன்றம், ஒவ்வொரு சமயமும் ஜெயலலிதா தரப்பைக் கண்டித்தது.
இடையில், தமிழகத்தில் தி.மு.க ஆட்சி மாறி 2011-ம் ஆண்டு அ.தி.மு.க ஆட்சிக்கு வந்தது!
16. பெங்களூருலேயே பல்டி விளையாட்டு!
17. மிஸ்டர் ஸ்ட்ரிக்ட் மாஸ்டர்!
பொறுப்பை கையில் எடுத்ததில் இருந்து கறாரான மாஸ்டராகத்தான் நீதிபதி குன்ஹா இருந்தார். வழக்கை விரைவுபடுத்தி முடிக்க நினைக்கிறார் குன்ஹா என்றதும், புதிய அஸ்திரத்தை எடுத்தார்கள். இந்த வழக்கில் 32 நிறுவனங்கள் உள்ளன. இவர்கள் தனித் தனியாக மனு போட்டார்கள். ‘எங்கள் நிறுவனத்தை வழக்கில் இருந்து விடுவிக்க வேண்டும். அதுவரை சொத்துக்குவிப்புவழக்கின் விசாரணையை நிறுத்த வேண்டும்’ என்று கோரிக்கை வைத்தார்கள். '17 ஆண்டுகளாக இந்த வழக்கு நடக்கிறது. இதுவரை தூங்கினீர்களா?’ என்று கேட்டு எல்லா மனுக்களையும் குன்ஹா டிஸ்மிஸ் செய்தார். அந்த நிறுவனங்களுக்கு அபராதம் விதித்தார். அந்த அளவுக்கு கறார் காட்டியதால்தான், குன்ஹாவால் தீர்ப்பு தேதியை அறிவிக்க முடிந்தது. மைக்கேல் டி.குன்ஹா நீதிபதியாக வந்த பிறகு, ஜெயலலிதா பெங்களூருக்கு வரவே இல்லை. தீர்ப்பு தரப்பட்ட 2014, செப்டம்பர் 27 அன்றுதான் நீதிபதி குன்ஹா, ஜெயலலிதாவை முதன்முறையாக நேரில் பார்த்தார். அந்த முதல் சந்திப்பே மறக்க முடியாததாக மாறிவிட்டது இருவருக்கும்!
18. பதவி இழந்தார் ஜெ... பன்னீர் முதல்வரானார்!
ஜெயலலிதா பதவியை இழந்தார். 21 நாட்கள் பரப்பன அக்ரஹார சிறைக்குள் இருந்தார். ஜாமீன் வாங்கி விடுதலையானர் 3 மாதங்கள் வீட்டுச் சிறைக்குள் இருந்தார். ஓ.பன்னீர் செல்வம் இரண்டாவது முறையாக முதல் அமைச்சர் ஆனார். கர்நாடக உயர் நீதிமன்றத்தில் ஜெயலலிதா மேல்முறையீடு செய்தார்.
19. பரபரப்பைக் கிளப்பிய குமாரசாமி கணக்கு!
கர்நாடக உயர் நீதிமன்றத்தில் 3 மாதங்கள் நடந்த வழக்கில் 2015 மே மாதம் நீதிபதி குமாரசாமி தீர்ப்பு வழங்கினார். அதில், “அரசு ஊழியர் 10 சதவிகிதம் வரை வருமானத்துக்கு அதிகமாக சொத்து வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் ஜெயலலிதாவிடம் 2 சதவிகிதம் மட்டுமே சொத்துக்கள் இருந்தன. எனவே, ஜெயலலிதா, சசிகலா, சுதாகரன், இளவரசி என அனைரையும் விடுதலை செய்கிறேன்” என்று தீர்ப்பளித்தார். அந்த விடுதலையை எதிர்த்து கர்நாடக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது.
20. ஜெ.மரணமும்... உச்ச நீதிமன்ற வழக்கும்...
21. ஜெ-சசியின் முடியாத துயரம்!
ஜெயலலிதா இறந்தபிறகு மூன்றாவது முறையாக ஓ.பன்னீர் செல்வம் முதல் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இதையடுத்து, அ.தி.மு.க பொதுச் செயலாளரான சசிகலாவுக்கும் பன்னீர் செல்வத்துக்கும் இடையில் பதவிச் சண்டை ஏற்பட்டது. இருவரும் முதல்வர் நாற்காலிக்காக சண்டைபோட்டுக் கொண்டிருந்த நேரத்தில், சொத்துக்குவிப்பு வழக்கின் தீர்ப்பு தேதி அறிவிக்கப்பட்டது. அதில் இன்று(பிப்ரவரி 14-ம் தேதி) வெளியான தீர்ப்பு சசிகலாவின் முதல் அமைச்சர் கனவைத் தகர்த்து அவரையும் சிறைக்கு அனுப்பி உள்ளது.
ஜெயலலிதாவுக்கு கடந்த 20 ஆண்டுகளாக முடியாத துயரமாகத் திகழ்ந்த சொத்துக்குவிப்பு வழக்கு, தற்போது அவருடைய உடன்பிறவாச் சகோதரியான சசிகலாவுக்கும் மாறாத துயரமாக மாறிவிட்டது.