Breaking News

தமிழ் மக்களின் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை – த.தே.கூ

தேர்தல் காலங்களில் தமிழ் மக்களுக்கு வழங்கப்பட்ட வாக்குறுதிகள் இதுவரையில் நிறைவேற்றப்படவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பு மீண்டும் தெரிவித்துள்ளது.காணி பாரதீனப்படுத்தல் மீதான சட்டமூலத்தின் விவாதம் நேற்று நாடாளுமன்றில் இடம்பெற்றது.


இதன்போது உரையாற்றிய தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் இதனை தெரிவித்தார்.ஆகக்கூடிய மதுபானசாலைகள் மட்டக்களப்பிலேயே உள்ளதாக பிரதி அமைச்சர் அமிர் ஹலி சுட்டிக்காட்டினார்.

தமிழர்களின் வாழ்வியலை உருகுலைத்து, கலாசாரத்தை சிதைத்து, பாதுகாப்பை கேள்விக்குறியாக்குவதே தேசிய பாதுகாப்பு என அரசாங்கம் கருதுவதானால் நல்லிணக்கம் சாத்தியமற்றதாகும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் சிவமோகன் தெரிவித்தார்.

ஒவ்வொருவரும் தேசிய நல்லிணக்கத்தை பற்றி கதைப்பதன் மூலம் மாத்திரமே, நாட்டில் இனங்களுக்கிடையில் தேசிய நல்லிணக்கத்தை உருவாக்க முடியாது என நாடாளுமன்ற உறுப்பினர் டக்ளஸ் தேவாநந்தா தெரிவித்தார்.

தற்போதைய அரசாங்கம் தொடர்பில், தலைகுனிய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாந்தி ஸ்ரீஸ் கந்தராஜா தெரிவித்துள்ளார்.

இதேவேளை கேப்பாபுலவு மற்றும் புதுக்குடியிருப்பு பகுதியில் படையினர் வசம் உள்ள பொதுமக்களின் காணிகளை விடுவிக்க வலியுறுத்தும் ஒத்திவைப்பு பிரேரணை ஒன்று தமிழ் தேசிய கூட்டமைப்பினால் முன்வைக்கப்பட்டது.

அதன் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் இந்த பிரேரணையை முன்வைத்தார்.இதனை முன்வைத்து உரையாற்றிய அவர், ஆட்சி ஏறுவதற்கு முன்னரும், பின்னரும் அரசாங்கம் வழங்கிய பல உறுதிமொழிகள் நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.காணிவிடுவிப்பு உள்ளிட்ட பல விடயங்களில் அரசாங்கம் உறுதியளித்தப்படி நடந்து கொள்ளவில்லை.

எனவே தற்போது நல்லாட்சி என்ற விடயத்தை கூறவும் வெட்கமாக இருக்கிறது.பொதுமக்கள் நீண்டநாட்களாக போராட்டத்தில் ஈடுபட்டுள்ள போதும், சில அமைச்சர்கள் அந்த விடயம் குறித்து அறிந்திருக்கவும் இல்லை.

மீள்குடியேற்றத்துறை அமைச்சர் இந்த விடயத்தை அறிந்திருந்தாலும், இதனை தீர்ப்பதற்கான நடவடிக்கை எதனையும் எடுக்கவும் இல்லை.எனவே அரசாங்கம் இந்த விடயத்தில் முறையான பதிலை வழங்க வேண்டும் என்று சுமந்திரன் இதன்போது வலியுறுத்தினார்.