ஒரே இரவில் காணிகளை வழங்க முடியாது ; கேப்பாப்புலவு போராட்டம் தொடர்பில் அரசாங்கம் தெரிவிப்பு
கடந்த ஆட்சி காலத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு அஞ்சிக்கொண்டிருந்த மக்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர் எனவும் அமைச்சர் சுட்டிக்காட்டினார்.
அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்,
கேப்பாப்புலவு மக்கள் தொடர் போராட்டமொன்றை நடத்திவருவதாக அறிகின்றோம். ஆனால் அவர்கள் ஒருவிடயத்தை புரிந்துகொள்ளவேண்டும். அரசாங்கம் காணிகளை தொடர்ச்சியாக விடுவித்து வருகின்றது.
தொடர்ந்தும் காணிகளை விடுவிப்போம் இந்நிலையில் அரசாங்கம் காணிகளை விடுவிக்கும் என்று தெரிந்துகொண்டே மக்கள் போராட்டம் நடத்திக்கொண்டிருப்பதை நாங்கள் காண்கின்றோம்.
ஆனால் அரசாங்கம் காணிகளை விடுவிக்க படிப்படியாக நடவடிக்கை எடுக்கும். ஒரே தடவையில் இவற்றை செய்துவிட முடியாது. அரசாங்கம் இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்.
கேள்வி:- இருந்தாலும் இவர்கள் 15 நாட்களுக்கு மேலாக இரவு பகலாக போராட்டம் நடத்தி வருகின்றனர். இது தொடர்பில் அரசாங்கம் அவசர கவனம் செலுத்தவேண்டுமல்லவா?
பதில்:- மக்கள் இரவுஇ பகலாக போராட்டம் நடத்துகின்றனர் என்பதற்காக ஒரே இரவில் காணிகளை மீள்வழங்கிவிட முடியாது. அதற்கென்று ஒரு முறைமை காணப்படுகின்றது. அதற்கேற்பவே காணிகளை விடுவிக்க முடியும். ஆனால் அரசாங்கம் இந்த விடயத்தை மேற்கொள்ளும்இ நாங்கள் காணிகளை விடுவித்து வருகின்றோம்.
உரிய ஏற்பாடுகளை மேற்கொண்டு மக்களின் காணிகளை விடுவிப்போம். எனினும் அவசரமாக எதனையும் செய்துவிட முடியாது. கடந்த ஆட்சி காலத்தில் போராட்டங்களை நடத்துவதற்கு அஞ்சிக்கொண்டிருந்த மக்கள் இன்று நல்லாட்சி அரசாங்கத்தில் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். அக்காலத்தில் மக்களினால் போராட்டம் நடத்த முடியாத நிலைமை காணப்பட்டது. ஆனால் தற்போது போராட்டம் நடத்துகின்றனர்.







