மாந்தை மனித புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கை சமர்ப்பிக்குமாறு நீதிமன்றம் உத்தரவு
மன்னார் – மாந்தையில் கண்டுபிடிக்கப்பட்ட சர்ச்சைக்குரிய மனித புதைகுழி தொடர்பான முழுமையான அறிக்கையை எதிர்வரும் 27ஆம் திகதி நீதிமன்றில் சமர்ப்பித்து, சம்பவம் தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு விசேட குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு மன்னார் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
நேற்று (புதன்கிழமை) குறித்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது நீதவான் ஏ.ஜீ.அலெக்ஸ்ராஜா இவ் உத்தரவை பிறப்பித்ததாக காணாமல் போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பாக மன்றில் ஆஜரான சட்டத்தரணி வி.எஸ்.நிரஞ்சன் தெரிவித்தார்.
மாந்தை புதைகுழி தொடர்பான வழக்கு கடந்த வருடம் நவம்பர் மாதம் 7ஆம் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டபோது, குறித்த புதைகுழி தொடர்பில் தடயவியல் பரிசோதனைகளை மேற்கொள்ளுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
நீதிமன்றம் வழங்கிய உத்தரவிற்கு அமைவாக வெளிநாட்டில் உள்ள சிறந்த தடயவியல் நிபுணர் குழுவிற்கு இது குறித்து உதவி வழங்குமாறு மின்னஞ்சல் அனுப்பியதாகவும் எனினும் அதற்கு பதில் கிடைக்கவில்லையென்றும் விசேட புலனாய்வு பிரிவினர் நீதிமன்றில் நேற்று தெரிவித்தனர்.
எனினும், இவ்விடயம் தொடர்பாக எதிர்வரும் மார்ச் மாத காலப்பகுதியில் தேவையான உதவிகளை வழங்குவதாக வெளிநாட்டில் உள்ள குறித்த தடவியல் நிபுணர் குழுவினர் அனுப்பி வைத்துள்ள மின்னஞ்சலில் குறிப்பிடப்பட்டுள்ளதாக காணாமல் போன குடும்பங்களின் உறவினர்கள் சார்பாக ஆஜரான சட்டத்தரணிகள் நீதவானின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.
இவற்றை ஆராய்ந்த மன்னார் நீதவான், குறித்த புதைகுழி தொடர்பில் முழுமையான அறிக்கையை எதிர்வரும் மன்றில் சமர்ப்பிப்பதோடு, அடுத்த கட்ட நடவடிக்கையை விரைந்து முன்னெடுக்க வேண்டுமென விசேட குற்றப்புலனாய்வு பிரிவிற்கு கட்டளை பிறப்பித்ததாக சட்டத்தரணி நிரஞ்சன் மேலும் தெரிவித்தார்.








