ரணிலுக்கு கலாநிதி பட்டம் அளிக்கிறது அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம்
சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு, அவுஸ்ரேலிய பல்கலைக்கழகம் இன்று கெளரவ கலாநிதி பட்டம் அளித்து கெளரவிக்கவுள்ளது.
அவுஸ்ரேலியாவுக்கான நான்கு நாள் பயணத்தை மேற்கொண்டு சிறிலங்கா பிரதமர் நேற்றிரவு அவுஸ்ரேலியாவின் மெல்பேர்ண் நகரை சென்றடைந்தார்.
அவரை, விக்டோரியா மாநில பிரதமர் டானியல் அன்ட்ரூ, சிறிலங்காவுக்கான அவுஸ்ரேலிய தூதுவர் பிறைஸ் ஹட்சிசன் ஆகியோர் மெல்பேர்ண் விமான நிலையத்தில் வரவேற்றனர்.
இந்த நிலையில், இன்று கீலோங்கில் உள்ள டீக்கின் பல்கலைக்கழகம், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுக்கு கௌரவ சட்ட கலாநிதி பட்டத்தை அளித்து கௌரவிக்கவுள்ளது.
வன்முறை, முரண்பாடுகளில் இருந்து நிலையான ஜனநாயகத்தை நோக்கி சிறிலங்காவைக் கொண்டு செல்லும், சிறிலங்கா பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் முயற்சிகளை கெளரவிக்கும் வகையிலேயே கௌரவ கலாநிதி பட்டம் அளிக்கப்படவுள்ளது.
அதேவேளை இன்று பிற்பகல் கன்பரா செல்லும், ரணில் விக்கிரமசிங்கவை அவுஸ்ரேலியப் பிரதமர் மல்கம் ரேன்புல் வரவேற்பார். இதன் பின்னர் இரு நாடுகளின் தலைவர்களுக்கும் இடையில் இருதரப்பு பேச்சுக்கள் இடம்பெறவுள்ளன.
கடந்த 60 ஆண்டுகளில் அவுஸ்ரேலியாவுக்குச் செல்லும், முதல் சிறிலங்கா பிரதமர், ரணில் விக்கிரமசிங்கவே என்பது குறிப்பிடத்தக்கது.