சுமந்திரனுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் போராட்டம்
காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்பாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்தின் வெளியிடும் கருத்துக்களுக்கு எதிராக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் இன்று காலை வவுனியாவில் ஆர்ப்பாட்டம் ஒன்றை முன்னெக்கவுள்ளனர்.
குறித்த ஆர்ப்பாட்டத்தை காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களினால் கந்தசுவாமி ஆலயத்திற்கு முன்பாக இன்று காலை 10.00 மணிக்கு முன்னெடுக்கப்படவுள்ளது.
யுத்தத்தின் போதும் அதற்குப் பின்னரும், கைதுசெய்யப்பட்டும், சரணடைந்த நிலையிலும், கடத்தப்பட்டும் காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்கள் தமது உறவுகளை கண்டுபிடித்துத் தருமாறும், அவர்களுக்கு என்ன நடந்தது என்பது குறித்து ஆராய்ந்து நீதியை உறுதிப்படுத்துமாறும் வலியுறுத்தி கடந்த வியாழக்கிழமை அரச அதிகாரிகளை சந்தித்து கலந்துரையாடினர்.
இந்த கலந்துரையாடலுக்கு வருகைதந்த காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரனை வெளியேறுமாறு வலியுறுத்தினர்.
இந்த சந்தர்ப்பத்தின் பின்னர் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் தொடர்பாக பல்வேறு பட்ட விமர்சனங்களை நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் முன்வைப்பதாக தெரிவிக்கும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள், எம்.ஏ.சுமந்திரனுக்கு எதிராக போராட்டத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளனர்.
இவ்வாறாயினும் மக்கள் தம்மை வெளியேற்றவில்லை எனவும், தாமே அந்த கலந்துரையாடலில் இருந்து வெளியேறியதாகவும் கொழும்பில் இருந்து வெளியாகும் தமிழ் பத்திகை ஒன்றிற்கு வழங்கிய செவ்வியில் தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.