Breaking News

13ஆவது நாளாகத் தொடரும் போராட்டம்!



படையினர் வசமுள்ள தமது மண்ணை மீட்பதற்காக இன்றுடன் 13ஆவது நாளாக கேப்பாப்புலவு – பிலவுக்குடியிருப்பு மக்கள் தமது போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர். இன்றையதினம் குறித்த இடத்திற்கு வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் பயணம் செய்யவுள்ளனர்.

இன்றையதினம் வடக்கு மாகாண முதலமைச்சர் மற்றும் ஆளுங்கட்சி, எதிர்க்கட்சி உறுப்பினர்கள், வடக்கு மாகாணசபை உறுப்பினர்கள் அனைவரும் பயணம் செய்து அம்மக்களுக்கு தமது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளனர்.

குறித்த மக்களின் போராட்டம் ஆரம்பித்து இரண்டு வாரங்களை எட்டியுள்ள நிலையில் இம்மக்களுக்கு பல்வேறு தரப்பினரிடமிருந்தும் ஆதரவு பெருகி வருகின்றது. இந்நிலையில் இன்றையதினம் வடக்கு மாகாண சபை உறுப்பினர்கள் தமது ஆதரவைத் தெரிவிக்கவுள்ளனர்.

இந்நிலையில், சொந்த மண்ணில் காலடி வைக்கும் வரை தாம் தமது போராட்டத்தைக் கைவிடப்போவதில்லையெனவும், தாம் பட்டினி கிடந்து இறந்தாலும் இவ்விடத்திலேயே இறப்போம் எனவும் மக்கள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, பிலக்குடியிருப்பு மக்களுக்கு ஆதரவாகவும் படையினர் வசமுள்ள தமது காணிகளை விடுவிக்குமாறும் வலியுறுத்தி முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு மக்கள் ஆரம்பித்துள்ள போராட்டம் இன்றுடன் 10ஆவது நாளை எட்டியுள்ளமை குறிப்பிடுகிறது.