காணி பிரச்சினை ;மீண்டும் ஒத்திவைப்பு வேளை பிரேரணை
முல்லைத்தீவு கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணி பிரச்சினை தொடர்பாக மீண்டும் ஒரு சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையை கொண்டு வர தமிழ் தேசியக் கூட்டமைப்பு தீர்மானித்துள்ளது.
இந்த பிரேரணை எதிர்வரும் புதன்கிழமை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்படவுள்ளதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான இரா.சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
கேப்பாப்பிலவு - பிலக்குடியிருப்பில் விமானப் படையினரின் கட்டுப்பாட்டில் உள்ள 84 குடும்பங்களுக்குச் சொந்தமான 42 ஏக்கர் காணிகளை விடுவிக்குமாறு வலியுறுத்தி கடந்த மாதம் 31ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் அறவழிப் போராட்டம் இன்று 20 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
அதேவேளை புதுக்குடியிருப்பில் 19 குடும்பங்களுக்குச் சொந்தமான 49 ஏக்கர் காணிகளிலிருந்து இராணுவத்தினரை உடன் வெளியேறுமாறு வலியுறுத்தி 3ஆம் திகதி ஆரம்பிக்கப்பட்ட மக்களின் போராட்டம் 17 ஆவது நாளாகவும் சுழற்சி முறையிலான உணவு தவிர்ப்பு போராட்டம் 6 ஆவது நாளாகவும் இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில் கேப்பாபிலவு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் தொடர்பாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அடுத்தகட்ட நடவடிக்கை என்ன என்றும் கூட்டமைப்பின் தலைவரான இரா.சம்பந்தனிடம் வினவியபோதே அவர் தெரிவித்துள்ளார்.
தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் கேப்பாப்பிலவு – பிலக்குடியிருப்பு மற்றும் புதுக்குடியிருப்பு மக்களின் காணிகள் விடுவிப்புத் தொடர்பில் பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கருணாசேன ஹெட்டியாராச்சி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் ஏற்கனவே பேச்சுவார்த்தைகளை மேற்கொண்டுள்ளதாகவும், இது தொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் ஏற்கனவே சபை ஒத்திவைப்புப் பிரேரணையை கொண்டு வந்திருந்ததாகவும் குறிப்பிட்டுள்ளார்.
காணிகளை இராணுவத்தினர் பிடித்து வைத்திருப்பது பிழை என்று தெரிந்தும் அரசாங்கம் அசமந்தப் போக்கில் செயற்படுகின்றது.
இராணுவத்தினர் மக்களின் காணிகளிலிருந்து வெளியேற வேண்டும். இதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை.
காணி விடுவிப்புத் தொடர்பில் நாடாளுமன்றத்தில் சபை ஒத்திவைப்புப் பிரேரணையை எதிர்வரும் புதன்கிழமை கொண்டு வர இருக்கின்றோம்.
அதேவேளை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் விரைவில் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தவுள்ளோம்.
காணி விடுவிக்கக் கோரும் மக்கள் போராட்டம் நியாயமானது. காணி விடுவிக்கப்படும் வரை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்றத்தில் தொடர்ந்தும் குரல் கொடுக்கும் எனத் தெரிவித்துள்ளார்.








