Breaking News

ஜனாதிபதியின் வாக்கு பொய்த்த நிலையில் தொடர்கின்றது கேப்பாபுலவு போராட்டம்

கேப்பாபுலவு புலவுக்குடியிருப்பு மக்களின் போராட்டம் இன்று 20 ஆவது நாளாக தீர்வின்றிய நிலையில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.


கடந்த 31 ஆம் திகதி விமானப் படையினரால் விடுவிக்கப்பட்ட காணிகளை விடுவிக்க நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில் கேப்பாபுலவு, பிலவுக்குடியிருப்பில் மக்கள் அங்கிருந்து வெளியேறாமல் முகாமிட்டு போராட்டத்தை ஆரம்பித்தனர்.

குறித்த காணிகள் கடந்த 30 ஆம் கையளிக்கப்படும் என கரைத்துறைப்பற்று பிரதேசசெயலக அதிகாரிகள் உறுதி வழங்கிய போதிலும், காணிகளை அளவிட்டு தம்மிடம் கையளிப்பதற்கு அதிகாரிகள் எவரும் வருகை தரவில்லை என மக்கள் குறிப்பிட்ட நிலையில் மக்கள் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக அன்றைய தினம் அறிவித்துள்ளனர்.

2009ஆம் ஆண்டு யுத்தம் மிலேச்சத்தனமாக முடிவுக்கு கொண்டுவரப்பட்டதை தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியிலுள்ள அநேகமான பொதுமக்களின் காணிகளை ஸ்ரீலங்கா பாதுகாப்பு தரப்பினர் கையகப்படுத்தியிருந்தனர்.

அந்த வகையில் கோப்பாபுலவு கிராம உத்தியோகத்தர் பிரிவில் பிலவுகுடியிருப்பு என்ற கிராமத்தில் விமானப் படையினரால் கையகப்படுத்தப்பட்டிருந்த 84 குடும்பங்களுக்கு சொந்தமான 20 க்கும் அதிகமான ஏக்கர் காணி அண்மையில் விடுவிக்கப்பட்டிருந்தது.

குறித்த காணியை சூழ விமானப் படையினர் முட்கம்பி பாதுகாப்பு வேலியை அமைத்திருந்த போதிலும் அங்கு பாதுகாப்பு தரப்பினர் நிலைகொண்டிருக்கவில்லை என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

இந்த நிலையில் கடந்த தை மாதம் 18 ஆம் திகதி தம்மை அழைத்திருந்த விமானப் படையினர், குறித்த காணிகள் விடுவிக்கப்பட்டுள்ளதாகவும் வனவள அதிகாரிகளிடம் கடிதங்களை பெற்று மீளக் குடியேற முடியும் எனவும் தெரிவித்ததாகவும் பிலவுக்குடியிருப்பு கிராம மக்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இதனையடுத்து கடந்த தை19 ஆம் திகதி வனவளப் பாதுகாப்பு அதிகாரிகளிடம் நேரில் சென்று இது குறித்து மக்கள் வினவியிருந்தனர்.

எனினும் குறித்த காணிகள் பிரதேசசெயலகப் பிரிவினால் வழங்கப்பட்டவை என்பதால் ஜனவரி 23ஆம் திகதி அவர்களுடன் வருகைதந்து காணிகளை கையளிப்பதாக வனவளப் பாதுகாப்பு பிரிவினர் தமக்குகூறியதாக மக்கள் சுட்டிக்காட்டியிருந்தனர்.

இதேவேளை தாம் தற்போது சூரிபுரத்திலுள்ள மாதிரிக் கிராமத்தில் பல்வேறு இன்னல்களுக்கு மத்தியில் வாழ்ந்துவருவதாக பிலவுக்குயிருப்பு மக்கள் கவலை வெளியிட்டுள்ளனர்.

இந்த நிலையில் இன்றையதினம் 20 ஆவது நாளை போராட்டம் எட்டியுள்ள நிலையில் இதுவரை எந்தவொரு தீர்வும் முன்வைக்கப்படவில்லை.