வடக்கிலிருந்து ஒருபோதும் ராணுவத்தை அகற்றக்கூடாது! – கம்மன்பில
விடுதலைப் புலிகள் வடக்கில் மீண்டும் தலைதூக்கியுள்ளனர் எனக் குறிப்பிட்டுள்ள பிவித்துறு ஹெல உறுமயவின் தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான உதய கம்மன்பில, வடக்கிலிருந்து ராணுவத்தை வெளியேற்ற ஒருபோதும் நடவடிக்கை எடுக்கக் கூடாதென குறிப்பிட்டுள்ளார்.
தமது கட்சியின் காரியாலயத்தில் நேற்று (திங்கட்கிழமை) நடத்திய ஊடக சந்திப்பில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதுகுறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில்-
”தமிழீழ விடுதலைப் புலிகள் இலங்கையில் மீண்டும் தலைதூக்குவது உறுதியென, பயங்கரவாத தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரியாக செயற்பட்ட பிரதி பொலிஸ்மா அதிபர் நாலக டி சில்வா கடந்த 2013ஆம் ஆண்டு ரகசிய அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இவ்வாறான சூழலில் கடந்த மாதம் 13ஆம் திகதி கிளிநொச்சியில் பயங்கரவாத விசாரணைப் பிரிவினரால் முன்னாள் போராளிகள் மூவர் கைதுசெய்யப்பட்டிருந்தனர்.
இவர்கள் விடுதலைப்புலிகளுக்கு புத்துயிர் அளித்து ஆயுதப் போராட்டத்துக்கான ஆயத்தங்களை மேற்கொள்ளத் திட்டமிட்டிருந்தனர் எனக் கூறப்படுகின்றது. மருதங்கேனி பிரதேசத்தில் ஒருவரை கொலை செய்வதற்காக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கிளைமோர் குண்டு ஒன்றும் இவர்களிடம் இருந்துள்ளது.
விடுதலைப்புலிகள் மீள எழுவார்கள் என புலனாய்வுப் பிரிவு மட்டுமன்றி நாமும் தொடர்ந்து கூறி வருகிறோம். தற்போது நடைபெறும் சம்பவங்களைப் பார்க்கும்போது நாட்டின் தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இதனிடையே வடக்கிலிருந்து இராணுவத்தை அகற்றுமாறு வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் வலியுறுத்தி வருகின்றார். இந் நடவடிக்கையை ஒருபோதும் முன்னெடுக்கக்கூடாது” என்றார்.
இதேவேளை, சமஷ்டி தீர்வைக் கோரிவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனுக்கே விடுதலைப்புலிகளிடம் இருந்து மரண அச்சுறுத்தல் காணப்படுமாயின் விடுதலைப்புலிகளை இராணுவ ரீதியில் தோற்கடித்த முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு எத்தகைய உயிர் அச்சுறுத்தல் காணப்படும் என்றும் கேள்வியெழுப்பியுள்ளார்.